தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/பொருளாதார மாணவர்களுக்கான பிரகாசமிகு எதிர்காலம்!

பொருளாதார மாணவர்களுக்கான பிரகாசமிகு எதிர்காலம்!

பொருளாதார மாணவர்களுக்கான பிரகாசமிகு எதிர்காலம்!


ஏப் 05, 2011 12:00 AM

ஏப் 05, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஏப் 05, 2011 12:00 AM ஏப் 05, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் மேம்பாட்டிற்கும் முக்கியமான மற்றும் வெளிப்படையான காரணமாக திகழ்வது அந்த நாட்டின் பொருளாதார கொள்கைகளே ஆகும். பொருளாதார கொள்கை வடிவமைப்பில் தேவைப்படும் சிறந்த நிபுணர்களின் எண்ணிக்கை எப்போதும் அதிகமாகவே உள்ளது. சிறந்த பொருளாதார நிபுணர்களின் தேவை அரசு அமைப்புகளில் மட்டுமல்ல, தனியார் துறைகளிலும் மிக அதிகமாக உள்ளது. எனவே இத்தகைய காரணங்களால் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட படிப்புகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.

பொறியியல் சம்பந்தமான படிப்புகள் முக்கியத்துவம் பெற்ற பிறகு, பொருளாதாரம் சம்பந்தப்பட்ட படிப்புகள் பின்வரிசைக்கு தள்ளப்பட்டன. அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய ஒரு நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கு பொருளாதார திட்டமிடல்கள் மிகவும் முக்கியம் என்பதை மறந்துவிடலாகாது. பொருளாதார தாராளமயமாக்கல் நடைமுறைக்கு பின்னர், பொருளாதார நிபுணர்களுக்கான வாய்ப்புகள் பெருமளவு அதிகரித்து, அந்த படிப்புகளுக்கான முக்கியத்துவமும் கூடியுள்ளது.

நம் நாட்டை சேர்ந்த பல முக்கிய கொள்கை வகுப்பாளர்களான பிரதமர் மன்மோகன் சிங், திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா, ஹனுமந்த ராவ், வி.கே. பல்லா, ரொக்கம் ராதாகிருஷ்ணா, ஜகதீஷ் பகவதி, அமர்தியா சென், ஒய்.கே. அலக், பிரணாப் பரதன் மற்றும் பி.பி. பட்டச்சார்ஜி ஆகிய அனைவருமே பொருளாதாரம் படித்தவர்கள்தான்.

இன்றைய வேகமாக வளர்ந்துவரும் உலகில் நாம் ஒரு சிறப்பான இடத்தை உறுதிசெய்துகொள்ள பொருளாதார படிப்பு பேருதவி புரிகிறது. நல்ல பொருளாதார நிபுணர்களுக்கான தேவை, இந்திய அளவிலான நிறுவனங்களில் மட்டுமல்லாது, உலக அளவிலான நிறுவனங்களிலும் அதிகளவில் இருக்கிறது.

பொருளாதாரம் சம்பந்தமான படிப்புகளில் அதிக ஆர்வம்கொண்டு, எதிர்காலத்தில் அத்துறையில் பெரிய வாய்ப்பை பெற ஆர்வமாக இருக்கும் இளைஞர்களுக்கு, இங்கே பல வழிகாட்டுதல்களை வழங்குகிறோம்.

படிப்பின் வகைகள்-கல்வி நிறுவனங்கள்- வாய்ப்புகள்:

எம்.ஏ. பொருளாதாரம், எம்.ஏ. துணை பொருளாதாரம்(அப்லைடு), எம்.எஸ். (பொருளாதாரம்), அல்லது எம்.ஏ. (குவாண்டிடேடிவ் பொருளாதாரம்) போன்ற படிப்புகளில் ஏதேனும் ஒன்றை சிறந்த முறையில் படித்து, நல்ல மொழி புலமையும், கணினி அறிவும் கொண்ட மாணவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. மேலும் கணிதம் மற்றும் புள்ளியியல் படித்த மாணவர்கள், பொருளாதாரத்தையும் படிப்பதன் மூலம் சிறந்த வேலை வாய்ப்புகளை பெற முடியும்.

