செப் 05, 2009 12:00 AM
செப் 05, 2009 12:00 AM
புதுடில்லியில் இயங்கி வரும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் கம்யூனிகேஷன் அண்ட் இன்பர்மேஷன் ரிசோர்சஸ் என்னும் நிறுவனமும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் டெக்னாலஜி அண்ட் டெவலப்மெண்ட் என்னும் நிறுவனமும் புகழ் பெற்ற ஆய்வு மையங்களாக செயல்பட்டு வருகின்றன.
இதில் பணியாற்றும் சில கல்வியாளர்கள் இந்தியாவிலுள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் குறித்த ஆய்வு ஒன்றை சமீபத்தில் மேற்கொண்டனர். அதில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 67 மிகச் சிறந்த தொழில்நுட்ப மற்றும் இன்ஜினியரிங் கல்வி நிறுவனங்களில் மிகச் சிறந்த நிறுவனமாக பட்டியலிடப்பட்டது பெங்களூருவிலுள்ள ஐ.ஐ.எஸ்.சி., எனப்படும் இந்திய அறிவியல் நிறுவனமாகும். 2வது இடத்தை கான்பூர் ஐ.ஐ.டி., 3வது இடத்தை மும்பை ஐ.ஐ.டி., 4வது இடத்தை காரக்பூர் ஐ.ஐ.டி., 5வது இடத்தை டில்லி ஐ.ஐ.டி., ஆகியவை பிடித்துள்ளன.
6 முதல் 10 வரையிலான இடங்களை ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், சென்னை ஐ.ஐ.டி., ரூர்கி ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகம், கவுகாத்தி ஐ.ஐ.டி., ஆகியவை பிடித்துள்ளன. இந்தத் தர வரிசையானது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் வெளியீடுகள், குறிப்புகள், 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முயற்சிகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு பட்டியலிடப்பட்டன. வெளியீடுகள் மற்றும் குறிப்புகள் போன்றவற்றை வெளியிடுவதில் பெங்களூருவிலுள்ள ஐ.ஐ.எஸ்.சி., தான் முதலிடத்தில் உள்ளது.
இந்த 67 நிறுவனங்களில் கடந்த 10 ஆண்டுகளில் 75 ஆயிரத்து 166 ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தியாவிலுள்ள பிற பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் மொத்தமாக இதே காலகட்டத்தில் 59 ஆயிரத்து 685 ஆய்வு முடிவுகள் மட்டுமே வெளியாகியுள்ளன. எண்ணிக்கை அடிப்படையிலும் சரி தர அடிப்படையிலும் சரி ஐ.ஐ.எஸ்.சி., மற்றும் ஐ.ஐ.டி., க்கள் தான் பிற பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப்பல்கலைக்கழகங்கள், குறிப்பிட்ட இன்ஜினியரிங் கல்லூரிகள், ஐ.ஐ.ஐ.டி. ,க்கள் ஆகிய அனைத்தையும் விட தலைசிறந்து முன்னிலை வகிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக மட்டுமே இயங்கி வரும் தகவல் தொழில்நுட்ப சிறப்புக் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.ஐ.டி.,க்கள் வெளியீடுகளை மேற்கொள்வதில் மிகவும் பின்தங்கியிருக்கின்றன.
