ஜூன் 01, 2011 12:00 AM
ஜூன் 01, 2011 12:00 AM
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. முதல் முறையாக, மாணவர்கள் செயல்திறன் அடிப்படையில், ஒருங்கிணைந்த தொடர் மதிப்பீட்டு முறை மூலம், இந்த ஆண்டு தேர்வு முடிவு வெளியாகியுள்ளது.
கடந்தாண்டு வரை, மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஸ்டேட் போர்டு போலவே, சி.பி.எஸ்.இ.,யிலும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. இதில், 10ம் வகுப்பு மாணவர்கள், அதிகமான தேர்வு முறைகளால், சிறிய வயதில் மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாவதை கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வை மட்டும் ரத்து செய்து, மத்திய அரசு அறிவித்தது.
எனினும், மாணவர்களின் ஒருங்கிணைந்த செயல்திறனை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்து, அதனடிப்படையில், மதிப்பெண்களுக்கு பதிலாக, "கிரேடு' வழங்கும், "சிசிஇ" முறையை, சி.பி.எஸ்.இ., அறிமுகப்படுத்தியது. வினாடி-வினா போட்டி, குழு விவாதம், செய்முறை திறன், பாட வாரியாக தேர்வு என, பல்வேறு அளவு கோல்களின் அடிப்படையில், மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், ஒன்பது அம்ச, "கிரேடு" முறையை அறிமுகப்படுத்தியது. புதிய திட்டத்தின்படி, இரு வகையான தேர்வு முறைகள் அறிவிக்கப்பட்டன. ஒன்று, பள்ளிகள் நடத்தும் தேர்வில் மாணவர்கள் பங்கேற்றல். இரண்டாவது, சி.பி.எஸ்.இ., நடத்தும் தேர்வில் பங்கு கொள்ளுதல். இந்த முறைகளில், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், "கிரேடு" வழங்கப்பட்டு, நேற்று தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. புதிய முறையில், தேர்வு முடிவுகள் வெளியானதால், மாணவர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.
நேற்று காலை, 9 மணியில் இருந்தே, பள்ளிகளில் தேர்வு முடிவுகள் அடங்கிய பட்டியல்கள் வெளியிடப்பட்டன. கோபாலபுரம் டி.ஏ.வி., பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவியரும், பெற்றோரும் ஆர்வத்துடன் வந்து, தேர்வு முடிவுகளை பார்த்தனர். புதிய முறையில், தேர்வு முடிவுகள் தயாரித்தது எப்படி என்பது குறித்து, திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ஆர்.எம்.கே.பள்ளி முதல்வர் சதீஷ் கூறியதாவது: பொதுத்தேர்வு ரத்துக்கு பதிலாக, இரு வகையான மதிப்பீடு முறைகள் அமல்படுத்தப்பட்டன. ஒன்று, அந்தந்த பள்ளிகளே நடத்தும் தேர்வில் மாணவர்கள் பங்கு கொள்ளுதல். இந்த வகையிலான தேர்வுக்கு, கேள்வித்தாள் உட்பட அனைத்தும் சி.பி.எஸ்.இ., வழிகாட்டுதல் அடிப்படையில், பள்ளிகளே தேர்வுகளை நடத்தி, மதிப்பீடு செய்து, மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், "கிரேடு" அளித்து, சி.பி.எஸ்.இ.யின் ஒப்புதலைப் பெற்று, முடிவுகளை வெளியிட்டுள்ளன.
இந்த வகை தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்த மாணவர்கள், அந்தந்த பள்ளிகளிலேயே அனைத்து தேர்வுகளையும் எழுதினர். பிளஸ் 1 வகுப்பில், அதே பள்ளியில் தொடர நினைக்கும் மாணவர்களும், பள்ளி நடத்தும் தேர்வில் பங்கேற்றனர். ஆனால், சி.பி.எஸ்.இ., நடத்தும் தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் மட்டும், பாட ரீதியான தேர்வுகளை, வெளி மையங்களில் எழுதினர். இந்த வகை தேர்வுகளை, சி.பி.எஸ்.இ., நேரடியாக, தனது கண்காணிப்பில் நடத்தி, "கிரேடு" அடிப்படையில், தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 1 சேர நினைக்கும் மாணவர்களும், அல்லது வேறு படிப்பை படிக்க நினைக்கும் மாணவர்களும், சி.பி.எஸ்.இ. நடத்திய தேர்வில் பங்கேற்றனர்.
தமிழகத்தில், 14 ஆயிரம் மாணவர்கள் வரை, 10ம் வகுப்பு தேர்வில் கலந்து கொண்டனர். இவர்களில், 50 சதவீதம் பேர், பள்ளித் தேர்வுகளிலும், 50 சதவீதம் பேர், சி.பி.எஸ்.இ., தேர்வுகளிலும் பங்கேற்றிருக்கலாம் என கருதப்படுகிறது. பெரும்பாலான பள்ளிகளில், அதிகமான மாணவர்கள், பள்ளித் தேர்வுகளில் தான் கலந்து கொண்டுள்ளனர். எங்களது பள்ளி மாணவர்கள், 37 பேரில், ஒரு மாணவர் தவிர, மீதமுள்ள, 36 மாணவர்களும் பள்ளித் தேர்வில் கலந்து கொண்டனர். அவர்களில், ஆறு மாணவர்கள், 10க்கு 10 புள்ளிகளும், 26 மாணவர்கள், 9.01 முதல், 10 வரையிலான புள்ளிகளை பெற்றுள்ளனர். பள்ளிகளே தேர்வுகளை நடத்தி, "கிரேடு" வழங்கியதால், அதில் எவ்விதமான தவறுகளும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக, பல பள்ளிகளின் தேர்வுப் பட்டியலை சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் பெற்று ஆய்வு செய்தனர். இவ்வாறு சதீஷ் கூறினார்.
