ஏப் 05, 2011 12:00 AM
ஏப் 05, 2011 12:00 AM
மிகுந்த பரபரப்பும், அவசரமும் நிறைந்த இந்த வாழ்க்கையில் மன அழுத்தம், பதட்டம், கோபம், விரக்தி, ஏமாற்றம் போன்ற பலவித நெருக்கடிகளுக்கு ஆளாகி, அதனாலேயே பல நோய்களையும் இழுத்துக் கொள்கிறோம். நம்முடைய வாழ்க்கை சூழலை நாம் மாற்றிக்கொள்வது இயலாத காரியம். ஆனால் அத்தகைய வாழ்க்கை சூழலால் ஏற்படும் மேற்சொன்ன நெருக்கடிகளிலிருந்து விடுபட பல வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றை பின்பற்றுவதன் மூலம், நமது மனதை லேசாக வைத்து சாதித்து, உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாத்துக்கொள்ள முடியும். அந்த வழிமுறைகளைப் பற்றி இங்கே அலசலாம்.
மூச்சை இழுத்து விடுதல்:
இது ஒரு பழைய உபாயமாக இருந்தாலும் நல்ல பயன்தரும் ஒன்றாக இருப்பதால் இங்கே சொல்ல வேண்டியுள்ளது. வசதியான முறையில் அமர்ந்துகொண்டு மூச்சை நன்றாக உள்ளிழுக்கவும். இழுத்த மூச்சை பிடித்து வைத்துக்கொண்டு, அதை மெதுவாக வெளிவிடவும். வெளியாகும் மூச்சு வெப்பமாக இருக்கும். அந்த வெப்பத்தை உங்களின் கோப நெருப்பாக கற்பனை செய்துகொள்ளவும். இதுபோன்று சில தடவைகள் செய்தால், நீங்கள் லேசாக உணர்வீர்கள்.
உடற்பயிற்சி:
மன அமைதியை கொண்டு வருவதற்கு உடற்பயிற்சியும் சிறந்த உபாயமாக பயன்படுகிறது. உங்களுக்கு கோபமும், மனதின் வலியும் அதிகமாக இருந்தால் நன்கு உடற்பயிற்சி செய்யவும். மேலும் நல்ல ஓட்டப்பயிற்சியும் கோபம், அழுத்தம் ஆகியவற்றை குறைப்பதற்கான சிறந்த கருவி. இத்தகைய உடற்பயிற்சிகளால் மனம் லேசாவதோடு, உடலுக்கும் நன்மை கிடைக்கிறது. அதேசமயம் சில எளிமையான யோகாசன பயிற்சிகள், இவற்றைவிட கூடுதல் நன்மையை தரும்.
கண்களை மூடுதல்:
மன அழுத்தம் அதிகமாக இருக்கும்போது உங்களின் கண்களை நன்கு மூடி, லேசான தியானத்தில் ஈடுபட முயற்சிக்கலாம். மத நம்பிக்கை உடையவராக இருந்தால் சிறிய பிரார்த்தனையிலும் ஈடுபடலாம். அந்த நிலையில், இந்த உலக சிந்தனைகளை விடுத்து ஆன்மீக சிந்தனை மற்றும் அந்த உலகில் பயணிக்கலாம். வலுவான ஆன்மீக எண்ணங்கள் கோபத்தை அகற்றிவிடும். கண்களை சிறிதுநேரம் மூடியிருப்பதால், கண்களுக்கு ஓய்வும், புத்துணர்ச்சியும் கிடைக்கிறது.
வெளியே செல்லுதல்:
நீங்கள் மிகுந்த கோபமாகவோ, எரிச்சலாகவோ இருக்கும்போது, சற்று வெளியே சென்றுவிட்டு திரும்புதல் நன்மை பயக்கும். அருகில் அழகிய பூங்கா, ஏரி அல்லது வேறு ஏதாவது அழகிய காட்சிகள் இருந்தால், அங்கே சென்று சிறிதுநேரம் இருந்து திரும்பலாம். இனிமையான புறக்காட்சிகள் மனதை ஆக்கிரமிக்கும்போது, மனதில் ஏற்கனவே உள்ள கோப உணர்ச்சிகள் வெளியேறிவிடும்.
தண்ணீர் அருந்துதல்:
மன அழுத்தத்தையும், கோபத்தையும் குறைப்பதில் தண்ணீரின் பங்கு அதிகம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தண்ணீரை மிஞ்சிய அருமருந்து இவ்வுலகில் இல்லை. தண்ணீர் என்பது தாகத்திற்கு மட்டுமல்ல. கோபத்தை தணிக்கவும்தான். எனவே அந்தமாதிரியான சூழலில் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். மணிக்கொருமுறை தண்ணீர் குடித்தால் நல்லது. மேலும் வாய்ப்பிருந்தால் அந்த நேரத்தில் நீச்சலடிக்கவோ, குளிக்கவோ செய்யலாம்.
பொழுதுபோக்கு அம்சங்கள்:
கோபமும், படபடப்பும் உங்களை சூழ்ந்துள்ள நேரத்தில் பொழுதுபோக்கு அம்சங்களும் உங்களுக்கு துணைபுரியும். நல்ல பத்திரிக்கைகளை படித்தல், பிடித்த பாடல் அல்லது இசையை கேட்டல், தொலைக்காட்சியில் நல்ல நிகழ்ச்சிகளை பார்த்தல், நல்ல நண்பர்களுடன் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ உரையாடுதல் போன்றவை உங்களின் கவனத்தை திருப்ப உதவும் காரணிகள்.
