ஜூன் 21, 2009 12:00 AM
ஜூன் 21, 2009 12:00 AM
சமீபத்தில் இந்தியாவின் 151 பொறியியல் கல்லூரிகளில் பயிலும் ஐ.ஐ.டி. உள்ளிட்ட 4 ஆயிரத்து 532 இறுதியாண்டு பட்டப்படிப்பு மாணவர்களிடம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இவர்களில் 43 சதவீதத்தினர் ஐ.டி., துறையிலேயே தாங்கள் பணி புரிய விரும்புவதாக தெரிவித்தனர்.
உலகெங்கும் பொருளாதாரப் பிரச்னைகள் தலைவிரித்தாடி ஐ.டி., துறை பின்னடைவைச் சந்தித்திருக்கும் நிலையிலும் கூட பெரும்பாலான மாணவர்கள் ஐ.டி., துறையிலேயே பணியாற்ற விரும்புவதாகக் கூறியிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த ஆய்வில் வெளியான பிற சுவாரஸ்யமான தகவல்கள் இதோ...
* ஐ.டி., துறை மீதான மோகம் மாணவர்களிடையே சற்றும் குறையவில்லை. இத் துறையில் பன்னாட்டு நிறுவன கலாசாரம், திறனாளர்களுடன் இணைந்து பணி புரியும் வாய்ப்பு, மிகத் துல்லியமான தகவல் தொழில் நுட்பங்களுடன் தொடர்பு, பயிற்சி மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் போன்ற காரணங்களுக்காக விரும்புகிறார்கள்.
* இன்ஜினியரிங் மாணவர்கள் விரும்பும் பிற துறைகளாக ஆட்டோமொபைல், டெலிகாம், எண்ணெய் மற்றும் எரிவாயு, உள்கட்டமைப்பு, ரியல் எஸ்டேட், பவர் போன்றவை உள்ளன.
* உலகளாவிய நிறுவனங்களில் அதிக வரவு செலவைக் கொண்டவைகளாக ஐ.டி., நிறுவனங்களே இருப்பதும் இந்த மவுசுக்கான காரணமாக அறியப்பட்டுள்ளது.
* இந்த ஆய்வு இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடத்தப்பட்டன. கடந்த ஆண்டைவிட 7 சதவீத அளவு மாணவர்கள் ஐ.டி., துறையை தேர்ந்தெடுத்திருப்பது குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
* உலகப் பொருளாதார தேக்க நிலையினால் மேனேஜ்மென்ட் கன்சல்டன்சி, நிதித்துறை, ஐ.டி., துறையைத் தேர்ந்தெடுத்திருப்பதில் சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
* பொருளாதாரப் பின்னடைவினால் ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோமொபைல் ஆன்சிலரி துறைகள் எவ்வித பாதிப்பையும் அடையவில்லை.
* படிப்பின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் மாணவர்கள் தொழில் நுட்ப ரீதியாக திறன் வாய்ந்த நிறுவனங்களில் பணி புரிவதையே விரும்புகின்றனர். நவீன மற்றும் கலை நுட்பத்திற்கு இணையான தொழில்நுட்பம் கொண்ட வளரும் நிறுவனங்களில் பணி புரிவதன் மூலமாக சிறந்த பயிற்சியையும் பாடங்களையும் பெற முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
* நல்ல எதிர்காலம் என்ற கோணத்தில் 12 சதவீதம் பேர் நேனோ டெக்னாலஜிக்கும் 11 சதவீதம் பேர் ஐ.டி., துறைக்கும் 9 சதவீதம் பேர் மின் துறைக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்புடைய சக்தித் துறைக்கு 8 சதவீதம் பேரும் டெலிகாம் துறைக்கு 6 சதவீதத்தினரும் தங்களது விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர்.
* இன்றைய இளம் பொறியியல் மாணவர்கள் தங்களது முதல் பணியிலிருந்து தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர். போட்டிச் சூழல் மிக்க எதிர்காலக் களத்தில் நிலைத்து நிற்க தொழில் நுட்பத்திறன் மிக்க நிறுவனங்களில் பணிபுரிவதே நல்ல வழி என்றும் அவர்கள் நினைக்கின்றனர்.
* 2010ல் படிப்பை முடிக்க விரும்புபவர்களில் 50 சதவீதம் பேர் தங்களுக்குக் கிடைக்கும் பணியிலிருந்து 8 ஆண்டுகளுக்குள் மாறிவிட வேண்டும் என்று நினைக் கின்றனர். இதன் காரணமாக உயர் கல்வி படிக்கவிருப்பதாகவும் 51 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
* பணி எதிர்காலம், நல்ல ஊதியம், பதவி, வேலையில் திருப்தி போன்ற காரணங்களுக்காக பதவி மாற்றங்களை இவர்கள் நாடுகின்றனர்
* உயர் கல்வியைப் படிக்க விரும்புபவர்களில் 69 சதவீதத்தினர் எம்.பி.ஏ., படிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.