ஜூலை 05, 2009 12:00 AM
ஜூலை 05, 2009 12:00 AM
டிரான்ஸ்போர்டேஷன் அண்டு ஆட்டோமொபைல் டிசைன்
இந்தியாவின் போக்குவரத்து முழுமையாக தொழில்நுட்ப வளர்ச்சியை சார்ந்தே இருந்தது. நுகர்வோர் தேவை, எரிபொருள் சிக்கனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றுக்கு அதில் பெரிய அளவில் எந்த பங்கும் இல்லை. ஆனால் இந்நிலை மாறிவருகிறது.
இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப போக்குவரத்து தேவைகளும் உயரவுள்ளதால் இனி வாகன வடிவமைப்பில் இவையும் முக்கியத்துவம் பெறும். இதனால் இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்கள் பல போக்குவரத்து மற்றும் வாகன வடிவமைப்பு தொடர்பான படிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றன. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் (என்.ஐ.டி.,) ‘டிரான்ஸ்போர்டேஷன் அண்டு ஆட்டோமொபைல் டிசைன்’ என்ற இரண்டாண்டு முதுநிலை படிப்பை அறிமுகம் செய்துள்ளது.
இதில் வாகன வடிவமைப்பில் சுற்றுச்சூழல், பொருளாதாரம் போன்ற பல அடிப்படை விஷயங்கள் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது. வாகனங்கள் மட்டுமின்றி, படகுகள், பஸ் ஸ்டாப்கள், ரயில்வே ஸ்டேஷன்கள் என வாகனங்களுடன் தொடர்புடையவற்றையும் இவர்கள் வடிவமைக்கின்றனர். இந்த முதுநிலை படிப்புக்காக இத்தாலியின் மிலான் நகரில் இயங்கும் ‘டோமஸ் அகாடமி’யுடன் என்.ஐ.டி., கைகோர்த்துள்ளது. இதன் மூலமாக மாணவர்களுக்கு டோமஸ் அகாடமியின் ஸ்காலர்ஷிப்புடன் வாகன உற்பத்தி மற்றும் வடிவமைப்பில் சர்வதேச அளவிலான பார்வை கிடைக்கும்.
ஜெனரல் மோட்டார்ஸ், டாடா, மாருதி, டி.வி.எஸ்., என பல நிறுவனங்களிலும் வல்லுனர்களுக்கான தேவை உள்ளது. இதனால் இந்த படிப்பில் சேருபவர்களுக்கு வேலைவாய்ப்பில் 100 சதவீதம் உத்திரவாதம் அளிக்கிறது என்.ஐ.டி., இதில் சேர விரும்பும் மாணவர்கள் பி.இ., பி.டெக்., அல்லது பி.ஆர்க்., படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த படிப்பில் 10 இடங்கள் மட்டுமே உள்ளன.
மகாராஷ்டிரா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியும் (எம்.ஐ.டி.,) இதே போன்ற ஒரு முதுநிலை டிப்ளமோ படிப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த படிப்பை நிறைவு செய்பவர்களுக்கு வாகன தொழிற்சாலைகளில் மட்டுமின்றி எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையும் வேலைவாய்ப்புகள் உள்ளன. இதில் சேர விரும்பும் மாணவர்கள் மெக்கானிக்கல், புரடக்ஷன் அல்லது ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்கில் டிகிரி அல்லது டிப்ளமோ நிறைவு செய்திருக்க வேண்டும்.
இந்த படிப்புகளுக்கான கட்டணம் ஆண்டுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய். ஆனால் தொடக்க சம்பளமே ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் வரை கிடைக்கும் என இந்த கல்வி நிறுவனங்கள் உறுதியளிக்கின்றன.
ஏவியேஷன் மேனேஜ்மென்ட்
இந்திய விமான துறை ஆண்டுக்கு 25 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சியை சந்திக்கிறது. இதனால் இந்த துறையில் சேர இதை விட பொருத்தமான நேரம் கிடையாது என்கின்றனர் வல்லுனர்கள். பல்வேறு நிறுவனங்களும் ஏவியேஷன் மேனேஜ்மென்ட்டில் புதிய படிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றன. இந்த டிப்ளமோ படிப்புகளின் காலம் ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை இருக்கலாம்.
