செப் 20, 2010 12:00 AM
செப் 20, 2010 12:00 AM
கிரேக்க மொழியில் "அஸ்ட்ரோ' என்பது நட்சத்திரத்தைக் குறிக்கும் சொல். "அஸ்ட்ரோ பிசிக்ஸ்' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வான் இயற்பியல் வானியலின் அஸ்ட்ரானமி) கிளை துறையாக கருதப்படுகிறது. இந்த துறை வல்லுனர்கள் "அஸ்ட்ரோ பிசிஸ்ட்' என்று அழைக்கப்படுகிறார்கள்.
நவீன வானியல் ஆராய்ச்சிகளில் பெருமளவில் இயற்பியல் கோட்பாடுகள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக மின்காந்தவியல், தெர்மோ டைனமிக்ஸ், இயந்திரவியல், அணுவியல் போன்ற ஏராளமான இயற்பியல் கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டே ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த துறையில் இந்தியா மற்ற நாடுகளுக்கு சற்றும் சளைத்தது அல்ல என்பதை நிருபிக்கும் வகையில் இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் வெற்றி கொடி நாட்டி வருகிறார்கள்.
கல்வித் தகுதிகள்
பிளஸ் 2 வில் இயற்பியலை ஒரு பாடமாக எடுத்து படித்திருப்பது இந்த துறைக்கு தேவையான அடிப்படை தகுதியாக கருதப்படுகிறது. பிளஸ் 2 முடித்தவுடன் நேரடியாக ஒருங்கிணைந்த ஐந்தாண்டு எம்.எஸ்சி., பிசிக்கல் சயின்ஸ் படிப்பை படிக்கலாம். இது திருவனந்தபுரம் ஐ.ஐ.எஸ்.இஆர்., கல்வி நிறுவனத்தில் வழங்கப்படுகிறது. அல்லது பி.எஸ்சி., இயற்பியல் படிப்பை முடித்த பின் முதுகலை படிப்பில் எம்.எஸ்சி., வான் இயற்பியல் படிப்பை தேர்ந்தெடுத்தும் படிக்கலாம்.
பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் முதுநிலை படிப்பில் வான் இயற்பியல் கற்றுத் தரப்படுகின்றது. அஸ்ட்ரானமி, ஸ்பேஸ் சயின்ஸ், பிளானட்டரி சயின்ஸ் போன்ற பாடங்களாகவும் இவை கற்பிக்கப்படுகின்றது. இந்த துறையில் இளநிலை, முதுநிலை, பி.எச்.டி., மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகளை இந்தியாவிலேயே படிக்கலாம்.
வேலைவாய்ப்புகள்
உலகளவில் ஏராளமான வேலைவாய்ப்புகள் வான் இயற்பியல் படித்தவர்களுக்கு உள்ளது. வான் இயற்பியல் தொடர்பான ஆராய்ச்சியில் பல்வேறு நாடுகள் ஒன்றுக்கொன்று போட்டியிட்டு வருவதால் திறமையான நபர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. நாசா, இஸ்ரோ போன்றவற்றில் வேலை பார்க்க வேண்டும் என்பது இளைஞர்களின் கனவாக இருக்கிறது. இதனை வான் இயற்பியல் சார்ந்த படிப்புகளை படிப்பதன் மூலம் சாத்தியமாக்கலாம்.
கல்வி நிறுவனங்கள்
* இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், பெங்களூரு
* ஆந்திரா பல்கலைக்கழகம், விசாகப்பட்டினம்
* உஸ்மானியா பல்கலைக்கழகம், ஐதராபாத்
* ஜே.என்.டி.யூ பொறியியல் கல்லூரி, ஐதராபாத்
* பஞ்சாப் பல்கலைக்கழகம், பாட்டியாலா
* எம்.பி.பிர்லா பிளானட்டோரியம், கோல்கட்டா
* இன்டர் யுனிவர்சிட்டி பார் அஸ்ட்ரானமி அண்டு அஸ்ட்ரோ பிசிக்ஸ், புனே
* லக்னோ பல்கலைக்கழகம், லக்னோ
* சிவாஜி பல்கலைக்கழகம், கோல்காபூர்