பொருளாதாரம் படித்தவர்களுக்கு சமூக, அரசியல் நிகழ்வுகள் பற்றிய அறிவு, எண்கள் சம்பந்தமான அறிவு மற்றும் திறமை போன்றவை இருப்பது அவசியம்.

ஆந்திரா பல்கலைக்கழகத்தில், பொருளாதாரம்-புள்ளியியல் சேர்ந்த இணைப்பு பாடப்பிரிவு உள்ளது. இரண்டு வருட எம்.ஏ. பொருளாதார படிப்பை முடித்தபிறகு, ஒரு வருட எம்.எஸ்சி. புள்ளியியல் படிப்பை படிக்கலாம்.

பொருளாதாரம் படித்த ஒருவருக்கு ஆரம்ப நிலையிலேயே, வங்கி துறை, நிதித்துறை, காப்பீடு, ஸ்டாக் மார்கெட், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், ஆலோசனை மையங்கள் மற்றும் அரசு துறைகளில் ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும் அவர்கள் மாநில-மத்திய சர்விஸ் கமிஷன்களிலும் வாய்ப்புகளை பெறலாம். இதைத்தவிர அரசாங்கத்திற்காக சேவைசெய்ய விரும்புபவர்கள், "இந்திய பொருளாதார சேவைகளில்" நல்ல வாய்ப்புகளை பெறலாம். ஆனால் இதற்கான அதிகாரிகள், யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் நடத்தும் தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே நியமிக்கப்படுகிறார்கள். தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பு 21-28 ஆக இருக்க வேண்டும்.

"இந்திய பொருளாதார சேவையில்" பணி வாய்ப்பை பெற, ஒருவர் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் படிப்பை படித்தவராக இருக்க வேண்டும். இந்த தேர்வில் பொது பாடங்கள், பொது பொருளாதாரம் மற்றும் இந்திய பொருளாதாரம் போன்ற தலைப்புகளில், கேள்விகள் ஆங்கிலத்தில் கேட்கப்பட்டிருக்கும். இந்த எழுத்து தேர்வுக்கு அடுத்து நேர்முகத் தேர்வு நடைபெறும்.

பொருளாதாரம் படித்தவர்கள் மேற்கண்ட துறைகள் தவிர்த்து, ஆய்வு மற்றும் கற்பிக்கும் பணிகளிலும் நல்ல வாய்ப்புகளை பெற முடியும்.

பொருளாதாரம் படித்தவர்கள் உலகளாவிய நிறுவனங்களான உலக வங்கி, ஆசிய மேம்பாட்டு வங்கி, ஐ.நா. சபை மற்றும் சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்) போன்றவற்றிலும் வாய்ப்புகளை பெறலாம்.

பல கல்லூரிகள் பொருளாதாரத்தில் இளநிலை படிப்புகளை வழங்கினாலும், முதுநிலை படிப்பிற்குத்தான் கிராக்கி அதிகம். ஆந்திரா பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில கல்வி நிறுவனங்கள், 10,12 வகுப்புகள் முடித்த மாணவர்களுக்கு 5 வருட ஒருங்கிணைந்த எம்.எஸ். பட்டப்படிப்பை வழங்குகின்றன.

எம்.ஏ. (குவாண்டிடேடிவ் பொருளாதாரம்) போன்ற முதுநிலை படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள், இளநிலையில் பொருளாதாரம் மற்றும் கணிதத்தை படித்திருக்க வேண்டும்.

மேற்படிப்பு என்றாலே, பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகள்தான் என்றில்லை. பொருளாதாரம் போன்ற சமூக முக்கியத்துவம் வாய்ந்த பாடங்களும் கவுரவம் வாய்ந்த பல பெரிய வாய்ப்புகளை கொண்டிருக்கின்றன. எனவே மாணவர்கள் தங்களின் அறிவை விசாலமாக்கி கொண்டால், தங்கள் முன்பாக விரிந்திருக்கும் வாய்ப்புகளை பற்றி தெளிவாக அறிந்துகொண்டு, அதன்மூலம் செழிப்பான வாழ்வை பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us