மே 17, 2026 11:48 AM
மே 17, 2026 11:48 AM

நீட் நுழைவுத்தேர்வு அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நடத்தப்படும் என்று, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இது குறித்து கல்வியாளர்கள் தெரிவித்த கருத்துக்கள் இதோ...
முறைகேடுகளை கட்டுப்படுத்தும் நீட் தேர்வு
முறைகேடுகளை தவிர்க்க ஆன்லைன் முறையில் தேர்வுகள் நடத்தப்படுவது வரவேற்கத்தக்கது. முறைகேடுகளை கட்டுப்படுத்த முடியும். ஊரக பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களில் அதிவேக இணையத்தை, தடையற்ற மின்சாரத்தை உறுதி செய்ய வேண்டும். நாடு முழுவதும் ஆன்லைன் மாதிரி தேர்வை நடத்தி, நடைமுறையில் எழும் பிரச்னைகளை ஆய்வு செய்ய வேண்டும். முறைகேடுகளை தடுக்க தாமதமின்றி பிளஸ் 2 தேர்வுகள் முடிந்த உடனேயே, நீட் தேர்வுகளை நடத்த வேண்டும்.
- ஜெயப்பிரகாஷ் காந்தி
பயிற்சி மையங்கள் உஷார்
கணினி வழியில் நடத்தப்படுவது வரவேற்கத்தக்கது. வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளுக்கும் பிரதானப் புள்ளி, பயிற்சி மையங்கள் தான். பள்ளி, கல்லுாரி, பல்கலைகளைப் போல எந்த இணைப்பு முறையும் இன்றி இந்த மையங்கள் துவங்கப்படுகின்றன. அரசின் எந்த கட்டுப்பாடுமின்றி இந்த கல்வி மையங்கள் இயங்குவது ஆபத்தானது. பயிற்சி மையங்களை கண்காணிக்க ஒரு நிரந்தர அமைப்பை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும். நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வு பயிற்சி மையங்களுக்கு தரநிலையை கட்டாயமாக்க வேண்டும்.
- லெனின்பாரதி
மாநில ஒதுக்கீட்டிற்கு நீட் விலக்கு
ஆன்லைன் முறையில் நீட் தேர்வு நடத்துவது வரவேற்கத்தக்கது. தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தேசிய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டுமே நீட் தேர்வு நடத்த வேண்டும். மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். ஏழை மாணவர்களுக்காக உணவு, இருப்பிட வசதியுடன் இலவச பயிற்சி மையங்களை தேசிய தேர்வு முகமை மாவட்டம்தோறும் ஏற்படுத்த வேண்டும். மருத்துவ மாணவர் சேர்க்கையை முழுமையாக அரசே நடத்த வேண்டும்.
- ரவீந்திரநாத்
மாநிலங்கள் நடத்துவதே தீர்வு
ஆன்லைன் தேர்வால் மோசடிகள் குறையும் என உறுதியளிக்க முடியாது. அதிக முறைகேடுகள், குளறுபடிகளுக்கு வழிவகுக்கும். இதற்கு ஒரே தீர்வு, அந்தந்த மாநிலங்களே நீட் தேர்வை நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும். தேசிய ஒதுக்கீட்டிற்கான 15 சதவீத இடங்களுக்கு வேண்டுமானால், நீட் தேர்வை நடத்தலாம். ஒரு மாநிலத்தில் முறைகேடு கண்டறியப்பட்டால், அங்கு மட்டும் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு வைக்கலாம். பல லட்சம் மாணவர்கள் பாதிப்படைவதை தடுக்கலாம்.
- நெடுஞ்செழியன்
