/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
மாணவர்களுக்கு விமானத்துறையில் திறந்துள்ள கதவுகள்
/
மாணவர்களுக்கு விமானத்துறையில் திறந்துள்ள கதவுகள்
மே 12, 2025 12:00 AM
மே 12, 2025 12:00 AM

விமானத்துறையில் பணிபுரிய பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று அவசியமில்லை என விஞ்ஞானி டில்லிபாபு கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழரான ராணுவ விஞ்ஞானி டில்லி பாபுவுடன் நேர்காணல்:
தேசிய தொழில்நுட்ப தினம் முக்கியத்துவம்?
ஒரு தேசத்தின் வளர்ச்சி நிலையான வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்றால், அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சியாக இருக்க வேண்டும். நம் நாட்டில் நடந்த பல புரட்சிகள், அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்தவையே. வரலாற்றில் நமது தேசம் பஞ்சங்களால் பாதிக்கப்பட்ட செய்திகள் உண்டு.
நம் தேசத்தை, படிப்படியாக உணவு தன்னிறைவு பெற்ற தேசமாக மாற்றிய பல காரணிகளுள் பசுமைப்புரட்சி, வெண்மைப்புரட்சிகளும் உள்ளன. வெண்மைப்புரட்சியின் ஒரு தொழில்நுட்ப முயற்சியாக, எருமை பாலில் இருந்து பால் பவுடர் உருவாக்கப்பட்து, நமது தேசத்தின் பால் தன்னிறைவுக்கு ஒரு வழியாக அமைந்தது. இது தான் தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கம். இது போன்ற தொழில்நுட்ப வரலாறுகளை மாணவர்களிடம் கூறும் போது, அவர்களும், இது போன்ற சாதனைகளை எதிர்காலத்தில் செய்ய ஏதுவாகும்.
விமானத்துறையில் நம் வளர்ச்சி?
ரைட் சகோதரர்கள் விமானத்தை உருவாக்கிய போது, அது பயணியர் விமானமாக செயல்படவில்லை. மாறாக, அமெரிக்க ராணுவத்தின் போர் விமானமாக பயன்படுத்தப்பட்டது. இதற்கு காரணம், போரின் போது, உயரத்தில் இருப்பவர்களுக்கே நன்மை அதிகம் கிடைக்கிறது. இதனால், உலக அளவில் வானில் வட்டமடிக்கும் தொழில்நுட்பங்களுக்கான தேவை அதிகமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டே, முதன் முதலாக 1951ல் ஹெச்.டி., - 2 என்ற விமானத்தை இந்தியா வடிவமைத்தது.
பிறகு 1961ல் ஹெச்.எப்.-, 24 அல்லது மாருத் என்ற முதல் போர் விமானத்தை நம் நாடு உருவாக்கியது. இதையடுத்து விமானத்துறையில் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 2001ல் தேஜஸ் என்ற நான்காம் தலைமுறை போர் விமானத்தை உருவாக்கி சாதனை படைத்தோம். தற்போதும், பல ஆராய்ச்சிகள் நடக்கின்றன. போர் விமானம் மட்டுமின்றி ஹன்சா, சாரஸ் உள்ளிட்ட சிவில் விமான முயற்சிகளும் இந்தியாவில் நிகழ்ந்து வருகின்றன.
பெங்களூருக்கும், விமானத்துறைக்கும்...
பெங்களூரை விமான தலைநகரம் என்று சொல்ல கூடிய அளவிற்கு விமானத்துறை சார்ந்த நிறைய ஆராய்ச்சிகளும், முன்னெடுப்புகளும் நடந்து வருகின்றன. இந்தியா 1951ல் முதன் முதலில் உருவாக்கிய ஹெச்.டி., 2 விமானம்; 1961ல் உருவாக்கிய ஹெச்.ப்., - 24 என்ற முதல் போர் விமானம், எல்.சி.ஏ., எனும் இலகுரக போர் விமானம், பயணியர் விமானமான சாரஸ் போன்ற பல விமானத்திட்டங்கள் பெங்களூரில் உள்ள ஏ.டி.ஏ., மற்றும் ஹெச்.ஏ.எல், தேசிய விமானவியல் முகமை மற்றும் தேசிய விமானவியல் ஆய்வகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளன.
