பிப் 15, 2010 12:00 AM
பிப் 15, 2010 12:00 AM
கல்வி தொடர்பான மிக உயரமான இலக்குகளை இந்தியா சமீப காலமாக நிர்ணயித்து வருவதை அறிவோம்.
கல்விப் புரட்சி ஒன்றை ஏற்படுத்துவது போல நமது மத்திய மாநில அரசுகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. எனினும் தொடக்கக் கல்வியைப் போலவே உயர் கல்வியிலும் நாம் சமமான முக்கியத்துவத்தைத் தரவேண்டும் என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
நம் நாட்டில் ஆண்டு தோறும் பள்ளிக் கல்விக்கு 22 கோடிப் பேர் செல்கின்றனர். ஆனால் இதில் 2.6 கோடி பேர்கள் மட்டுமே உயர் கல்விக்குச் செல்கின்றனர். உயர் கல்வியில் சேருவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் மட்டுமே கல்வியில் நாம் எதிர்பார்க்கும் பலன்களை அடைய முடியும் என அவர் சமீபத்தில் கூறியுள்ளார். இந்தியத் தொழிற்துறை சமீபத்தில் டில்லியில் நடத்திய உயர் கல்வி தொடர்பான மாநாட்டில் அவர் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதைத் தெரிவித்தார்.
தொழிற்துறையினருக்கும் கல்வியாளர்களுக்கும் இடையே இணக்கமான நீடித்த நெருங்கிய உறவு இருக்க வேண்டும். இதனால் கல்வியைக் கற்கும் போதே மாணவர்கள் நடைமுறைப் பயிற்சியையும் பெற முடியும் என்று நாஸ்காம் தலைவர் சோம் மிட்டல் இதில் கருத்துக் கூறினார்.
உயர் கல்வியில் பின்தங்கியிருப்பதால் தான் நம்மால் காப்புரிமைகளிலும் மேம்பாட்டை அடைய முடியவில்லை என்று பிரதமரின் முதன்மைச் செயலர் இதில் கலந்து கொண்டு கூறினார். இதனால் தான் ஜப்பான், தென் கொரியா மற்றும் இஸ்ரேல் போன்ற சிறிய நாடுகள் கூட நம்மை விட இந்த அம்சத்தில் முன்னே உள்ளன.
விரைவில் உயர் கல்விக்கான ஆணையம் ஒன்று புதிதாகஏற்படுத்தப்படும் என்றும் இதில் பன்னாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் தரும் அதிகாரம் தரப்படும் என்றும் கபில் சிபல் மாநாட்டில் தெரிவித்தார். நம் கல்விக் கொள்கைக்கு ஏற்ற வகையில் அதற்கு முக்கியத்துவம் தரப்படும் முறையில் மட்டுமே வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கப்படவுள்ளன.
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் நமது பல்கலைக்கழகங்களோடு இணைந்து செயலாற்றுவதை உறுதி செய்வதோடு உயர் கல்விக்கான நிதியுதவியைத் தரவும் மத்திய அரசு புதிய அமைப்பை விரைவில் தொடங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
விரைவில் அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகம் இந்தியாவில் தனது மையத்தை திறக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
