/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
வங்கி நேர்முகத் தேர்வு செல்பவரா நீங்கள்?
/
வங்கி நேர்முகத் தேர்வு செல்பவரா நீங்கள்?
ஜூன் 27, 2009 12:00 AM
ஜூன் 27, 2009 12:00 AM
கடந்த சில நாட்களாக சில பொதுத் துறை வங்கிகள் தங்களது கிளரிகல் பணிக்கான நேர்முகத் தேர்வை நடத்தி வருகின்றன.
போட்டித் தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருப்பவர்கள் இதற்காகக் கடுமையாகத் தயாராகி வருகின்றனர். நேர்முகத் தேர்வுக்கு எப்படித் தயாராகி வருகிறீர்கள் என்பதை கொஞ்சம் யோசிக்கலாமா?
வங்கி நேர்முகத் தேர்வில் என்ன பரிசோதிக்கப்படுகிறது?
-வங்கிப் பணிக்கு நீங்கள் பொருத்தமானவரா?
-வங்கிப் பணி தொடர்பாக அதைப் பற்றி, அதில் நுழைய விரும்பும் நீங்கள், தெரிந்து கொள்வதில் ஆர்வமுள்ளவராக இருக்கிறீர்களா?
-உங்களது அடிப்படை ஆர்வம் எப்படி?
-பொது அறிவு மற்றும் உங்களைச் சுற்றி நடப்பதை அறிந்து கொள்பவரா நீங்கள்?
-படித்த படிப்பு தொடர்பாக உங்களால் எப்படி தகவல்களை நினைவு படுத்திக் கொள்ள முடிகிறது?
இவை தான் நேர்முகத் தேர்வுகளில் கேட்கப்படுகிறது.
வங்கிப் பணிக்கு நீங்கள் பொருத்தமானவரா என்பது எப்படி அறியப்படுகிறது? வங்கிப் பணிகள் மிகுந்த வேகமாகவும் துல்லியமாகவும் செயல் புரியும் தேவையைக் கொண்டுள்ளன. இது உங்களிடம் உள்ளதா? இதை விட முக்கியமானது என்னவென்றால் வங்கிப் பணி என்றாலே அதில் பணம் சம்பந்தப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் நேர்மையானவராக இருப்பது முக்கியம். இவை அறியப்படுகின்றன.
வங்கிகள் தொடர்பாக உங்களது விழிப்புணர்வு எப்படி இருக்கிறது? இந்திய வங்கித் துறை எப்படி இருக்கிறது? வங்கிகளின் அடிப்படை என்ன? எந்த வங்கியில் பணி புரிய விரும்புகிறீர்களோ அதன் முக்கியமான கடன் திட்டங்கள் என்ன மற்றும் டெபாசிட் திட்டங்கள் என்ன? அதன் தலைமையகம் எங்குள்ளது? எத்தனை கிளைகள் உள்ளன? எத்தனை ஏ.டி.எம்., உள்ளன? அந்த வங்கி குறித்து சமீபத்திய செய்திகள் என்ன? லாபம் என்ன? இவற்றைக் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும்.
பொது அறிவு என்பது அடிப்படையில் இந்தியா தொடர்பான கேள்விகள், தமிழ்நாடு குறித்த கேள்விகள் மற்றும் உங்களது சொந்த ஊர் எதுவோ அதைப் பற்றிய கேள்விகள் மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும் அன்று என்ன முக்கியமான நாள் என்பது குறித்த தகவல்கள் இதில் இடம் பெறுகின்றன.
உங்களது பட்டப்படிப்பில் நீங்கள் படித்த பாடத்திலிருந்து கேள்விகள் அடுத்ததாக இடம் பெறுகின்றன. அதிலும் உங்களது படிப்பில் எந்தப் பாடம் உங்களுக்கு மிகவும் பிடித்தது என்ற கேள்வி எழுப்பப்பட்டு அதிலிருந்து கேள்விகள் அதிகமாக இடம் பெறலாம். படிப்பு முடித்து பல ஆண்டுகள் ஆகியிருப்பவர் என்றாலும் அடிப்படை அம்சங்களை அறிந்து கொண்டு செல்வதே அறிவுறுத்தப்படுகிறது.
இது தவிர நேர்முகத் தேர்வு அன்று செய்தித்தாள்களில் இடம் பெற்றுள்ள முக்கியச் செய்திகளிலிருந்தும் கேள்விகள் கேட்கப்படலாம். அதை அறிந்து கொண்டு அதன் பின்னணியை அறிந்து கொண்டால் இதற்கு பதிலளிப்பது சுலபம்.
நேர்முகத் தேர்வு என்றால் கசப்பாக உணருபவர்கள் கூட இங்கே கூறப்பட்டுள்ள ஆலோசனைகளை சரியாக பின்பற்றினால் வெற்றி பெறலாம்.