ஏப் 20, 2010 12:00 AM
ஏப் 20, 2010 12:00 AM
இந்தியாவில் தொலை நிலைக் கல்வியில் நாள்தோறும் சாதனைகள் படைத்து வரும் இந்திரா காந்திப் பல்கலைக் கழகத்தில் பெர்பார்மிங் அண்டு பைன் ஆர்ட்ஸில் புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மாஸ்டர் ஆப் பெர்பார்மிங் ஆர்ட்ஸ் இன் இந்துஸ்தானி (எம்.பி.ஏஎச்.வி.எம்), மாஸ்டர் ஆப் பெர்பார்மிங் ஆர்ட்ஸ் இன் பரத நாட்டியம் (எம்.பி.ஏ பி.என்), மாஸ்டர் ஆப் பெர்பார்மிங் ஆர்ட்ஸ் இன் தியேட்டர் ஆர்ட்ஸ் (எம்.பி.ஏ டி.எச்.ஏ), மாஸ்டர் ஆப் பைன் ஆர்ட்ஸ் இன் பெயிண்டிங் (எம்.எப்.ஏ.பி) என்ற நான்கு புதிய படிப்புகள்தான் இவையாகும்.
இவற்றை இத்துறைகளில் புகழ் பெற்ற அறிஞர்களைக் கொண்டு குறிப்பிட்ட வளாகத்தில் மட்டும் நடத்த இந்திரா காந்திப் பல்கலைக் கழகம் திட்டமிட்டுள்ளது. எம்.பி.ஏஎச்.வி.எம் படிப்பில் குறிப்பிட்ட பாணியில் இந்துஸ்தானிப் பாடல்களைப் பாடும் பயிற்சிகள் வழங்கப்படும். இதனைப் படிக்க விரும்புபவர்கள் ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக இந்துஸ்தானி பிரிவில் பி.ஏ., ஹானர்ஸ் முடித்திருக்க வேண்டும். நுழைவுத் தேர்வு மூலமாக சேர்க்கை நடத்தப்படும் இந்தப் படிப்பில் 20 இடங்கள் உள்ளன.
இதே போல் எம்.பி.ஏ., பி.என் படிக்க விரும்புபவர்கள் ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக பரத நாட்டியத்தில் பட்டப் படிப்போ அல்லது டிப்ளமோ படிப்பையோ முடித்திருக்க வேண்டும். நுழைவுத் தேர்வு மூலமாக சேர்க்கை நடத்தப்படும். இந்தப் படிப்பில் அதிக பட்சம் 15 இடங்கள் உள்ளன.
எம்.பி.ஏ டி.எச்.ஏ., படிப்பில் தியேட்டர் ரிசர்ச் மெதடாலஜி மற்றும் தியேட்டர் ஹிஸ்டரி தொடர்புடைய பாடங்கள் நடத்தப்படுவதோடு, நவீன உத்திகளும், நடைமுறைகளும் சொல்லித்தரப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க ஆக்டிங் அல்லது தியேட்டர் ஆர்ட்சில் டிப்ளமோ அல்லது பட்டப் படிப்புடன் மூன்று ஆண்டு தியேட்டர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நுழைவுத் தேர்வு மூலமாக சேர்க்கை நடத்தப்படும். இந்தப் படிப்பில் 25 இடங்கள் உள்ளன.எம்.எப்.ஏ.பி., படிப்புகள் பைன் ஆர்ட்ஸ் பிரிவில் தொழில் நுட்பக் கலைஞர்களை உருவாக்கும் நோக்கத்தில் துவங்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க பிளஸ்டூ விற்குப் பின் குறைந்த பட்சம் நான்கு ஆண்டு படிக்கக் கூடிய பட்டப் படிப்பினைப் படித்திருக்க வேண்டும். இந்தப் படிப்பிற்கு நுழைவுத் தேர்வு மூலமாக சேர்க்கை நடத்தப்படும். இந்தப் படிப்பில் 20 இடங்கள் உள்ளன.
இந்தப் படிப்புகள் குறித்த முழு விபரங்களை அறிய இந்திரா காந்திப் பல்கலைக் கழகத்தின் இணையதளமாகிய www.ignou.ac.in ஐப் பார்க்கவும். இந்தப்படிப்புகளுக்கு 15.06.2010க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.