/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
மருந்துகளை கண்காணிக்க பார்மகோ விஜிலன்ஸ்
/
மருந்துகளை கண்காணிக்க பார்மகோ விஜிலன்ஸ்
ஆக 01, 2009 12:00 AM
ஆக 01, 2009 12:00 AM
இந்தியா மருத்துவ பரிசோதனைகளின் மையமாக வளர்ச்சிபெற்று வருகிறது. இருப்பினும் மருந்துப் பொருட்கள் உற்பத்தி செய்தல், வினியோகம், பயன்படுத்துதல் போன்றவற்றில் பல்வேறு பிரச்னைகள் இருந்து கொண்டிருக்கின்றன. பார்மகோ விஜிலன்ஸ் படிப்பு மருந்து பொருட்களின் தரத்தை கண்டறிந்து பாதுகாப்பான முறையில் மருந்துகளை பயன்படுத்துவதை முன்னிலைப்படுத்துகிறது.
இப்படிப்பில் ‘தி கிளினிக்கல் இன்ஸ்டிடியூட் ஆப் ரிசர்ச்’ நிறுவனம் ஒரு ஆண்டு முதுகலை டிப்ளமோ படிப்பை வழங்குகிறது. பார்மகோ விஜிலன்ஸ் படிப்பின் அடிப்படை தத்துவம், தொழிற்துறையில் பார்மகோ விஜிலன்சை பயன்படுத்துதல், பார்மகோ விஜிலன்ஸ் தகவல்களை மேலாண்மை செய்தல், பார்மகோ எபிடமோலாஜி போன்றவற்றை பற்றி இதில் கற்றுத்தரப்படுகிறது.
எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும் மருந்துகள் விற்பனை செய்வதை கண்டறியும் அளவிற்கு மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதும், நுகர்வோர் தரமான மருந்துப்பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்பதும் இதன் குறிக்கோள். இந்த ஒரு ஆண்டு படிப்பிற்கான கட்டணம் 1 லட்சத்து 30 ஆயிரம். சைமோஜன் கல்லூரியில் பார்மகோ விஜிலன்ஸ் மற்றும் பார்மகோஎபிடமோலஜி படிப்புகள் சிறந்த முறையில் கற்றுத்தரப்படுகின்றன. பார்மகோவிஜிலன்ஸ் துறையில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை செயல்முறைப்பயிற்சி மூலம் கற்றுத்தருவதே இதன் நோக்கம் ஆகும்.
பார்மகோ விஜிலன்ஸ் மற்றும் பார்மகோ எபிடோமாலஜி 16 வாரங்களில் கற்றுத்தரப்படும் சான்றிதழ் படிப்பு. பணிபுரிவோரும், முழு நேரக்கல்லூரியில் படிப்போரும் பயன்பெறும் வகையில் இதன் வகுப்புகள் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் 30 மாணவர்கள் மட்டுமே இடம்பெறுவதால் ஒவ்வொரு மாணவர் மீதும் தனிக்கவனம் செலுத்தப்படுகிறது.
இப்படிப்பு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை புது டில்லியிலும், ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை மும்பையிலும் நடத்தப்படுகிறது. பணிபுரிவோருக்கு இதற்கான கட்டணம் 85 ஆயிரம் ரூபாய் வரையிலும், பட்ட மேற்படிப்பு முடித்த மாணவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் வசூலிக்கப்படுகிறது. சர்வதேச அளவில் சிறந்த ஆசிரியர்களை கொண்டும், தேசிய அளவில் பார்மகோ விஜிலன்ஸ் துறையில் சிறந்த அனுபவமுள்ளவர்களைக் கொண்டும் கற்றுத்தரப் படுகிறது. டாக்டர்கள், பார்மசி மற்றும் பயோசயின்ஸ் பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள், ஐ.டி., துறையை சேர்ந்தவர்கள் இப்படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கலாம்.
பார்மகோ விஜிலன்ஸ் துறை இந்தியாவில் தற்போதுதான் வளர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு அதிகளவில் மருந்துகளை விற்பனை செய்யும் மருந்து நிறுவனங்கள், ஒழுங்குமுறை மற்றும் தரக்கட்டுப்பாடு போன்றவற்றை நிர்ணயம் செய்ய வளர்ந்த நாடுகளைப் பார்த்து செயல்பட வேண்டியுள்ளது. இப்படிப்பு இந்த குறைகளை போக்கும் என நம்பப்படுகிறது.
இத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. பல்வேறு மருந்து பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் இத்துறையை சேர்ந்தவர்கள் பணியில் சேரலாம். இதற்கான கட்டணம் 50 ஆயிரம் முதல் லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை ஆகும். இப்படிப்பை முடித்தவர்கள் வருடத்திற்கு 3 லட்சம் முதல் 8 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறலாம்.