தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/மானியங்கள் தொடரலாம்; ஆனால், நிபந்தனைகள் தேவை!

மானியங்கள் தொடரலாம்; ஆனால், நிபந்தனைகள் தேவை!

மானியங்கள் தொடரலாம்; ஆனால், நிபந்தனைகள் தேவை!


ஜூலை 06, 2026 10:24 AM

ஜூலை 06, 2026 10:24 AM

Follow on GoogleFavourite on Google

ஜூலை 06, 2026 10:24 AM ஜூலை 06, 2026 10:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சீன அரசு தன் நிறுவனங்களுக்கு எந்த நிபந்தனையும் இன்றி பணத்தை வாரி வழங்குகிறது. அதனால் தான், சீன நிறுவனங்கள் உலக சந்தையை கைப்பற்றியுள்ளன என்ற கருத்து நம் நாட்டில் பரவலாக நிலவுகிறது. இந்த நம்பிக்கையின் தாக்கத்திலேயே இந்தியாவின் தொழில் கொள்கைகளும் வடிவமைக்கப்பட்டதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், சீனாவின் உண்மையான அனுபவம் இதற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சீன அரசு, நிறுவனங்களுக்கு வழங்கும் ஆதரவு, ஆண்டுதோறும் உயர்த்தப்படும் தொழில்நுட்ப தரநிலைகள், ஆராய்ச்சி முதலீடு மற்றும் செயல்திறன் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2001ம் ஆண்டு, உலக வர்த்தக அமைப்பில் இணைந்த பின், சீனா தன் தொழில் துறைக்கு மிகப்பெரிய அளவில் மானியங்கள் வழங்கியது. மலிவான நிலம், குறைந்த கட்டணத்தில் மின்சாரம், அரசின் வளர்ச்சி வங்கிகளில் எளிய கடன்கள் மற்றும் எந்த கடுமையான செயல்திறன் நிபந்தனைகளும் இல்லாத நிதி உதவிகள் வழங்கப்பட்டன. 2010 முதல் 2012 வரை மட்டும் சீன வளர்ச்சி வங்கி, 15 சூரிய மின்சக்தி நிறுவனங்களுக்கு 4,300 கோடி அமெரிக்க டாலர் கடன் வழங்கியது. இதில், எல்.டி.கே., சோலார் நிறுவனத்திற்கு 890 கோடி டாலரும், சன்டெக் நிறுவனத்திற்கு 730 கோடி டாலரும் வழங்கப்பட்டன.

நிபந்தனையற்ற ஆதரவு

இந்த நிதி உதவிகளுக்கு ஆராய்ச்சி, தொழில்நுட்ப மேம்பாடு அல்லது செயல்திறன் தொடர்பான எந்த நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை.

இந்த கட்டுப்பாடற்ற மானிய முறை விளைவாக பல பிரச்னைகள் உருவாகின. ஒரு காலத்தில் உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி உற்பத்தியாளராக இருந்த சன்டெக் நிறுவனம் 2013ல் திவாலானது. அதை தொடர்ந்து, எல்.டி.கே., சோலார் நிறுவனமும் வீழ்ச்சியடைந்தது.

மின்சார பேருந்துகளுக்கான மானிய திட்டத்திலும் மோசடிகள் நடைபெற்றன. பேருந்தின் நீளம் மற்றும் பேட்டரியின் அறிவிக்கப்பட்ட திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மானியம் வழங்கப்பட்டதால், பல நிறுவனங்கள் தரமற்ற பேட்டரிகளை பொருத்தி அதிக மானியம் பெற்றன.

இல்லாத பேருந்துகளுக்கு கூட மானியம் பெற்ற சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சில நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.

கடந்த 2016ல் அந்நாட்டு நிதி அமைச்சர் லுா ஜிவெய், நீண்ட கால மானியங்கள் அளிப்பது, நிறுவனங்களை அரசின் உதவியை மட்டுமே சார்ந்திருக்கும் நிலைக்கு தள்ளுவதாகவும், ஆராய்ச்சி மற்றும் புதுமைக்கான ஊக்கத்தை குறைப்பதாகவும் எச்சரித்தார்.

மேலும், மானியங்களுக்கு கடுமையான தரநிலைகள் விதிக்கப்படும் என்றும், மோசடியாளர்களுக்கு எந்தவித இரக்கமும் காட்டப்படாது என்றும் அவர் அறிவித்தார். இதன் பின், சீனா தன் மானிய முறையை முழுமையாக மாற்றியது.