"கிரேடு" கணக்கிடும் முறை குறித்து, சதீஷ் கூறியதாவது: பள்ளித்தேர்வு மற்றும் சி.பி.எஸ்.இ., தேர்வு என, இரு வகை தேர்வுகளிலும், "எப்.ஏ." (பார்மேட்டிவ் அசஸ்மென்ட்), "எஸ்.ஏ." (சம்மேட்டிவ் அசஸ்மென்ட்) என, இரு வகையான மதிப்பீடுகளும், தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. "எப்.ஏ." பிரிவில், பாடத்திட்டம் அல்லாத பிற வகையில் மாணவர்களின் திறன்களை சோதித்து, அதனடிப்படையில், நான்கு பிரிவுகளில், தலா 10 மதிப்பெண் வீதம், 40 மதிப்பெண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. "எஸ்.ஏ." பிரிவில், "எஸ்.ஏ.,-1, எஸ்.ஏ.,-2" என, இரு உட்பிரிவுகள் வருகின்றன. இரு வகை தேர்வுகளும், பாட சம்பந்தமான எழுத்துத் தேர்வுகள். இதில், எஸ்.ஏ.,-1 தேர்வு, செப்டம்பரிலும், எஸ்.ஏ.,-2 தேர்வு, மார்ச் மாதத்திலும் நடந்தன. இதில், தலா 100 மதிப்பெண்களுக்கு, மூன்று மணி நேரம் தேர்வுகள் நடந்தன. இதில் பெற்ற மதிப்பெண்கள், 20க்கு கணக்கிடப்படும். எஸ்.ஏ.,-2வில் பெறும் மதிப்பெண்கள், 40க்கு கணக்கிடப்படும். இப்படி, எப்.ஏ., பிரிவில், 40 மதிப்பெண்களும், எஸ்.ஏ.,-1ல், 20 மதிப்பெண்கள், எஸ்.ஏ.,-2ல், 40 மதிப்பெண்கள் என, 100 மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, அதனடிப்படையில், "கிரேடு"கள் வழங்கப்படுகின்றன. இவற்றில், பள்ளி மூலமாக தேர்வெழுதும் மாணவர்களும், சி.பி.எஸ்.இ., போர்டு மூலமாக தேர்வெழுதும் மாணவர்களும், எப்.ஏ., முதல், எஸ்.ஏ., -1 வரை, பள்ளிகளிலேயே எழுத வேண்டும். சி.பி.எஸ்.இ., தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் மட்டும், எஸ்.ஏ.,-2 (40 மதிப்பெண்கள்) தேர்வை மட்டும், பள்ளி அல்லாத வேறொரு மையத்தில் எழுத வேண்டும். இந்த அடிப்படையில் தான், சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இவ்வாறு சதீஷ் கூறினார்.
ஒன்பது அம்ச "கிரேடு" முறை
மதிப்பெண் "கிரேடு"
91 முதல் 100 வரை ஏ1
81 முதல் 90 வரை ஏ2
71 முதல் 80 வரை பி1
61 முதல் 70 வரை பி2
51முதல் 60 வரை சி1
41 முதல் 50 வரை சி2
33 முதல் 40 வரை டி
21 முதல் 32 வரை இ1
00-20 வரை இ 2
இந்த ஒன்பது அம்ச, "கிரேடு" முறையில், டி கிரேடு வரை பெறும் மாணவர்கள், அடுத்த வகுப்பிற்கு செல்லும் தகுதியை பெறுகின்றனர். இ1, இ2 "கிரேடு" பெறும் மாணவர்கள், தோல்வி அடைந்ததாக அர்த்தம்.
புதிய முறையில் சான்றிதழ்: மாணவர்களுக்கு, "கிரேடு" முறையிலான சான்றிதழ்கள் நேற்று வழங்கப்பட்டன. அதில், பாட வாரியாக மாணவர்கள் பெற்ற, "கிரேடு"கள் விவரம், இதர செயல்பாடுகளில் பெற்ற, "கிரேடு"கள் விவரம் ஆகியவை தனித்தனியாக அடங்கியுள்ளன. இரு பிரிவுகளிலும் சேர்த்து பெறப்பட்ட, "கிரேடு" தேர்ச்சிக்குறிய குறியீடாகும்.
மாணவியர் கருத்து:
"புதிய முறையிலான சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு நடைமுறைகள் எளிதாக இருக்கின்றன" என, டி.ஏ.வி., பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சீதா சுதிர் கூறினார். இது குறித்து அவர் கூறும்போது, "பழைய முறையை விட, புதிய முறை மிகவும் எளிதாக இருக்கிறது. பழைய முறையில், வெறும் பாடங்களில் பெறும் மதிப்பெண்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. புதிய முறை, மாணவர்களின் ஒட்டுமொத்த திறன்களை வெளிக்கொண்டு வரும் வகையில் இருக்கின்றன. முக்கியமாக, அனைத்து செயல்பாடுகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்று, அதனடிப்படையில், "கிரேடு" வழங்குவது மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.
இப்பள்ளியைச் சேர்ந்த பிற மாணவியரும், இதே கருத்தை தெரிவித்தனர். பெற்றோர் பாலசுப்பிரமணியன் கூறும்போது, "புதிய முறையை வரவேற்கிறேன். மாணவர்களின் பன்முகத் திறனை வெளிக்கொண்டு வந்து, அவற்றை மேம்படுத்தும் வகையில், புதிய முறைகள் இருக்கின்றன. மாணவர்கள், வழக்கமான முறைக்கு மாறாக, புத்துணர்ச்சியுடன் புதிய முறையில் ஈடுபட முடியும்" என்றார்.
