/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
அனைத்து மாணவர்களுக்கும் வேளாண்மை கல்வி!
/
அனைத்து மாணவர்களுக்கும் வேளாண்மை கல்வி!
மே 15, 2025 12:00 AM
மே 15, 2025 12:00 AM

ஒருவர் மற்றவர்களை சார்ந்து இயங்குவதே சமூகம். அதேபோல், ஒரு துறையை சார்ந்தவர், பிற துறையினருடன் இணைந்தே செயல்படுகின்றனர். அவ்வாறு பிற துறையினருடன் இணைந்து செயல்படுவதற்கு, இதர துறைகள் குறித்த திறனையும், அறிவைவும் வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
அதேபோல், இன்றைய காலத்தில் எந்த ஒரு இன்ஜினியரும் தனித்து செயல்பட இயலாது. மெக்கானிக்கல் இன்ஜினியர் மெக்கானிக்கல் துறை சார்ந்த அறிவை மட்டுமே கொண்டு செயல்பட முடியாது. கம்ப்யூட்டர் இன்ஜினியர் கம்ப்யூட்டர் துறை சார்ந்த அறிவை மட்டுமே கொண்டு செயல்பட முடியாது. எந்த ஒரு துறை இன்ஜினியரும் அவர்களது துறையில் ஆழ்ந்த அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதே தருணம் இதர துறைகள் சார்ந்த செயல்பாட்டு அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
ஆட்டோமேஷன், ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் அனைத்தும் மனிதர்களின் வாழ்க்கையை எளிதாக்குகின்றன. இத்தகைய முன்னேற்றங்கள் தொடரும்பட்சத்தில் ஒரு காலகட்டத்தில் சமுதாய கட்டுப்பாடுகள் உடையும்; ஏற்றத்தாழ்வுகள் குறையும். நீண்ட காலத்தை ஒப்பிட்டால் புதிய வாய்ப்புகளும், பணி செய்யும் முறையும் மாற்றம் காணுமே தவிர, வேலைவாய்ப்புகள் குறையாது. மனிதர்கள் தோன்றிய காலத்தில் இருந்து தற்போதைய நிலையை கவனிக்கும்பட்சத்தில் ஏராளமான மாற்றங்களும், முன்னேற்றங்களும் நிகழ்ந்துள்ளன. எதிர்காலத்தில் ஏராளமான முன்னேற்றங்கள் தொடர்ந்து, அனைவருக்கும் அனைத்தும் சாத்தியமாகும் நிலை உருவாகும்.
ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்
மனிதர்கள் செய்யும் பெரும்பாலான வேலைகளை இன்று, 'ஹுமானாய்டு' செய்யும் வகையில் நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. மனித மூளை செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே, இன்று 'ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்' செயல்படுகிறது. அதேபோல், மனித கை மற்றும் கால் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே 'மெக்கானிக்கல் இன்ஜினியரிங்' செயல்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு துறையின் செயல்பாடும், இயற்கையில் இருந்தே நிகழ்கின்றன. இயற்கையை பார்த்து, இயற்கையை புரிந்து அவற்றில் இருந்தே அனைத்து கண்டுபிடிப்புகளும் நிகழ்கின்றன. இதுவரை இயற்கையில் இருந்து மனிதர்கள் கற்றவற்றை, இயந்திரங்களை கற்றுக்கொள்ளச் செய்கிறோம். அதுவே, 'ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்'.
இச்சூழலில், அனைத்து மாணவர்களையும் முழுமையான மனிதராக்க வேண்டும் என்பதே எங்களது கல்வி நிறுவனத்தின் பிரதான குறிக்கோள். அத்தகைய குறிக்கோளை அடைய, ஒரு இன்ஜினியர் பல்வேறு விதமான துறை சார்ந்த அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஆகவேதான், அனைத்து துறை சார்ந்த மாணவர்களுக்கும், இதர துறைகள் குறித்த அடிப்படை அறிவை வழங்கும் வகையில் பயிற்சி அளிக்கிறோம்.
அனைத்து துறை சார்ந்த மாணவர்களுக்கும் வேளாண்மை பாடம் செயல்முறையில் கற்பிக்கப்படுகிறது. அதேபோல், ஆட்டோமொபைல் சார்ந்த பயிற்சியும், பயாலஜி குறித்த அறிவையும் அனைத்து துறை சார்ந்தவர்களுக்கு வழங்குகிறோம். முதலாம் ஆண்டு மாணவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு, குழுவுக்கு 5 சென்ட் நிலம் வீதம் வழங்கப்படுகிறது. மாணவர்களே அந்த இடத்தை பராமரித்து, பயிரிடவும் ஊக்கம் அளிக்கிறோம். கார் உட்பட வாகனங்கள் இயங்கும் விதம், மோட்டரின் செயல்பாடு, மின்சாரம் செயல்படும் விதம் உட்பட அடிப்படைகளை அனைத்து துறை சார்ந்த மாணவ, மாணவிகளும் அறிந்துகொள்ளும் வகையில் சிறப்பு பயிற்சி அளிக்கிறோம்.
-தங்கவேலு, தலைவர், ஸ்ரீசக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கோவை.