/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
கல்விப் புரட்சியை ஏற்படுத்தும் இக்னோவின் சமுதாயக் கல்லூரிகள்
/
கல்விப் புரட்சியை ஏற்படுத்தும் இக்னோவின் சமுதாயக் கல்லூரிகள்
கல்விப் புரட்சியை ஏற்படுத்தும் இக்னோவின் சமுதாயக் கல்லூரிகள்
கல்விப் புரட்சியை ஏற்படுத்தும் இக்னோவின் சமுதாயக் கல்லூரிகள்
ஜூலை 11, 2009 12:00 AM
ஜூலை 11, 2009 12:00 AM
நாடெங்குமுள்ள வசதி வாய்ப்பற்ற மாணவர்களுக்குக் கல்வியறிவைத் தரும் கல்விப் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில் சமுதாயக் கல்லூரிகளை இக்னோ தொடங்கவிருப்பதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வந்து கொண்டிருந்தன.
இந்த உயரிய நோக்கத்திற்கு தற்போது இக்னோ செயல் வடிவம் கொடுத்துள்ளது. அடிமட்ட நிலையிலுள்ள மக்களும் திறன் மேன்மை பெற்று பொருளீட்டும் பணிகளைப் பெற இந்த கல்லூரிகள் பெரும் பங்காற்ற இருக்கின்றன. இவை தரவுள்ள கல்வி முறையானது அர்த்தமுள்ளதாக இருக்கும் என்றும் எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்த முயற்சிக்காக நாடெங்குமுள்ள கல்வி நிறுவனங்களை முழுமையாகப் பயன்படுத்தியும் அரசு-தனியார் கூட்டு முயற்சியினாலும் வசதி வாய்ப்பற்ற மாணவர்களை முன்னேற்ற இக்னோ திட்டமிட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் இருந்தே இவை செயல்பட உள்ளன. அர்த்தமற்ற கல்வி முறையிலிருந்து விலகி ஒகேஷனல் கல்வி முறைக்கே சமுதாயக் கல்லூரிகளில் முக்கியத்துவம் தரப்படவுள்ளது.
இந்த கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு அசோஷியேட் பட்டம் தரப்படும். இதன் மூலமாக இவர்கள் பிற கல்லூரிகளின் பட்டப்படிப்பில் லேடரல் என்ட்ரி என்னும் முறையில் இணைந்து படிப்பைத் தொடர இயலும். சமுதாயக் கல்லூரிகளைத் தொடங்க 800 விண்ணப்பங்களிலிருந்து தற்சமயம் 100 கல்லூரிகளுக்கே அனுமதி தரப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பான்மையானவை தனியார் கல்லூரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சமுதாயக் கல்லூரிகளின் அங்கீகாரம், தரக் கட்டுப்பாடு, நிர்ணயம், பரிசீலனை, சான்றிதழ் வழங்குதல், கல்விப் புலங்களை மேம்படுத்துவது போன்ற பணிகளை இந்திராகாந்தி பல்கலைக்கழகமே பார்த்துக் கொள்ளும். தேர்ந்தெடுக்கப்படும் ஒவ் வொரு கல்லூரியும் 15 கோடி ரூபாய் நிதி மூலதனத்துடன் வளாக இடம், கட்டடம், உபகரணங்கள் மற்றும் பிற வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளும்.
சமுதாயக் கல்லூரிகள் சார்ந்துள்ள பகுதிகளிலுள்ள சிறிய மற்றும் பெரிய தொழிற் சாலைகளுடனும் உடன்பாடு செய்து கொள்ளப்படவுள்ளது. கல்லூரிகளில் சேரும் மாணவர்களைப் பயிற்றுவிக்கும் நோக்கில் ஒவ்வொரு கல்லூரிக்கும் 15 ஆசிரியர்கள்பணி நியமினம் செய்யப்படவுள்ளனர்.
பயிற்றுவிக்கும் மற்றும் பயிற்சி பெறும் திறன்களை மேம்படுத்த தகவல் தொழில் நுட்பம், தனிநபர் உறவு, கவுன்சிலிங் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்படும் என்று தெரிகிறது. இந்தியாவின் பணியாளர்களில் 5 சதவீதத்தினரே ஒகேஷனல் பயிற்சி பெற்றவர்கள் என்பதால் இக் கல்வி முறை கல்வியை அடிமட்டம் வரை கொண்டு செல்லும் புதிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.
இடம் சார்ந்த மற்றும் தொழில் சார்ந்த கல்வி முறையை சமுதாயக் கல்லூரிகள் நிச்சயம் உருவாக்கும் என்று இக்னோ தரப்பில் கூறப்படுகிறது. இக் கல்லூரிகள் விரைவிலேயே விரிவாக்கம் பெறும் என்பதோடு தரம் குறித்தும் அக்கறை செலுத்தப்படும் என்றும் Learning By Doing என்னும் புதிய முறை கையாளப்படும் என்றும் செய்திகள் கூறுகின்றன. விருப்பத்திற்கும் யதார்த்தத்திற்கும் இடையிலுள்ள இடைவெளியை நிரப்பிடும் புதிய மாற்றத்தகு சக்தியாக சமுதாயக் கல்லூரிகள் திகழும் என்று கல்வியாளர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.