கிங்பிஷர் டிரைனிங் அகாடமி, ஏவியேஷன் மேனேஜ்மென்ட்டில் ஆறு மாத டிப்ளமோ படிப்பை அறிமுகம் செய்துள்ளது. ஏவியேஷன் அண்டு ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட்டில் ஒரு ஆண்டு டிப்ளமோ படிப்பையும் வழங்கி வருகிறது. மாணவர்களின் பயிற்சிக்காக ஒரு ஏர்பஸ் 320 விமானத்தின் மாதிரி இங்குள்ளது. ஆறுமாத படிப்புக்கு கட்டணமாக ஒரு லட்ச ரூபாயும், ஒரு ஆண்டு படிப்புக்கு கட்டணமாக ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
ஏர் ஹோஸ்டஸ் அகாடமி நிறுவனமும், ஒரு ஆண்டு ஏவியேஷன் அண்டு ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் டிப்ளமோ படிப்பையும், இரண்டு ஆண்டு குளோபல் மேனேஜ்மென்ட் அண்டு ஹாஸ்பிடாலிட்டி டிப்ளமோ படிப்பையும் வழங்கி வருகிறது. இந்த படிப்புகளுக்கு கட்டணமாக 1 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. கேபின் பணி, ஏவியேஷன் டெர்மினாலஜி போன்றவை குறித்து இதில் கற்றுத்தரப்படுகிறது. தகவல் தொடர்பு திறன்களை மேம்படுத்தவும் இந்த படிப்பு உதவுகிறது.
இந்த துறை வேகமாக வளர்ந்து வருவதால் வேலைவாய்ப்புகள் அதிகம். உள்நாட்டு, சர்வதேச விமானங்களிலும், விமான நிலையங்களிலும் பணிவாய்ப்புகள் உள்ளன. விர்ஜின் அட்லான்டிக், அமெரிக்கன் ஏர்லைன்ஸ், ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ, கிங்பிஷர் ஏர்லைன்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் மாணவர்களை தேர்வு செய்வதில் போட்டிபோடுகின்றன. ஓட்டல்களிலும் ‘கெஸ்ட் ரிலேஷன் எக்சிகியூட்டிவ்’, ‘பிரன்ட் ஆபீஸ் எக்சிகியூட்டிவ்’ போன்ற பணிவாய்ப்புகள் உள்ளன.
இளம் வயதிலேயே அதிகமாக சம்பாதிக்கவும், உலகை சுற்றிவரவும் இந்த துறை வாய்ப்பளிக்கிறது. உள்நாட்டு விமான நிறுவனங்களில் தொடக்கத்திலேயே 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பளமாக கிடைக்கிறது. சர்வதேச நிறுவனங்களில் 1 லட்ச ரூபாய் வரை சம்பளமாக கிடைக்கிறது.
பேஷன் மார்கெட்டிங்
உலகின் முன்னணி பேஷன் நிறுவனங்களான டாமி ஹில்பிகர், நாட்டிகா, கிறிஸ்டீன் டியோர், சேனல், லூயிஸ் உய்டன் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் கால்பதித்துள்ளன. மேலும் பல நிறுவனங்கள் இந்தியாவில் தொழில்தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றன. இதனால் பேஷன் மார்கெட்டிங் துறையில் பேஷன் மார்கெட்டிங், பிராண்ட் மேனேஜ்மென்ட் போன்ற பதவிகளில் வல்லுனர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. பேஷன் மார்கெட்டிங் வேலைவாய்ப்புகளின் புதிய உலகம். பேஷன் பாடத்திட்டங்களில் ஆர்வமும், மார்கெட்டிங்கில் நிபுணராகவும் வர விரும்புபவர்களுக்கும் பேஷன் மார்கெட்டிங் படிப்பே சரியான தீர்வு.
மாணவர்களுக்கு விற்பனை, விற்பனை மேலாண்மை, விற்பனை நுட்பம், உற்பத்தி திறன் போன்றவற்றில் பயிற்சியளிக்கப்படுகிறது. கவனத்துடன் செயல்படுதல், தொழில் பற்றிய நுட்பம், ஒரே நேரத்தில் பல்வேறு வேலைகளை செய்யும் திறன், மிக நெருக்கடியான சூழ்நிலையிலும் நேர்த்தியாக பணிபுரிவது போன்ற திறமைகளை மாணவர்கள் இத்துறையில் வளர்த்துக் கொள்ள வேண்டும். கற்பனை, மார்கெட்டிங் சூழல் நன்கு புரிந்து வைத்து செயல்படுதல் போன்ற திறன்களை பெற்றிருந்தால் மேலும் சாதிக்கலாம்.
