ஜூலை 05, 2009 12:00 AM
ஜூலை 05, 2009 12:00 AM
இந்தியக் கலாசாரத்தின் முக்கிய அங்கமாக நாட்டியக் கலையே திகழ்கிறது. நாட்டியத்தில் தொல்லியல், நாட்டுப்புறம் என பிரிவுகள் உள்ளன. இந்தியாவின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு நாட்டியப் பிரிவு புகழ் பெற்றுத் திகழ்கிறது.
நாட்டியத்தில் பகுதி வாரியிலான நடனங்களும் பண்டைய காலம் முதல் இன்று வரை தொடரும் கலாசார நடனங்களும் சர்வதேச அளவில் புகழ் பெற்றவையாக விளங்குகின்றன. தமிழ்நாட்டின் பரத நாட்டியம், ஒரிசாவின் ஒடிசி, கேரளாவின் கதகளி, மோகினி ஆட்டம் மற்றும் ஆந்திராவின் குச்சிப்புடி, ஜெய்ப்பூர் மற்றும் லக்னோவின் கதக், மணிப்பூரின் மணிப்புரி போன்றவை மிகச் சிறந்த மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நடன வகைகளாக திகழ்கின்றன. இவை தவிர்த்து பல்வேறு செமி கிளாசிகல் நடன வகைகளும் நாடகம், வீரதீர கலைப் பிரிவுகளும் நடனத் துறையில் உள்ளன.
முழு நேர நடனத் துறையில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற கலைஞர்கள் உள்ளனர். ஆனால் துறை மீது அபார ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடைய சிலரால் மட்டுமே இந்த அங்கீகாரத்தைப் பெற முடிந்துள்ளது. நடனத்துறையில் ஈடுபடுவதற்கான அடிப்படைப் பயிற்சிகளை 6 வயதுக்கு முன்னரே ஏற்படுத்துவது நல்ல பலன் தருவதாக இருப்பதாக அறியப்படுகிறது.
துறை மீது ஈடுபாடு கொண்டிருந்தால் மட்டுமே இத் துறையில் நிலை பெற முடியும். குறைந்த பட்சம் பிளஸ் 2 நிலையிலான கல்வித் தகுதியுடன் முழு நேரத் தீவிரப் பயிற்சியையும் மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறது. இத்துறையில் கலைஞர், ஆசிரியர், நடன அமைப்பு என்று 3 பிரிவுகளில் ஒருவர் பணி புரியலாம்.
நடன அமைப்பு - கொரியோகிராபி
நடனங்களை புதிதாக வடிவமைப்பது, நாட்டிய நிகழ்ச்சியின் படிப்படியான நிலைகளுக்கேற்ப குழுக்களாகப் பிரித்து நடனமாடச் செய்வது போன்ற பணிகள் இதில் உள்ளன. சிறப்பான கற்பனை வளம், இசையை நடனமாக மாற்றும் திறமை உடையவர்கள் இதை மேற்கொள்ளலாம். திரைப்படங்கள், நேரடி நடனங்கள், தொலைக்காட்சி, வீடீயோ ஆல்பம் என இன்று இத்துறையில் பல பணிகளில் ஆர்வமுடையவர்கள் ஈடுபடுகின்றனர்.
நேரடி நடன நிகழ்ச்சிகள், ‘டிவி’ நடனப் போட்டிகள் என இப் பிரிவின் திறனாளர்களுக்கான வாய்ப்புகள் உள்ளன. டில்லியிலுள்ள சங்கீத அகாடமி மற்றும் பெங்களூருவிலுள்ள நாட்டியா இன்ஸ்டிடியூட் ஆப் கதக் அண்ட் கொரியோகிராபி ஆகியவை 3 ஆண்டு கொரியோகிராபி பட்டப்படிப்புகளைத் தருகின்றன.
பயிற்சியாளர்
நடனம் பற்றிய நுணுக்கங்களை அறிவுபூர்வமாகவும் அனுபவபூர்வமாகவும் அறிந்து பயிற்றுவிக்கும் பொறுமையைப் பெற்றவர் இதைத் தேர்வு செய்யலாம். இதில் முறையான படிப்பை முடிப்பவருக்கு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி மையங்களில் வாய்ப்புகள் கிடைக்கின்றன.
கலைஞர்
கவர்ச்சிகரமான முகவெட்டு, உணர்வுகளைப் பிரதிபலிக்கும் திறன், கூச்சமின்றி மேடைகளில் பங்கேற்கும் குணம் பெற்றவர்கள் நடனக் கலைஞராகப் பரிமளிக்க மிகப் பொருத்தமானவர்கள். இதில் திறம்பட உருவாக சிறப்பான பயிற்சி தேவை. ரசிகர்களின் ரசனையை நன்றாகப் புரிந்து கொள்வது இதற்கு மிக அவசியம். இவர்கள் பொதுவாக பல இடங்களுக்குப் பயணம் செய்து புகழ் பெறுகின்றனர். ஒரு குழுவாக இவர்கள் செயல்படுகின்றனர்.
