ஜூன் 21, 2009 12:00 AM
ஜூன் 21, 2009 12:00 AM
உயிர்வாழும் நுண்ணியிரிகளை உபயோகித்து பொருட்களை வடிவமைப்பது, தாவரங்கள் மற்றும் உயிரினங்களின் வாழ்வை மேம்படுத்துவது, புதிய நுண்ணுயிரிகளை உருவாக்குவது போன்றவற்றைக் குறிப்பிட்ட உபயோகங்களுக்காக பயன்படுத்தும் துறையே பயோடெக்னாலஜி துறையாகும்.
உயிரியல் மற்றும் தொழில்நுட்பத்தையும் இணைத்து செயல்படும் அறிவியலின் பிரிவே பயோடெக்னாலஜி. இதில் மரபியல், பயோகெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, இம்யூனாலஜி, வைராலஜி, வேதியியல், பொறியியல் போன்ற பல தரப்பட்ட பாடங்களையும் படிக்க வேண்டும். இதே போல மருத்துவம் மற்றும் சுகாதாரம், விவசாயம் மற்றும் விலங்கின வளர்ப்பு, பயிர்முறை, பயிரின மேலாண்மை, சுற்றுச்சூழலியல், செல் உயிரியல், மண் அறிவியல், மண் பாதுகாப்பு, பயோ ஸ்டாடிஸ்டிக்ஸ், தாவரஅறிவியல், விதை தொழில்நுட்பம் போன்ற பிரிவுகளோடு நெருங்கிய தொடர்புடையது. செல்களையும் பாக்டீரியாக்களையும் தொழில் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த பயோடெக்னாலஜி உதவுகிறது. தற்போது பயோடெக்னாலஜி நிபுணர்களுக்கான தேவை அதிகமாக உள்ளது.
பல்வேறு துறைகளுடன் தொடர்புடைய தனிப் படிப்பாக பயோடெக்னாலஜியைப் படிப்பதே சிறந்ததாகும். அளவற்ற எண்ணிக்கையில் இத் துறையில் பெருகி வரும் தரமற்ற கல்வி நிறுவனங்களில் இவற்றைப் படிப்பதை விட தரமான கல்லூரிகளில் படிப்பதே அறிவுறுத்தப்படுகிறது. முதலில் கோல்கட்டாவிலுள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் தான் பயோடெக்னாலஜி படிப்பின் அடித்தளம் அமைக்கப்பட்டது.
பயோடெக்னாஜி பட்டப்படிப்பை டில்லி பல்கலைக்கழகம் தொடங்கியது. உயிர் அறிவியலில் ஐ.ஐ.டி.,க்களுக்கு சிறப்பான பின்புலம் இல்லையென்றாலும் பொறியியல் படிப்புகளில் அவற்றின் ஆழமான அணுகுமுறை இதற்குக் கைகொடுக்கிறது. இநதிய அரசின் பயோடெக்னாலஜித் துறையின் நிதியுதவியின் காரணமாக அரசுத் துறையிலுள்ள ஐதராபாத் பல்கலைக்கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், பனாரஸ் இந்த
பல்கலைக்கழகம், புதுச்சேரி பல்கலைக்கழகம் போன்றவை இதில் சிறப்பான நிறுவனங்களாகும். இந்தியாவிலுள்ள சில தனியார் கல்வி நிறுவனங்களும் இதில் தலைசிறந்த படிப்புகளைத் தருகின்றன. பயோடெக்னாலஜியில் உலகத்தரம் வாய்ந்த படிப்புகள் நமது நாட்டில் தரப்படுகின்றன. அவற்றை நடத்தும் குறிப்பிட்ட நிறுவனங்களில் நடை முறைப் பயிற்சி, சாப்ட் ஸ்கில்ஸ் பயிற்சி, நிர்வாகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் காப்புரி மைச் சட்ட விழிப்புணர்வுப் பயிற்சி போன்றவற்றில் இவை தனித்தன்மையுடன் திகழ்கின்றன.
பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஆய்வுப் படிப்பு என பல்வேறு படிப்புகள் இதில் உள்ளன. எனினும் எதிர்காலப் போட்டிச் சூழலை நாம் எதிர்கொள்ள இந்தப் படிப்புகள் மட்டுமே போதாது. குறைந்த பட்சம் 5 ஆண்டு காலமாவது இத் துறைப் படிப்புகளை மேற்கொள்வதே நல்ல எதிர்காலத்தைத் தரும்.