ஆடைகளை வடிவமைப்பதில் ஸ்டைலுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. அத்துடன் வணிகத்தைப் பற்றியும் இந்த படிப்பில் கற்றுத்தரப்படுகிறது. கடந்த ஆண்டு புதிய முதுநிலை டிப்ளமோ படிப்பை டபுள்யூ.எல்.சி., கல்லூரி மற்றும் ‘பியர்ல் அகாடமி ஆப் பேஷன்’ நிறுவனமும் அறிமுகப்படுத்தியுள்ளன. இந்தியாவின் பேஷன் தொழில்நுட்ப நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் பெயர் பெற்று வருகின்றன. இதனால் பேஷன் மார்கெட்டிங் படிப்பில் உலகத்தரமிக்க பாடங்களே வழங்கப்படுகின்றன. பல்வேறு நுட்பங்களை பற்றியும், நிர்வாக திறன்கள் குறித்தும் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது. அகில இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகள் மூலம் இப்படிப்பிற்கு மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.
டபுள்யூ.எல்.சி.,யில் இளநிலை படிப்பில் சேர பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். பியர்ல் அகாடமி ஆப் பேஷனில் சேர நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான கட்டணம் 95 ஆயிரம் ரூபாய். ஆண்டுக்கு நான்கு முதல் ஆறு லட்சம் ரூபாய் வரை சம்பளமாக பெறலாம்.
நகை விற்பனை
பல தனியார் நிறுவனங்கள் நகைக்கடைகள் அமைத்துள்ளன. நகை விற்பனைப் பிரிவில் வேலைவாய்ப்பும் பெருகி வருகிறது. நகைவிற்பனை படிப்பில் தகவல் தொடர்பு திறன், வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து செயல்படுவது, விலையுயர்ந்த கற்கள் மற்றும் சந்தை நிலவரங்கள் பற்றி நன்கு அறிந்து வைத்திருப்பது போன்றவற்றில் பயிற்சி அளிக்கப்படுகிறது. நொய்டாவில் செயல்படும் ஜே.டி.டி.ஐ., நகைவிற்பனையில் ஆறு வார சான்றிதழ் படிப்பை வழங்கி வருகிறது.
இப்படிப்பில் 20 இடங்கள் உள்ளன. பொருட்களை பற்றிய அடிப்படை அறிவு, பல்வேறு விதமான நகைகள், வடிவமைப்பில் உள்ள நுட்பங்கள், எடைகளை கணக்கிடுதல், ஹால்மார்க் மற்றும் நகைகளை சோதனை செய்து அறிதல், தகவல்தொடர்பு திறன், நுகர்வோர் குறித்த ஆய்வுகள், வாடிக்கையாளர்களிடம் பழகும் முறை, பொருட்களை காட்சிக்கு வைத்தல், ஸ்டோர் மேனேஜ் மென்ட், பெர்சனாலிட்டி டெவலப்மென்ட், விலை மற்றும் விலைப் பட்டியல் தயாரித்தல் போன்றவை கற்றுத்தரப்படுகிறது. நகை விற்பனை படிப்பை விரும்பி தேர்ந்தெடுப்பவர்களுக்கும், விற்பனை பிரிவில் வல்லுனராக விரும்புபவர்களுக்கும் தகுந்தவாறு இப்படிப்பு உருவாக்கப் பட்டுள்ளது. இதில் வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து செயல்படவும் கற்றுத்தரப்படுகிறது.
மும்பையில் செயல்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஜூவல்லரியில் ஒருமாதப்படிப்பான ஆர்கனைஸ்டு ரீடெய்ல்லில் மொத்தம் 15 இடங்கள் உள்ளன. விற்பனைப்பிரிவை பொறுத்தவரை பயிற்சிபெற்றவர்கள், பயிற்சிபெறாதவர்களை விட சிறப்பாக செயல்பட முடியும். இந்த படிப்பை முடித்தவுடன் மாணவர்கள் ஸ்டோர் மேனேஜர்களாகவும், புளோர் மேனேஜர்களாகவும், உதவி விற்பனையாளராகவும் பணிபுரியலாம். நகை விற்பனை படிப்பை முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.
இன்றைய உலகில் நிபுணர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும். வாடிக்கையாளர் ரிலேசன்ஷிப் மேனேஜ்மென்ட், வாடிக்கையாளர் சேவையை தெரிந்து வைத்திருப்பது,வரவு செலவில் தெளிவு போன்றவற்றை நன்கு தெரிந்து கொண்டுள்ள விற்பனை பிரதிநிதியால் மட்டுமே அதிகளவில் விற்பனை செய்ய முடியும். செயல்முறையாக விற்பனை குறித்த பயிற்சியளிப்பதால் வாடிக்கையாளர்களின் மனநிலையை அறிய முடியும்.
பத்தாம் வகுப்பு அல்லது பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சிபெற்றவர்கள் இப்படிப்பில் சேரலாம். இதற்கான கட்டணம் 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை ஆகும்.