மின்சார வாகனங்களுக்கு வழங்கப்படும் மானியம், பேட்டரியின் ஆற்றல் அடர்த்தி, மின்சார நுகர்வு திறன், உண்மையான பயன்பாடு, நேரடி கண்காணிப்பு, மோசடி கண்டறியப்பட்டால் மானியத்தை திரும்ப பெறுதல் போன்ற கடுமையான நிபந்தனைகளுடன் இணைக்கப்பட்டது. இதன் விளைவாக, மானியம் பெறும் வாகன மாதிரிகளின் எண்ணிக்கை 2017ல் இருந்த 3,400 என்ற அளவு, 2019ல் 1,500 ஆக குறைந்தது.

இ-பேட்டரி தயாரிப்பு, சூரிய மின்சக்தி, செமிகண்டக்டர் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் மானியங்கள் இணைக்கப்பட்டன. சி.ஏ.டி.எல்., - பி.ஒய்.டி., நிறுவனங்கள் ஆராய்ச்சிக்காக ஏராளமான தொகை செலவிட்டன. ஹூவெய் நிறுவனம் தன் வருமானத்தின் 20 சதவீதத்தை ஆராய்ச்சிக்காக ஒதுக்கியது.

மறுபுறம், 2018க்கு பின் தொடங்கப்பட்ட 500 மின்சார வாகன நிறுவனங்களில், 400க்கும் மேற்பட்டவை மூடப்பட்டன; அவற்றை அரசு காப்பாற்றவில்லை. 2018 முதல் சீனா, 'லிட்டில் ஜெயன்ட்ஸ்' என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்த அங்கீகாரம் பெற, ஒரு நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளில், வருவாயின் குறைந்தபட்சம் 3 சதவீதத்தை ஆராய்ச்சிக்காக செலவிட்டிருக்க வேண்டும். குறைந்தது இரண்டு கண்டுபிடிப்பு காப்புரிமைகள் பெற்றிருக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு பின் மதிப்பீடு செய்யப்பட்டு புதுப்பிக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும்.

ஆராய்ச்சியில் அலட்சியம்


ஆனால், நம் நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை புள்ளிவிபரங்களின்படி, நாட்டின் ஜி.டி.பி.,யில் ஆராய்ச்சிக்கான செலவு வெறும் 0.64 சதவீதம். தனியார் நிறுவனங்கள் தேசிய ஆராய்ச்சி செலவில் 36.40 சதவீதம் மட்டுமே பங்களிக்கின்றன.

ஆனால், சீனா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் இந்த விகிதம் 76 முதல் 80 சதவீதம் வரை உள்ளது. இந்திய தனியார் உற்பத்தி நிறுவனங்கள் தங்களது வருவாயில் சராசரியாக 1.46 சதவீதத்தை மட்டுமே ஆராய்ச்சிக்காக செலவிடுகின்றன. இது, சீனாவின் லிட்டில் ஜெயன்ட்ஸ் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட 3 சதவீதத்தை விட மிகவும் குறைவு.

கடந்த 2020ல் நம் நாட்டில் தொடங்கப்பட்ட பி.எல்.ஐ., எனப்படும் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம், பெரும்பாலும் உற்பத்தி அளவு மற்றும் முதலீட்டை மட்டுமே அடிப்படையாக கொண்டுள்ளது. ஆனால், ஆராய்ச்சி முதலீடு, காப்புரிமைகள், தொழில்நுட்ப முன்னேற்றம், செயல்திறன் மதிப்பீடு, தோல்வியடைந்தால் மானியத்தை திரும்ப பெறுதல் போன்ற அம்சங்கள் இதில் இல்லை என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சீனாவின் வெற்றிக்கு காரணம், கட்டுப்பாடற்ற மானியங்கள் அல்ல; மாறாக, ஆராய்ச்சி, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் கடுமையான செயல்திறன் நிபந்தனைகளுடன் இணைக்கப்பட்ட அரசு ஆதரவு தான். இந்திய நிறுவனங்களுக்கு திறன் இல்லை என்பதல்ல பிரச்னை. எனவே, இந்திய தொழில் கொள்கையில் மானியங்கள் தொடரலாம். ஆனால், அவை ஆராய்ச்சி, புதுமை, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் அளவிடக்கூடிய செயல்திறனுடன் இணைக்கப்பட வேண்டும் என்பதே, இந்த அனுபவம் உணர்த்தும் முக்கிய பாடம்.

- ராகவன் எஸ் ராவ்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us