டி.ஆர்.டி.ஓ., எனும் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனங்களின் விமானவியல் தொடர்பான ஆய்வகங்கள் பெங்களூரில் உள்ளன. விமானப் பொறியியலில் கல்வியில் சிறப்பு பெற்ற இந்திய அறிவியல் கழகம் பெங்களூரில் உள்ளது. விமானத்தை உருவாக்குவது முதல் பறக்கவைப்பது, சோதனை செய்வது, பராமரிப்பது போன்ற அனைத்து தொழில்நுட்பக் கட்டமைப்பு வசதிகளும் பெங்களூரில் உள்ளன.
போர் விமானிகளின் இருக்கையின் சிறப்பு?
போர் விமானியின் இருக்கை பைரோ காட்ரிஜ் எனும் வெடிமருந்து குப்பிகளின் மீது அமைந்து உள்ளது. விமானி இருக்கையை மூடியுள்ள கேனோபி என்ற கண்ணாடிக் கதவிலும் வெடி பொருள் பொருத்தப்பட்டிருக்கும். அவசர காலத்தில் விமானி வெளிவர வேண்டும் என்றால், முதலில் வெடி பொருள் உசுப்பப்படும்; கண்ணாடி கதவு அகற்றப்படும். தொடர்ந்து இருக்கைக்கு அடியில் பொருத்தப்பட்ட வெடிபொருள் இயக்கப்படும். இதன் பின் இருக்கையுடன் விமானி விமானத்தை விட்டு அதிவேகத்தில் வெளியேற்றப்படுவார்.
அந்த இருக்கையில் பொருத்தப்பட்டிருக்கும் சிறியரக பாராசூட் முதலில் விரிந்து, பிறகு பெரிய பாராசூட்டை விரிக்கும். இதன் மூலம், விமானி பத்திரமாக தரையிறங்குவார். இந்த இருக்கையினுள் உடனடி உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 'உயிர்பிழைப்புப் பெட்டி'யும் இருக்கும். பெரிய பதவிகளில் உள்ளோர் தங்கள் இருக்கையை காப்பாற்ற முயற்சிப்பர். ஆனால், போர் விமானியை, அவரது இருக்கை தான் காப்பாற்றுகிறது!
பாராசூட்டின் பயன்பாடுகள்
போர் விமானிகளின் உயிரை காத்து கொள்வதற்கு மட்டும் பாராசூட் பயன்படுவதில்லை. மேலும் பல விஷயங்களுக்கு பயன்படுகிறது. எதிரி நாடுகளுக்கு சென்று அதிரடி படை வீரர்கள் தாக்குதல் நடத்தும் போது, அவர்கள் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் தரையிறங்கி தாக்குதல் தொடுப்பர். அவர்களை பேரா ட்ரூப்பர்ஸ் என ஆங்கிலத்தில் அழைப்பர். போர்முனையில் உள்ள ராணுவ வீரர்களுக்கு தேவையான உபகரணங்கள், கவச வாகனங்களை விமானங்கள் மூலம் தரையில் இறக்குவதற்கும் பாராசூட் பயன்படுகிறது.
அளவில் சிறிய ஓடுபாதைகளில் போர் விமானங்கள் குறுகிய நேரத்தில் தரையிறங்கவும், அவற்றின் வேகத்தை குறைக்கவும் வால்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாராசூட் பயன்படுகிறது.
விமானத்துறையில் கால் பதிக்க...
விமானம் மற்றும் விண்வெளி சார்ந்த மூன்று படிப்புகள் உள்ளன.
