மே 24, 2010 12:00 AM
மே 24, 2010 12:00 AM
படிப்பு முடிந்த உடனேயே நல்லதொரு வேலையில் அமர வேண்டும் என்பதே அனைவரின் கனவாகும். இருந்த போதும் வேலை கிடைப்பதில் சிரமங்களிருப்பதாக சிலர் வருத்தபடுவதை நாம் கேட்டிருக்கிறோம். இனி, வேலையின்மைக்கான சில முக்கியக் காரணங்களை அலசுவோம் :
வேலை கிடைக்காததற்கு மிக முக்கியக் காரணங்களாக நேர்காணலின் போது குறிப்பிடும் "நோ" என்பதையும், நேர ஒழுங்கீனத்தையும், நேர்காணலின் போது வரும் செல்போன் கால்களையும், முறையற்ற ரெஸ்யூம்களையும், வினோதமான இமெயில் முகவரியைக் கொடுப்பதையும், முந்தைய பாஸைப் பற்றி அவதூறாகப் பேசுவதையும் குறிப்பிடுகிறார்கள்.
நமது எதிர்பார்ப்புகள் முக்கியம்தான். அதற்காக மிகப் பிடிவாதமாக மறுப்பதும், எதிர்ப்பதும் நேர்காணலில் எதிர்மறை அம்சங்களாகக் கருதப்படுகின்றன. எனவே ஒரு குறுகிய காலத்திற்காவது நமது எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்வதே புத்திசாலித்தனமான அணுகுமுறை என்று இத்துறை வல்லுனர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
பணி நியமனங்களைப் பெற இன்டர்நெட் மூலம் இணைய தளங்களைப் பார்ப்பது நல்லது தான். ஆனால் அதற்காக இணையதளங்களையும், மிகவும் பரிச்சயமான வலைத் தளங்களையும் மட்டுமே நம்பியிருப்பது நல்ல முடிவன்று. நமக்குத் தெரிந்தவர்களின் வலையமைப்பை விரிவு படுத்துவதும், பலப்படுத்துவதும் நல்ல வேலைக்கான மற்றொரு உத்திரவாதமாகும்.
நம்மைப் பற்றிய அளவுகடந்த சிந்தனையும் நமது மதிப்பைக் குறைக்கும் தன்மை கொண்டது. மாறாக, நாம் பணி புரிய விரும்பும் பணி வாய்ப்பாளரின் கவனத்தைக் கவரும் விதத்தில் அவர்களைப் பற்றிய சிந்தனைக் குவிப்பும், ஒரு பணியாளரிடமிருந்து அவர்கள் எதிர்பார்க்கும் விதத்தில் எப்படி உங்களால் பணிபுரிய முடியும் என்பதனையும் முன்னிறுத்திப் பேசுங்கள்.
குறுகிய கால இலக்குகளைப் பற்றிப் பேசும் பலரும் தங்களின் நீண்ட கால இலக்கு பற்றித் தெளிவாகப் பேசுவதில்லை. ஒவ்வொரு பணி வாய்ப்பாளரும் உங்களால் தங்கள் நிறுவனத்திற்கு எதிர்காலத்தில் என்னென்ன கிடைக்கும் என்பதை அறிய ஆர்வமாயிருப்பார்கள்.
உதாரணமாக "அடுத்த 5 ஆண்டுகளில் இந்த நிறுவனத்தில் நீங்கள் என்னவாக இருக்க விரும்புகிறீர்கள்? "என்ற கேள்வியின் அடிப்படை இதிலிருந்துதான் வருகிறது. எனவே இந்த மாதிரியான கேள்விகளுக்கு உறுதியுடன் நீங்கள் பதிலளிப்பதே சிறந்தது.
வேலையில்லாமலிருப்பதற்கான மற்றொரு முக்கியக் காரணமாகக் கூறப்படுவது இதற்கான உண்மையான காரணங்களை அடையாளம் காண முடியாத நிலையிலிருப்பதுதான். இந்தக் காரணங்களை ஆராய்ச்சி செய்வது நல்ல வேலை கிடைப்பதற்கான உத்திரவாதமாக இருப்பதுடன், ஒரு தனி மனிதரின் ஆராயும் தன்மையையும் பலப்படுத்துகிறது.
ஒரு நேர் காணல் தேர்வுக்கு தகுந்த ஒத்திகையுடன் செல்வதும் நல்ல பலன்களைத் தர வல்லது. வேறு வேறு விதமான கேள்விகளை உருவகம் செய்து, அவற்றுக்கான பதில்களையும் வேறு வேறு விதமாகத் திருப்தி வரும் வரை ஒத்திகை பார்க்க வேண்டும். இவற்றுள் மிகச் சிறந்த பதில் எதுவாக இருக்கும் என்பதையும் தீர்மானித்து அதனை நேர்காணலின் போது சொல்ல வேண்டும்.
சில சமயம் நேர்காணலை நன்றாகச் செய்த பின் வரும் அசட்டு தைரியம் கூட நமக்கு எதிராகத் திரும்பிவிடுகிறது. முழுமையான மற்றும் உறுதிப் படுத்தப்பட்ட பணிவாய்ப்பு வரும் வரை நேர்காணலுக்கான நமது தயாரிப்புகளை நிறுத்திவிடக் கூடாது என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.
