ஆக 29, 2009 12:00 AM
ஆக 29, 2009 12:00 AM
நீங்கள் இனிமையாகப் பேசும் திறமையுள்ளவரா? எவ்வளவு இறுக்கமான சூழ்நிலையிலும் உங்களது சாதுர்யமான பேச்சின் மூலமாக சுமுகமான நிலையைக் கொண்டு வரும் திறமை பெற்றவரா? அப்படியானால் பப்ளிக் ரிலேஷன்ஸ் துறையானது உங்களது இயற்கையான எதிர்காலமாக அமையலாம். இன்றைய நிலையில் சர்வதேச வணிகச் சந்தையில் ஒவ்வொரு நிறுவனமும் தங்களது தயாரிப்பைப் பற்றிய தகவல்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதில் கடுமையாகப் போட்டியிடுகின்றன. இந்தத் தகவல் பரிமாற்றத்திற்கு வலுவான மற்றும் வெற்றிகரமான பரிமாற்ற முயற்சிகளும் இவை தொடர்புடைய நிபுணர்களுக்கான தேவைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இதனாலேயே பி.ஆர்., தேவைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இத்துறையும் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. ஒரு நிறுவனம் தயாரிக்கும் பொருள் அல்லது அளிக்கும் சேவை குறித்த அடிப்படைகளை வல்லுனர்களின் வாயிலாக பொது மக்களிடம் நட்புடன் தெரிவிப்பதையே பி.ஆர்., எனக் கூறுகிறார்கள்.
அடிப்படையில் பொதுமக்களிடம் தகவல் பரிமாறுவதையே இலக்காகக் கொண்ட பி.ஆர்., துறையினர் தங்களது முயற்சிகளுக்காக மீடியா, சமூகம், வாடிக்கையாளர், நுகர்வோர், தொழிலகங்கள், அரசியல் கட்சிகள், விருப்பக் குழுக்கள், முதலீட்டாளர்கள் போன்றவர்களுடன் தொடர்ந்து உறவு வைத்துக் கொள்கிறார்கள். பல்வேறு பத்திரிகைச் செய்திகள், இன்-ஹவுஸ் பத்திரிகைகள், பத்திரிகையாளர் கூட்டம் போன்றவற்றின் மூலமாக தங்களது நிறுவனத்தின் சாதனைகளை வெளியுலகிற்கு எடுத்துச்
செல்கின்றனர்.
அதேபோல தங்களது நிறுவனம் குறித்த சந்தேகங்களை எதிர்நோக்கி விளக்குவதுடன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு, பிரச்னைகளைத் தீர்ப்பது, நம்பிக்கையை உருவாக்குவது போன்ற பணிகளிலும் பி.ஆர்., துறையினரே ஈடுபடுகின்றனர்.
தகுதிகளும் படிப்புகளும்
மாஸ்கம்யூனிகேஷன் படிப்புகளின் ஒரு பகுதியாக பி.ஆர்., படிப்புகள் இளநிலை மற்றும் பட்ட மேற்படிப்புகளாக தரப்படுகின்றன. பொதுவாக பி.ஆர்., படிப்புடன் விளம்பரமும் ஒரே படிப்பாகத் தரப்படுகிறது. இளநிலை பட்டப்படிப்பில் சமூக அறிவியல் பிரிவில் அல்லது கலைப் பிரிவில் படித்தவர்கள் இதைப் படிப்பதன் மூலமாக தங்களைச் செறிவூட்டிக் கொள்ள முடியும். சிறந்த ஊக்கசக்தி, தர்க்க ரீதியான அறிவு கொண்டவர்களுக்கு பி.ஆர்., துறை சிறந்த தேர்வாக இருக்கும் என கல்வியாளர்கள் கூறுகின்றனர். பி.ஆர்., படிப்புகளில் கம்யூனிகேஷன், மார்க்கெட்டிங், அட்வர்டைசிங், ரிசர்ச் மெதட், மீடியா டெக்னிக், மீடியா பிளானிங், வசனம் எழுதுவது, எடிட்டிங், நியூஸ் எடிட்டிங் போன்ற பிரிவுகளில் பாடப் பகுதிகள் இருக்கின்றன. ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திலேயே நேரடியாகத் தரப்படும் பிராக்டிகல் பயிற்சிகளும் இத்துறையில் தரப்படுகிறது.
வாய்ப்புகள்
இத்துறையில் படிப்பு முடிப்பவர்களுக்கு பல பணி வாய்ப்புகள் உள்ளன. இவர்களுக்கு பொதுத் துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், ஓட்டல்கள், மருத்துவமனைகள், வங்கிகள், டூரிசம் நிறுவனங்கள், கன்சல்டன்சி நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களில் நல்ல வேலைகள் கிடைக்கின்றன. வழக்கமான எண்ணங்களில் இருந்து விடுபட்டு புதுமையாகச் சிந்திக்கும் திறன் பெற்றவருக்கு இத்துறை சிறப்பான தேர்வாக அமைகிறது.
Event Planning, Proof Reading
போன்றவற்றில் முதுநிலை ஊழியர்களுக்கும் துணைத் தலைவருக்கும் உதவியாக இருக்கும் பணியாக பி.ஆர்., கோ-ஆர்டினேட்டர் என்னும் பணி உள்ளது. துறையில் பயிற்சியாளராகப் பணியைத் துவங்கிடும் ஒருவர் மாதம் ரூ.3 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை சம்பளம் பெறலாம்.திறனைப் பொறுத்து 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை கூட இதைப்பெறுபவரும் உள்ளனர். சில ஆண்டு பணி புரிந்தால் 20 ஆயிரம் வரை சம்பளம் பெற முடியும். பன்னாட்டு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் இதையும் விட அதிகமான சம்பளத்தைத் திறன் பெற்றவருக்குத் தருகின்றன.
எங்கு படிக்கலாம்?
நாட்டில் இப்படிப்பைத் தரும் தலை சிறந்த கல்வி நிறுவனங்களின் பெயர்கள் மட்டும் இங்கே தரப்படுகின்றன.
- Symbiosis institute of Mass communication, Pune
- Makhanlal Chaturvedi National University of Journalism, Bhopal
- School of Broadcasting and Communication, Mumbai
- Xavier Institute of communication Mumbai
- Indian Institute of Mass Communication, New Delhi
- Mudra Institute of communication, Ahmedabad
- Xavier College Kolkata
- Ashutosh College Kolkata
- Kolkata University
