ஜூன் 22, 2010 12:00 AM
ஜூன் 22, 2010 12:00 AM
இன்றைய ஊழியர்கள் மிக அதிகமாக தங்கள் பணி மேன்மையைப் பற்றி சிந்திக்கிறார்கள். குறிப்பாக இன்றைய இளம் தலைமுறையினர் இதில் மிக அதிக அக்கறை காட்டுகிறார்கள். அதிக ஊதியமும் பணி மேன்மைக்கான வாய்ப்புகளும் கிடைக்கும் பட்சத்தில் தற்போது பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை விட்டு விட அவர்கள் தயங்குவதே இல்லை. சிறிதளவு அதிக சம்பளம், கூடுதல் போனஸ் அல்லது இது போன்ற எந்த ஒரு பணம் சம்பந்தப்பட்ட அம்சமும் இவர்களை அசைத்துவிடுகிறது என்பதே நடைமுறை உண்மையாகும்.
ஆனால் இது குறித்து ஐ.ஐ.எம்., மின் முன்னாள் மாணவர்கள் மனதில் வேறு மாதிரியான கருத்து நிலவுகிறது. இப்படி பணத்திற்காக வேலை விட்டு வேலைக்கு தாவுவது குறித்து இவர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள். நல்ல ஊதியத்தில் வேலை கிடைத்தாலும், தனிமனிதரின் மாண்புகள் குறித்த அக்கறை தேவை என்று இவர்கள் கருதுகிறார்கள்.
ஐ.ஐ.எம்., மின் முன்னாள் மாணவரும் தற்போது விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவருமான கே.ராதாகிருஷ்ணன் படிப்பை முடித்து வேலைக்காக விண்ணப்பிக்கும் போது உலகப்பிரசித்தி பெற்ற ஐ.பி.எம்., நிறுவனத்திலும், தற்போதைய வி.எஸ்.எஸ்.சி., நிறுவனத்திலும் ஒரே நேரத்தில் நேர்காணலுக்கான அழைப்புகள் வந்ததாம். ஆனால் அவர் தேச விசுவாசம் காரணமாக வி.எஸ்.எஸ்.சி., நிறுவனத்தைத் தேர்வு செய்தாராம்.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் முடிவின் படி, புகழ்பெற்ற பிசினஸ் பள்ளிகளில் படித்து முடித்து வேலையில் அமருபவர்கள், சேர்ந்த 12 மாதங்களுக்குள் அந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்குத் தாவிவிடுவது தெரிய வந்துள்ளது. கண்களைக் கவரும் கனத்த ஊதிய விகிதங்களே இதற்குக் காரணம் என்பதும் அறியப்படுகிறது.
இன்றைய இளம் தலைமுறை வேலை விட்டு வேலை தாவுவதை வெற்றிக்கான குறுக்கு வழியாக நினைக்கிறார்கள். ஆனால் இந்தப் பிரச்னையால் அடிபட்டுப் போவதென்னவோ நிறுவனம் குறித்த விசுவாசம்தான். இந்த நிலை குறிப்பாக ஐ.டி., மற்றும் ஐ.டி.இ.எஸ்., துறைகளிலேயே அதிகமிருப்பதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
