/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
வாழ்வை மேம்படுத்தும் கடல்சார் கல்வி
/
வாழ்வை மேம்படுத்தும் கடல்சார் கல்வி
மே 10, 2025 12:00 AM
மே 10, 2025 12:00 AM

சோழர்காலம் முதல் இன்று வரையில் கப்பல்துறையில் சிறந்து விளங்கும் நாடெனில் அது நமது பாரதம்தான். இவ்வுலகில் சுமார் 70 சதவீதத்திற்கு அதிகமான ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகள் கப்பல் மூலமாகவே நடைபெறுகிறது. நமது தேசிய கல்வி கொள்கை 2020வும் திறன்மிகு கல்வியை ஊக்குவிக்கும் நிலையில், கடல்சார் கல்வி அவசியம் பெறுகிறது.
இத்துறைக்கான வேலைவாய்ப்பும், ஊதியமும் அதிகம். குறிப்பாக, பி.எஸ்சி.,-நாட்டிக்கல் சயின்ஸ், பி.இ. -மரைன் இன்ஜினியரிங் படிப்புகள் முடித்த பிறகு கப்பலில் மாலுமிகளாகவும், பொறியாளராகவும் சுமார் 4 லட்சம் வரை மாதசம்பளமாக பெரும் வாய்ப்புள்ளது. இந்த பணிகள் சர்வதேச கடலோரப்பகுதிகளை சார்ந்திருப்பதால், வரிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களும் சாதிக்கலாம்
அதேபோல் இந்த துறை சார்ந்த படிப்பும், வேலையும் ஒரு காலத்தில் ஆண்களுக்கு மட்டுமே உரித்தானது என்ற நிலைமை இருந்தது. அதுவும் இப்போது முற்றிலும் மாறியுள்ளது. கடல்சார் சர்வதேச அமைப்பானது கப்பல் துறையில் பெண்களின் பங்கை ஊக்குவிக்கிறது. கப்பல்துறையில் உலகின் தலைசிறந்த நிறுவனங்களான மெர்ஸ்க், சி.எம்.ஏ.சி.ஜி.எம்., வி-ஷிப் போன்ற நிறுவனங்கள் பெண்களுக்கு முன்னுரிமை வழங்குகின்றன.
தகுதிகள்
பி.எஸ்சி.,-நாட்டிக்கல் சயின்ஸ், பி.இ.,-மரைன் இன்ஜினியரிங் படிப்புகளை வழங்க, ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனமும் கப்பல் போக்குவரத்து இயக்குனரகத்தின் அனுமதி பெற்றிருக்க வேண்டும். இப்படிப்புகளில் சேர்க்கை பெற போக்குவரத்து இயக்குனரகத்தின் அனுமதி பெற்றிருப்பதும் அவசியமாகிறது.
மேலும், இத்தகைய படிப்புகளை பயில மாணவர்கள் உடல்தகுதியும், சரியான கண் பார்வையும் பெற்றிருப்பது மிகவும் அவசியம். அதேபோல், வண்ண குருட்டுத்தன்மை (கலர் பிலைண்டர்ஸ்) இருத்தல் கூடாது. கப்பலில் பயணித்து வேலைபார்க்க உள்ளதால் இத்தகைய உடல் தகுதிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த துறையில் சேர்ந்து பயில இயற்பியல், கணிதம் மற்றும் வேதியியல் பாடங்களில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்ணும் எடுத்திருக்க வேண்டும்.
இந்த படிப்புகளில் சேர்க்கை பெற இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்படும் ஐ.எம்.யு., சி.இ.டி., என்ற நுழைவுத்தேர்வை எழுத வேண்டும்.
-முத்தெழிலன் ராதாகிருஷ்ணன், கல்வியாளர்.