1. விமானவியல் அல்லது ஏரோநாடிக்ஸ் - வளிமண்டலத்திற்குள் இயங்கும் விமானங்கள் குறித்த படிப்பு
2. விண்வெளியியல் அல்லது ஆஸ்ட்ரோநாடிக்ஸ் - வளிமண்டலத்தை தாண்டி விண்வெளியில் இயங்க கூடிய செயற்கை கோள்கள், ஏவுகணைகள், விண்வெளி நிலையங்கள் குறித்த படிப்பு
3. வான்வெளியியல் அல்லது ஏரோ ஸ்பேஸ் - மேற்கூறிய இரண்டு படிப்புகளையும் இணைத்ததே.
ஏரோநாடிக்ஸ் அல்லது ஏரோஸ்பேஸ் பட்டப் படிப்புகளை படிப்பதன் மூலம் விமானத்துறையில் நுழையலாம்.
விமானத்துறையில் பயிற்சி நிறுவனங்கள்
விமானவியல் சார்ந்த படிப்புகளை தவிர, பொறியியல் துறையில் பல துறையை சார்ந்தவர்களும் விமானத்துறையில் பணியாற்றலாம் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், மின்னணு தகவல் தொடர்பியல்., உலோகவியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பொறியியல் படிப்புகள், கணிதவியல், இயற்பியல் உள்ளிட்ட அறிவியல் பட்ட மேற்படிப்புகளை படித்தவர்களும் விமானத்துறையில் பணியாற்றலாம். இதுமட்டுமின்றி, ஏரோஸ்பேஸ் மெடிசன் துறையில் மருத்துவர்கள் பயின்று தேர்ச்சி பெறுவதன் மூலம், அவர்களும் விமானத்துறையில் நுழையலாம்.
இது தவிர சிவில் விமானப் போக்குவரத்து துறையிலும் உதிரி பாக உற்பத்தி, பராமரிப்பு, விமான போக்குவரத்து மேலாண்மை, ஏர் க்ரூ எனப்படும் விமான சேவைக்குழு என பல வாய்ப்புகள் உள்ளன. அதற்கான பயிற்சி நிறுவனங்கள் உள்ளன.
பட்டம் பெறாதவர்களும் பணியாற்றலாமா?
பட்டப்படிப்பு படித்தவர்கள் மட்டுமின்றி டிப்ளோமோ இன்ஜியனிரிங், ஐ.டி.ஐ., படித்தவர்கள் விமான உற்பத்தி, உபகரணங்கள் உற்பத்தி, சோதனைகள், பராமரிப்பு போன்றவற்றை செய்யும் நிறுவனங்களில் பணிகளை மேற்கொள்ள முடியும். விமானப் பராமரிப்புக்கென தனியாக சான்றிதழ் படிப்புகளும் உள்ளன.
பயணியர் விமானி ஆவது எப்படி?
பிளஸ் 2 வில், கணிதவியல், இயற்பியல் பாடங்களை கட்டாயம் படித்திருக்க வேண்டும். இவர்கள், டி.ஜி.சி.ஏ., எனும் பொது விமான இயக்குனரகம் நடத்தும் தேர்வை எழுத வேண்டும். இதில் ஐந்து பாடங்கள் உள்ளன. இது குறித்து டி.ஜி.சி.ஏ.,வின் இணையதளத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த தேர்வை எழுத பயிற்சி கூடங்கள் உள்ளன. எழுத்து தேர்வுகளில் வெற்றி பெறுவோர், மாணவ விமானி உரிமத்தை வாங்க வேண்டும். இதன்பின், ஒரு மாணவர் 200 மணி நேரம், விமானத்தை இயக்கி பயிற்சி பெற வேண்டும். அதிலும், 100 மணி நேரம் தனியாக இயக்க வேண்டும்.