தேவையான பயிற்சி?
பள்ளிப்படிப்புடன் சேர்த்து 10 வயதுக்குள் இத்துறை தொடர்பான பயிற்சியைத் தொடங்குவது மிக அவசியம். நாட்டியப் பயிற்சியில் அனுபவ பூர்வமான மற்றும் அறிவு பூர்வமான பயிற்சிகள் உள்ளடங்கியுள்ளது. நடனத்தின் தோற்றமும் வளர்ச்சியும் இதில் உணர்த்தப்படுகிறது. துறையின் பல்வேறு நாட்டியப் பயிற்சிப் பள்ளிகளும் நடனத்தின் நுணுக்கங்களைக் கற்றுத் தருகின்றன.
நடனப் பயிற்சி மையங்கள் இன்று பெருகி வருகின்றன. சென்னை போன்ற பெரு நகரங்களில் இவை அதிகமாக உள்ளன. சென்னையிலுள்ள திருவான்மியூரிலுள்ள கலாசேத்திரா நடத்தும் ருக்மணி தேவி நுண்கலைக் கல்லூரி இத்துறையின் தலையாய நிறுவனமாக அறியப்படுகிறது.
நாட்டியம் பயின்றவர்களுக்கு அகாடமிகள், கலாகேந்திராக்கள், அரசு ‘டிவி’, வானொலி, கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் சிறப் பான வரவேற்பு இருக்கிறது. சுய வேலைக்கான சிறப்பான தேர்வாக இது அமையும். தனியார் பயிற்சி மற்றும் நடன அமைப்புகளை நிறுவும் வாய்ப்புகளும் உள்ளன. திரைப்படம், ‘டிவி’ போன்றவற்றில் இன்று நடனக் கலைஞர்களுக்கும் பயிற்சியாளர்க்குமான தேவை அதிக அளவில் உளள்து. மன நிறைவோடு கூடிய வருமானத்தைத் தரும் துறை இது.
தொடக்கத்தில் அதிக வருமானத்தை எதிர்பார்க்க முடியாது என்றாலும் அனுபவமும் புகழும் வந்து சேரும் போது கணிசமான வருவாய் ஈட்ட இது மிகவும் உதவுகிறது. ஒருவர் பெறும் வருமானத்தை விட இத்துறை தரும் புகழானது நிகரற்றது. இந்த ஆண்டு முதல் புதிதாக 205 படிப்புகளை ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலை., அறிமுகப்படுத்தியுள்ளது.
டில்லியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மத்திய பல்கலைக்கழகம் ஜாமியா மிலியா இஸ்லாமியா. இந்தியாவில் அதிக அளவில் படிப்புகளை வழங்கும் பல்கலைக்கழங்களில் இதுவும் ஒன்று. தற்போது புதிதாக 205 படிப்புகளை இந்த பல்கலை., அறிமுகம் செய்துள்ளது. இளநிலை, முதுநிலை, எம்.பில்., பி.எச்டி., சான்றிதழ், டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ, அட்வான்ஸ்டு டிப்ளமோ, படிப்புகள் இதில் அடங்கும்.
இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி, மேனேஜ்மென்ட் சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், சட்டம், பிசியோதெரபி, மாஸ் கம்யூனிகேசன், கல்வி, பைன் ஆர்ட்ஸ், அப்ளைடு ஆர்ட்ஸ், சோஷியல் சயின்ஸ், நேச்சுரல் சயின்ஸ், ஆர்க்கிடெக்சர் போன்ற பல்வேறு பிரிவுகளில் புதிய படிப்புகள் வழங்கப்படும்.
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சான்றிதழ் படிப்புகளான போட்டோகிராபி, கமர்சியல் ஆர்ட், கையெழுத்துக்கலை, பெயின்டிங், மண்பாண்ட கலை போன்றவற்றில் சேரலாம். பிசியோதெரபி, சட்டம், எம்.பி.ஏ., பி.இ., பி.எட்., ஆர்க்கிடெக்சர், சமூகப்பணி, பிசினஸ் ஸ்டடிஸ்டிக்ஸ் போன்ற படிப்புகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இங்கு பிரெஞ்சு, ரஷ்யன், போர்ச்சுகீஸ், ஸ்பானிஷ், இத்தாலியன், அராபிக், உஷ்பெக், பாஸ்தோ, துர்கிஷ் மற்றும் பெர்சியன் போன்ற பல்வேறு மொழிகளில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இதற்கான விண்ணப்பப் படிவங்களை கல்லூரியிலோ, வெப்சைட் மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம். மாணவர்கள் குறைந்தது 45 சதவீதம் முதல் 55 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கு கட்ஆப் மதிப்பெண்கள் தேவையில்லை. அனைத்து படிப்புகளுக்கும் எழுத்துத்தேர்வும், அதைத் தொடர்ந்து நேர்முகத்தேர்வும் நடத்தப்படும்.