இதன் எம்.எஸ்சி., படிப்பிற்கு உயிரியல் அல்லது அது தொடர்பான பிரிவில் பட்டப்படிப்பு பயின்றவர்கள் தகுதியானவர்கள். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் நடத்தும் அகில இந்திய பொது நுழைவுத் தேர்வு எழுதித்தான் இதில் சேர முடியும். தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்தும் படிப்புகளுக்கு சில நிறுவனங்கள் நுழைவுத் தேர்வை நடத்துகின்றன.
இதில் ஆய்வுப் படிப்புகளை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு கேட் தேர்வு அல்லது யூ.ஜி.சி., ஜே.ஆர்.எப்., அல்லது சி.எஸ்.ஐ.ஆர்., தேர்வு அல்லது ஜ.சி.எம்.ஆர்., மதிப்பெண் தேவைப்படும். ஐ.ஐ.எஸ்.சி., பி.எஸ்சி., முடித்தவருக்கான 5 ஆண்டு ஒருங்கிணைந்த பயோடெக்னாலஜி படிப்பைத் தருகிறது.
இதில் எம்.பி.ஏ., படிப்பும் தரப்படுகிறது. உயிரியல் அல்லது அது தொடர்பான படிப்புகளில் பட்டப் படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பயோடெக் நிறுவனத்துடன் தொடர்புடைய நிர்வாகவியல் கொள்கைகளை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் இது போன்ற படிப்பை என்.எம்.ஐ. எம்.எஸ்., புனே பல்கலைக்கழகம் ஆகியவை நடத்துகின்றன.
இப் படிப்பைப் படிக்க விரும்பும் நிறுவனத்தின் நற்பெயர், ஆசிரியர் குழு, உள்கட்டமைப்பு வசதிகள், பாடங்களைப் பயிற்று விக்கும் முறை, தொழிலகங்களுடன் உள்ள உறவு போன்றவற்றைப் பொறுத்தே படிக்கவிருக்கும் கல்வி நிறுவனத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் போன்ற பாடங்களை நன்றாகப் படித்து இதன் நுழைவுத் தேர்வுக்குத் தயாராக வேண்டும். இவற்றிலிருந்தும் லாஜிகல் ரீசனிங் பிரிவிலிருந்தும் ஆழமான கேள்விகள் தேர்வில் இடம் பெறுகின்றன. பழைய தேர்வுகளின் கேள்விகளைப் பார்த்து பயிற்சியை மேற்கொள்வதும் முக்கியம்.
இத்துறையில் ஈடுபட விரும்புபவருக்கு துறை தொடர்பான அறிவு, ஆய்வுத் திறன், எழுதும் திறன், சாப்ட் ஸ்கில்ஸ் போன்றவை கட்டாயம் இருக்க வேண்டும். இத்துறைப் படிப்பை முடிப்பவருக்கு பயோடெக்னாலஜி மற்றும் விவசாய பயோடெக்னாலஜி பிரிவுகளே அதிகப் பணி வாய்ப்புகளைத் தருகின்றன. இவற்றுள் மெடிக்கல் பயோடெக்னாலஜி துறையே 70 சதவீத வருமானத்தைத் தருவதாக உள்ளது.
டாக்டர் ரெட்டிஸ் லேப், ரான்பாக்சி, வொக்கார்ட், சாந்தா பயோடெக், பாரத் பயோடெக் போன்றவை துறையின் முன்னணி வேலை வாய்ப்பு நிறுவனங்களாகும். பயோகான் இந்தியா நிறுவனமும் வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. அவெஸ்தா ஜென் நிறுவனமும் அதிக வாய்ப்புகளைத் தரும் நிறுவனமாகும். பயோ பியூவல், சர்க்கரை ஆலை, டிஸ்டிலரிஸ், இன்டஸ்ட்ரியல் பயோடெக்னாலஜி பிரிவுகளிலும் இதற்கான வாய்ப்புகள் சிறப்பாக உள்ளன. வெளிநாட்டு கல்வி நிறுவனங்களிலும் இதைப் படிக்கலாம்.