ஜூன் 23, 2010 12:00 AM
ஜூன் 23, 2010 12:00 AM
கற்பனை செய்தல் படைத்தலின் ஆரம்பம். நீங்கள் வேண்டுவதை கற்பனை செய்யுங்கள். அதை பெறுவதற்காக முயற்சி செய்யுங்கள் என ஜார்ஜ் பெர்னார்ட்ஷா கூறியுள்ளார். அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், கற்பனைத்திறன் இந்த பிரபஞ்சத்தின் மிகச்சிறந்த ஆற்றலாகும் என்றார். இந்த இரண்டு வெற்றியாளர்களும் எதற்காக கற்பனைக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள்? ஏனென்றால், இவர்கள் இருவரும் தங்கள் வெற்றி எனும் சாம்ராஜ்யத்தை இந்த கற்பனைத் திறனின் உதவியுடன் கட்டியுள்ளனர். இந்த ஆற்றல் தான் இவர்களின் கற்பனைகளை, கனவுகளை நிஜமாக்கி வெற்றி காண வழிவகை செய்தது.
நாம் நம்முடைய வாழ்க்கையில் இந்த கற்பனைத்திறனுடன் தான் பெருமளவு கழிக்க வேண்டியுள்ளது. ஆனால், ஒரு அவலம் யாதெனில், நாம் தீய கற்பனைகளை சிந்தித்தால் அது நிஜவாழ்க்கையிலும் பிரதிபலிக்கும். நம்முடைய இயலாமையை முற்றிலுமாக ஒழித்தால் மட்டுமே நம் முழுமையான கற்பனைத்திறனை பெற முடியும். பல்வேறு காரணிகள் நம்முடைய கற்பனைத்திறனுக்கு ஊறு விளைவிக்கின்றன. அவைகளாவன: கடந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவத்தின் மீதுள்ள பயம் மற்றும் விருப்பம், குறைவான மனப்பக்குவம், விழிப்புணர்வு இல்லாத நிலை, மற்றவர்களின் தூண்டுதல், குறிக்கோள் நிர்ணயிக்காதது போன்றவையாகும். நாம் கற்பனைத்திறனை நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தால் மேற்கூறிய எந்த ஒரு காரணியும் நமக்கு பிரச்னை அளிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.
1976 ஆம் ஆண்டு உலக அளவிலான ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்ற வீரரிடம், நடுவர்கள் நீங்கள் பிற்காலத்தில என்னவாக ஆசைப்படுகிறீர்கள் என கேட்டனர். அதற்கு அவர், நான் ஹாலிவுட் திரைஉலகின் முதல் நட்சத்திரமாக விளங்குவேன் என்றார். அவர் தான் அர்னால்டு ஸ்வார்சனேகர்.
அவர் கூறுகையில், நான் என்னுடைய உடலை முன்னேற்ற மேற்கொண்ட நடவடிக்கைகளைப் போல், வாழ்க்கையில் என்னுடைய கனவை நிஜமாக்கவும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டேன். என்னுடைய கற்பனைகள், கனவுகள் அனைத்தும் ஹாலிவுட் நட்சத்திரமாவது எப்படி என்று தான் இருக்கும். நம்முடைய கற்பனைக்கு உரிய உருவகம் அளித்தால் அந்த இலக்கை அடையலாம் என்றார்.
கற்பனை செய்வதும், அதற்கு உருவகம் கொடுப்பதும் மிகவும் எளிதான ஒன்றாகும். உங்கள் வாழ்வில் கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களில் உங்களுக்கு பெருமை சேர்த்தவை அல்லது உங்களை மகிழ்வித்தவை போன்றவற்றை எண்ணுங்கள். அந்த நேரங்களில் நீங்கள் இருந்த இடம், நபர்கள், எண்ணங்கள், உணர்வுகள், அந்த சூழலில் உள்ள சத்தங்கள் போன்றவற்றை மனதில் கொண்டு வர முயலுங்கள்.
இவை உங்கள் கற்பனைக்கு ஒரு உருவகம் கொடுக்க உதவியாக இருக்கும். உங்கள் முயற்சியின் மீது நம்பிக்கை வையுங்கள். சரியான நேரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் உங்களுக்கு உரிய பலன் அளிக்கும். இத்தகைய செயல்களை மனதில் கொண்டுசெயல்பட்டால் இந்த உலகமே சதி செய்தாலும் உங்கள் கனவு மெய்யாகும்.
