ஆக 01, 2009 12:00 AM
ஆக 01, 2009 12:00 AM
பளிச்சிடும் வெள்ளை சீருடையில் மிளிரும் நர்ஸ்களின் சேவை மிகுந்த மரியாதைக்கும், போற்றுதற்குமுரிய உன்னதமான பணி. வயதானவர்கள், நோயாளிகள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு அவர்கள் கருணை உள்ளம் கொண்ட தேவதைகளாக காட்சியளிக்கின்றனர். நர்ஸ்கள் செய்யும் சிறு உதவிகளுக்கு கூட நோயாளிகள் செலுத்தும் நன்றி, அவர்களுக்கு மனநிறைவை அளிக்கிறது.
நூறு வருடங்களுக்கு முன் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார், “நர்ஸ்கள் மருந்துகளை நிர்வகிப்பவர்களாகவும், சிறு காயங்களுக்கு கட்டு போடுபவர்களாகவும் மட்டுமே இருந்தனர். ” என்றார்.
நாளடைவில் நர்ஸ்களின் பணி மருத்துவர்களுக்கு அதிகளவில் தேவைப்பட்டது. அதிக அளவு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களின் வரவால் நர்ஸ்களின் தேவையும் அதிகரித்தது. நோயாளிகளை மனதளவிலும், உடலளவிலும் தேற்றுவதில் நர்ஸ்களின் பணி இன்றியமையாதது. இது தவிர, நோய் வராமல் தடுக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தனி மனிதனுக்கும், குடும்பத்தினருக்கும், சமூகத்துக்கும் அறிவுரை வழங்குவதும் நர்ஸ்களின் பணிகளில் சில.
நகரமயமாதல் அதிகரித்து வந்ததாலும், கூட்டுக்குடும்ப முறையின் வீழ்ச்சி காரணமாகவும் நர்ஸ்களின் முக்கியத்துவம் அதிகரித்தது. மருத்துவ உபகரணங்களை கையாளுதல், நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை சரியான நேரத்தில் சரியாக வழங்குதல் போன்ற பணிகளை நர்ஸ்கள் செய்கின்றனர்.
மருத்துவர்கள் தரும் ஆலோசனைகளை கேட்டு அதன்படி நோயாளிகளுக்கு மருத்துவ உதவிகளை செய்கின்றனர். நோயாளிகள் உடல்நிலை குறித்து அவ்வப்போது மருத்துவர்களுக்கு தெரிவிக்கின்றனர். நர்ஸாக பணியாற்ற ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நர்ஸ் கல்லூரியில் டிப்ளமோ அல்லது நர்சிங்கில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், நர்ஸாக பணியாற்ற பதிவு செய்திருக்க வேண்டும். படிப்பை முடித்தவுடன் மருத்துவர்களும், நர்ஸ்களும் நோயாளிகளுக்கு உண்மையாகவும், தொண்டுள்ளத் தோடும் சேவையாற்றுவது என உறுதிமொழி எடுத்துக்கொள்கின்றனர். இந்தியன் நர்சிங் கவுன்சில் மூலம் நர்சிங் பணி ஒழுங்குமுறைப்படுத்தப்படுகிறது.
1947ம் ஆண்டு இந்திய நர்சிங் கவுன்சில் சட்டப்படி இந்திய நர்சிங் கவுன்சில் ஒரு சட்டப்பூர்வமான அமைப்பாக தொடங்கப்பட்டது. நர்சிங் படிப்பிற்குரிய பாடத்திட்டங்கள் இந்த கவுன்சிலே தீர்மானிக்கிறது. தற்போது, நம்நாட்டில் 1000க்கும் மேற்பட்ட நர்சிங் கல்லூரிகள் உள்ளன.துணை நர்சிங் கல்லூரிகள் 300க்கும் மேல் 60க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் நர்சிங் துறையில் முதுகலைப் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.
சராசரியாக 30 ஆயிரம் நர்ஸ்களும், 15 ஆயிரம் துணை நர்ஸ்களும் ஒவ்வொரு ஆண்டும் நர்சிங் படிப்பில் தேர்ச்சி பெறுகின்றனர். பல்வேறு மாநிலங்களில் நர்சிங் கவுன்சிலில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட நர்ஸ்களும், ஐந்தரை லட்சம் துணை நர்ஸ்களும் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். நைட்டிங்கேல் அம்மையாரை முன்மாதிரியாகக் கொண்டு நர்ஸ் பணியில் உள்ளவர்கள் சிறப்பான சேவை செய்து வருகின்றனர்.