ஜூலை 19, 2010 12:00 AM
ஜூலை 19, 2010 12:00 AM
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கேற்ப உடல்நலத்தை பேணுவது மிகவும் அவசியம். அதுவும் மாணவர் பருவத்திலேயே இதை செயல்படுத்தினால் வருங்கால இளைஞர்களின் வாழ்க்கைத் திறன் சிறப்பாக அமையும். இதனை கருத்தில் கொண்டு ஆந்திராவில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகம் தங்களது கல்லூரியில் படிக்கும் முதுகலை மாணவர்களுக்கு மருத்துவக் காப்பீடு வசதியை செய்து கொடுத்துள்ளது. இத்திட்டம் இக்கல்வி ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வருகின்றது.
இத்திட்டத்தின் படி இக்கல்வி ஆண்டில் சேரும் முதுகலை மாணவர்கள் ஒவ்வொருவரும் , ஆண்டுக்கு தலா 570 ரூபாய் செலுத்த வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு மாணவரும் 50 ஆயிரம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீட்டு பயன்பெறலாம். இதற்காக உஸ்மானியா பல்கலைக்கழகம், நேஷனல் இன்ஸ் சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இது பற்றி உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திருப்பதி ராவ் கூறியதாவது: இம்மாதிரியான மருத்துவக் காப்பீடு திட்டம், வடமாநில பல்கலைக்கழங்களில் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் கூட, இத்திட்டம் ஏற்கனவே வெளிநாட்டு மாணவர்களுக்கு மட்டும் செயல்பட்டு வந்தது. தற்போது இந்த திட்டம் அனைத்து முதுகலை மாணவர்களுக்கு செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டம் செயல்படுத்தப் படுவதன் முக்கிய நோக்கம் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலான மாணவர்கள் பொருளாதரம் மற்றும் சமூகத்தில் பின்தங்கிய நிலையிலும், கிராமப்புற பகுதிகளிலிருந்தும் வருகின்றனர். மேலும் சில மாணவர்கள் தங்களது பெற்றோரிடமிருந்து பிரிந்து, விடுதியில் தங்கி படிக்கின்றனர். எனவே இத்தகைய மாணவர்களுக்கு மருத்துவக்காப்பீடு என்பது அவசியமான ஒன்று.
மேலும் மாணவர்கள் படிக்கும் காலகட்டத்தில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர்களது படிப்பு பாதிக்கப் படுவதோடு, மருத்துவ சிகிச்சைக்கென அதிகளவு ரூபாய் செலவழிக்கப்படுகிறது. எனவே ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்ப பல்கலைக் கழகத்திலேயே மருத்துவ காப்பீடு திட்டம் துவங்கப்பட்டுள்ளது. பிரீமியம் தொகையும் மிகவும் குறைவுதான். ஆண்டுக்கு 570 ரூபாய்,(மாதத்துக்கு 50 ரூபாய் தான்) என்பதால் மாணவர்களுக்கு இத்தொகையை செலுத்த கஷ்டப்பட தேவையில்லை. " என்றார்.
