ஆக 29, 2009 12:00 AM
ஆக 29, 2009 12:00 AM
உலகமயமாக்க சூழலில், பல மொழிகளை அறிந்து கொண்டு, மொழிபெயர்க்கும் திறமையும் பெற்றிருப்பவர்களுக்கு, பரவலான வேலைவாய்ப்புகள் உள்ளன. பல்வேறு இந்திய மொழிகளையோ, வெளிநாட்டு மொழிகளையோ தெரிந்து வைத்திருப்பது மாணவர்களின் வேலைவாய்ப்புக்கு உதவுகிறது. மொழிபெயர்ப்புத்துறை வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறையாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பல மொழி அறிந்தவர்கள் ஆசிரியர் பணியில் மட்டுமே ஈடுபட முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் இப்போது மொழிபெயர்த்தல், விளக்கவுரை தயாரித்தல் போன்று பல்வேறு பணிகளில் இவர்களால் ஈடுபட முடியும்.
வெளிநாட்டிலும் தங்களது வணிகத்தை பெருக்கிக்கொள்ள விரும்பும் நிறுவனங்கள், மொழிபெயர்ப்பாளர்களின் சேவையை பயன்படுத்திக் கொள்கின்றன. கொரியன், அரபிக் போன்ற மொழிகள் அறிந்தவர்கள் தேவை, சுற்றுலா, சுகாதாரம், கல்வி போன்ற துறைகளில் தேவைப்படுகிறது.
மொழிபெயர்ப்பாளராக சாதிக்க இரண்டு மொழிகளையாவது நன்கு தெரிந்திருக்க வேண்டும். பத்திரிகை குறிப்புகள், தயாரிப்பு குறிப்புகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளின் கடிதங்கள், சட்ட ஆவணங்களை மொழிபெயர்ப்பது எளிது.
வணிக ஒப்பந்தங்கள், ஒப்பந்த புள்ளி ஆவணங்கள், சாப்ட்வேர், இன்ஜினியரிங் துறை தொடர்பான ஆவணங்களை மொழிபெயர்ப்பது கடினம். பல்வேறு துறைகள் பற்றிய அறிவும், படைப்புத்திறனும், மொழிபெயர்ப்பாளர்களுக்கு அவசியம். விளம்பரங்கள், புத்தகங்களை மொழிபெயர்க்கும் போது, அப்படியே மொழிபெயர்க்க கூடாது. இடத்துக்கு ஏற்றவாறு அதில் மாற்றம் செய்து கொள்ளலாம்.
இன்டர்பிரட்டர் எனும் உரை எழுத்தர்களுக்கான தேவையும் உள்ளது. ‘வாய்ஸ் ஓவர்’<, டிரான்ஸ்கிரிப்ஷன், லோக்கலைசேஷன் போன்ற பணிகளையும் மொழிபெயர்ப்பு நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. தமிழகத்தில் இருப்பவர்கள் தமிழில் மொழி பெயர்க்க தெரிந்தால் ஒரு பக்கத்துக்கு 100 ரூபாய் வரை கிடைக்கும்.
மொழிபெயர்ப்பதை எளிதான விஷயமாக கருத முடியாது. அதில் பல்வேறு நுணுக்கமான விஷயங்கள் உள்ளன. இவை அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். சில மொழிகளில் மொழிபெயர்ப்பு, இன்டர்பிரட்டேஷன் பணிகள் கடினமாக அமையும்.
குறிப்பாக ஜப்பானிய மொழியில் மொழிபெயர்ப்பு பணிகடினமானது. ஓரே மாதிரியாக உச்சரிக்கப்படும் வார்த்தைகள், எழுத்து வடிவத்திலும், அர்த்தத்திலும் மாறுபடும். கல்வி, தொழில்நுட்பம், சுற்றுலா, ஹாஸ்பிடாலிட்டி துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன.
வெளிநாட்டு பயணிகளை உபசரிக்க மொழிபெயர்ப்பாளர்களை ஓட்டல்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. கோவை, திருப்பூர், திருநெல்வேலி பகுதியில் ஆடை ஏற்றுமதியில் ஈடுபட்டிருப்பவர்கள், தொலைதூர கல்வி முறையில் ஜப்பானிய மொழியை கற்று வருகின்றனர்.
திறமையும், அனுபவமும் உடையவர்களுக்கு ஒரு பக்கத்துக்கு 500 ரூபாய் வரை கிடைக்கும். இன்டர்பிரட்டர்கள் அரைநாள் பணிபுரிந்தால் 2 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் மொழிபெயர்ப்பு படிப்பாகவே உள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் அனைத்து மொழி படிப்புகளுக்கும், மொழிபெயர்ப்பு கட்டாய பாடமாக வைத்துள்ளனர்.
இப்போது மொழிபெயர்ப்பாளர்களின் தேவை அதிகரித்துள்ளது. பகுதிநேர பணியாளர்களுக்கு இந்த துறை மிகவும் ஏற்றது. இதில் தரத்துக்கே முதலிடம். தரமற்ற மொழிபெயர்ப்புகளை வாடிக்கையாளர்கள் ஏற்பதில்லை. எனினும் உங்களுக்கு மொழித்திறன் இருந்தால், மொழிபெயர்ப்பு பணி சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்தித்தரும்.