இதன்பின், நடத்தப்படும் தேர்வில், தேர்ச்சி பெற்றால் சி.பி.எல்., எனும் கமர்சியல் பைலட் லைசென்ஸ் வழங்கப்படும். இந்த லைசென்ஸ் பெற்றவர்கள் ரேடியோ டெலிபோன் ஆப்பரேட்டர் எனும் பயிற்சியை பெற்று, அதற்கான சான்றிதழ் பெற வேண்டும். குறிப்பிட்ட வகையான பயணியர் விமானத்தை இயக்க, அந்த வகை விமானத்தில் டைப் ரேடிங் என்ற அங்கீகாரத்தை பெறுவதும் அவசியம். இதுவே விமானி ஆவதற்கான வழிமுறைகள். விமானி ஆவதற்கு, அரசு பயிற்சி நிறுவனங்களில் ஏறக்குறைய 55 லட்சம் ரூபாய் முதல் 60 லட்சம் ரூபாய் வரை செலவாகலாம். இதற்கு வங்கிகளில் கல்விக் கடனுதவி கிடைக்கும்.
விமானத்துறை வேலைவாய்ப்புகள்
விமானத்துறையில் ஆராய்ச்சி, வடிவமைப்பு, உற்பத்தி, பராமரிப்பு போன்றவற்றில் நிறைய வேலைகள் உள்ளன. டி.ஆர்.டி.ஓ., - என்.ஏ.ஏல்., - ஹெச்.ஏ.எல்., போன்ற நிறுவனங்களிலும்; விமானத்துறையில் உள்ள தனியார், பன்னாட்டு நிறுவனங்களிலும் உள்ளன. வேலைக்காக காத்திருக்காமல் ஸ்டார்ட் அப் என்ற துளிர் நிறுவனங்களை உருவாக்கி, வேலையை துவங்கலாம். பாதுகாப்பு தொழில்துறை தடம் என்ற புதிய திட்டம் தமிழகம், உத்தர பிரதேசத்தில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் தமிழகத்தில் சென்னை, கோவை, ஓசூர், திருச்சி, சேலம் ஆகிய ஐந்து இடங்களில் வான்வெளி பாதுகாப்பு துறைக்கான பூங்காக்கள், ஆய்வகங்கள், தொழிற்சாலைகள் நிறுவப்பட உள்ளன. இதற்காக, பல்வேறு தொழில் நிறுவனங்கள் ஏறக்குறைய 4,700 கோடி ரூபாய் முதலீடு செய்து உள்ளன. விரைவில் விமானத்துறையில் பலருக்கும் வேலை கிடைக்கும்.
ஹெலிகாப்டர்களின் பணி என்ன?
ஹெலிகாப்டர்கள் தரையிறங்க ஓடுபாதை தேவையில்லை. சமதள தரையில் தரையிறங்க முடியும். தரையிறங்கிய இடத்திலிருந்து நேரடியாக மேலே பறக்கலாம். ஹெலிகாப்டரால் வானில் ஒரே இடத்தில் நிலையாகவும், தரைப்பகுதிக்கு மிக அருகிலும் பறக்க முடியும். இதனால், முக்கிய பிரமுகர்களின் பயணம், இயற்கை பேரிடர் மீட்பு, வான் ஆம்புலன்ஸ், வனப்பகுதியில் தீயணைப்பு என பல சூழல்களில் ஹெலிகாப்டருக்கான தேவை அதிகமாக உள்ளது.
நம் நாடு ஹெலிகாப்டர் துறையில் வேகமாக முன்னேறி வருகிறது. மேம்பட்ட இலகு ஹெலிகாப்டர் - ஏ.எல்.ஹெச்.,; இலகு போர் ஹெலிகாப்டர் - எல்.சி.ஹெச்.,; இலகு பயன்பாட்டு ஹெலிகாப்டர் - எல்.யு.ஹெச்., என பலவகை ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
விமானத்துறையில் தடம் பதிக்க விரும்பும் மாணவர்கள், ஹெலிகாப்டர் துறையிலுள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.