அறிவியல் முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் மூலக்கூறு உயிரியல்
அறிவியல் முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் மூலக்கூறு உயிரியல்
ஜூலை 09, 2026 12:38 PM
ஜூலை 09, 2026 12:38 PM

மூலக்கூறு உயிரியல் தொழில்நுட்பப் படிப்பு என்பது உயிரணுக்கள் மற்றும் அவற்றின் மூலக்கூறு மட்டத்திலான செயல்பாடுகளை ஆராய்ந்து, அந்த அறிவை மருத்துவம், வேளாண்மை, மருந்தியல், உணவு தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பயன்படுத்தக் கற்றுத்தரும் ஒரு நவீன உயிரியல்துறை படிப்பாகும்.
படிப்புகள்
பி.எஸ்சி., மூலக்கூறு உயிரியல் தொழில்நுட்பப் படிப்பு: பிளஸ் 2ல் இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற அறிவியல் பாடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேரலாம்.
எம்.எஸ்சி., மூலக்கூறு உயிரியல் தொழில்நுட்பப் படிப்பு: உயிரியல், உயிரித்தொழில்நுட்பம், உயிரி வேதியியல் அல்லது தொடர்புடைய துறைகளில் பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் சேரலாம்.
எம்.டெக்., மூலக்கூறு உயிரியல் தொழில்நுட்பப் படிப்பு: உயிரித்தொழில்நுட்பம், மரபணு பொறியியல், உயிரி வேதியியல் அல்லது தொடர்புடைய துறைகளில் பட்டப்படிப்பு (பி.டெக்., /பி.எஸ்சி.,) முடித்தவர்கள் சேரலாம்.
கற்கும் திறன்கள்
மாணவர்கள் டி.என்.ஏ., ஆர்என்.ஏ., புரதங்கள் போன்ற உயிரியல் மூலக்கூறுகளை ஆய்வு செய்வது, மரபணு பொறியியல் மற்றும் கிளோனிங் நுட்பங்கள், பயோ இன்பர்மேடிக்ஸ் பயன்பாடு, ஆய்வக ஆராய்ச்சி திறன்கள், தரவு பகுப்பாய்வு, மற்றும் உயிரியல் பிரச்சனைகளுக்கு தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்கும் திறன்களை கற்கின்றனர்.
வேலை வாய்ப்பு
உயிரித்தொழில்நுட்ப நிறுவனங்கள், மருந்து மற்றும் மருத்துவ ஆய்வகங்கள், ஆராய்ச்சி மையங்கள், வேளாண் மற்றும் உணவு தொழில்நுட்ப துறைகள், மருத்துவமனை ஆய்வகங்கள், மேலும் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி துறைகளில் வேலை வாய்ப்புகளைப் பெறலாம்.
வெளிநாட்டு வேலை வாய்ப்புகள்
வெளிநாடுகளில் மருந்து நிறுவனங்கள், ஜெனோமிக்ஸ் மற்றும் புரோட்டோமிக்ஸ் ஆராய்ச்சி மையங்கள், மருத்துவ ஆய்வகங்கள், வேளாண் மற்றும் உணவு தொழில்நுட்ப நிறுவனங்கள், உயிரி மருந்து உற்பத்தி துறைகள் போன்ற இடங்களில் வேலை வாய்ப்புகளைப் பெறலாம். அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளில் ஆராய்ச்சி, தரக் கட்டுப்பாடு, உயிரி தகவலியல், மருத்துவத் துறை சார்ந்த பணிகளில் நிபுணர்களுக்கு அதிகமான தேவை உள்ளது.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு
மரபணு மாற்றம், மருந்து கண்டுபிடிப்பு, புற்றுநோய் மற்றும் பிற நோய்களுக்கு சிகிச்சை முறைகள், தடுப்பூசி உருவாக்கம், வேளாண் மற்றும் உணவு தரத்தை மேம்படுத்தும் புதிய தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் ஆராய்ச்சி நடைபெறுகிறது. புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமையான பயன்பாடுகள் மூலம் மனித நலம், வேளாண் உற்பத்தி மற்றும் தொழில்துறை முன்னேற்றத்திற்கு இந்தத் துறை பெரும் பங்களிப்பு செய்து வருகிறது.
