/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
பணியாளர்களின் பங்கும் பாங்கும்
/
பணியாளர்களின் பங்கும் பாங்கும்
டிச 24, 2014 12:00 AM
டிச 24, 2014 12:00 AM
படிப்பு முடிந்து வேலைபெற அலையும் நிலை ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் சரியான வேலைக்கு, சரியான நபர் கிடைக்காத நிலையும் இன்று அதிகம் நிலவுகிறது.
படிப்பு முடிவதற்கு முன்பே வேலை தயார்... அதுவும் கைநிறைய சம்பளத்துடன் என்கிற நிலையும் இன்று அதிகம். அப்படி உடனடியாக வேலை கிடைத்துவிடும் இளைஞர்கள் பெரும்பாலும் எப்படி இருக்க வேண்டும் என்று தெரியாமல்தான் இருக்கிறார்கள்.
வாடிய மலர்கள்
கல்லூரிச் சாலையிலிருந்து பணிச் சோலைக்குள் நுழையும் புதிய முகங்களாய் இருக்க வேண்டியவர்கள் வாடிய மலர்களாய் வலம் வருகிறார்கள். எல்லாம் ‘ஆட்டிட்யூட்’ என்று சொல்லப்படும் மனோபாவப் பிரச்சனை தான்.
எப்படி இருக்க வேண்டும், எப்படி தன்னை பலர் முன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கு இன்று பிரத்யேகப் பயிற்சிகள் பலவற்றை நிறுவனங்களே தருகின்றன. பணியிடங்களில் பணிக்கலாச்சாரம் புரிந்து நடந்துகொள்வது அவசியமாகிறது. பணியாளர்களின் பங்கு என்ன, நடந்துகொள்ள வேண்டிய பாங்கு என்ன என்ற புரிதல் வேண்டும்.
பால பாடம்
பெற்றோர் சிறுவயதில் சொல்லித்தரத் தவறிய அடிப்படை விஷயங்களை உணர்த்திடவே நிறுவன அதிகாரிகள் பலர் யோசித்துத்திட்டமிட்டு இவைபற்றிய பயிற்சி வகுப்புகள் நடத்துகிறார்கள்.
இந்தப் பயிற்சி வகுப்புகளில் சொல்லித்தரும் பாலபாடங்கள் இவைதான் :
- ‘ஷூ’ பாலிஷ் டப்பாவை அலுவலகத்திலேயே வைத்திருங்கள்
- எளிதில் ஜீரணமாகும் உணவை இடைவேளைகளில் உண்ணுங்கள்
- கழிவறையில் எல்லா இடங்களிலும் தண்ணீரைதெளித்து ஈரமாக்காதீர்கள்
- மூன்றுமாதத்திற்கு ஒருமுறை பல் வைத்தியரைப் பாருங்கள்
- முகச்சவரம் தினமும் செய்து மலர்ச்சியுடன் இருங்கள்
- இஸ்திரி செய்யப்பட்ட ரம்மியமான உடைகள் அணியுங்கள்
- காலுறையை (சாக்ஸ்) இரண்டு நாளுக்கு ஒருமுறை மாற்றுங்கள்
- ஜீன்ஸ், டிஷர்ட் இவற்றைவார இறுதியில் மட்டும் அணியுங்கள்
- அலுவலகத்திலேயே ஒருசெட் ஆடை வைத்திருங்கள்
- இதமான ‘சென்ட்’ நமக்கும் பிறர்க்கும் நல்லது
- வேலை செய்யும் மேஜையை சுத்தமாக வைத்திருங்கள்
- காகிதம் மற்றும் குப்பைகளை கண்ட இடத்தில் போடாதீர்கள்
- கேன்டீன் சாப்பாடு என்றால் தேவையான அளவு மட்டும் கேட்டு வாங்கி சாப்பிடுங்கள். உணவை வீணடிக்காதீர்கள்
- புகைபிடிக்கும் பழக்கம் உண்டு என்றால் அதற்கென பல நிறுவனங்களில் இடம் ஒதுக்கி உள்ளார்கள். அந்த இடத்தில் மட்டுமே புகைக்கலாம்
- பெண் ஊழியர்கள் என்றால் திருமண விழாவிற்கு வருவதுபோல ஜிகுஜிகு உடைகள் அணிவதைத் தவிர்க்கலாம்
- சப்தம் ஏற்படுத்தும் கொலுசு, நிறைய நகைகள் இவற்றைத் தவிர்க்கலாம்
- மொபைல்போனில் முகம் சுளிக்கும் எந்த பாட்டையும் ஒலியாக வைத்தல் கூடாது
- நிறுவன நேரத்தில் சொந்த தொலைபேசி அழைப்புகள் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். பேசும்போது சப்தமாக பேசக்கூடாது
- ‘ஐடி-கார்ட்‘ எப்போதும் அணிந்திருக்க வேண்டும்.
பொதுவாக இளைஞர்களுக்கு அறிவுரை சொன்னால் அவர்களிடமிருந்து வரும் பதில் என்ன தெரியுமா? ‘என் வேலைக்குத்தானே சம்பளம்? என் முகம், என்ஆடை, என் பழக்க வழக்கம் இவற்றை ஏன் பார்க்கிறீர்கள்?
ஆனால் நிறுவனம் தமது பணியாளர்களை நிறுவனத்தின் ஒரு அங்கமாகவே பார்ப்பதால் நிறுவனத்தின் இமேஜ் எந்தவிதத்திலும் பாதித்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.
அறியாமையும், புரியாமையும்
அழுக்கு உடையுடன் நான்கு நாள் தாடியுடன், நீள நகத்துடன் வியர்வை நெடியுடன் நாம் செல்லும் உணவகங்களில், கடைகளில் பணிசெய்வோர் இருந்தால் நமக்கு எப்படி இருக்கும்? இந்த விஷயத்தை இப்படித்தான் நாம் பார்க்கவேண்டும்; மேலும் புரிந்துகொள்ள வேண்டும்.
பணியிடம் முன்பதிவு செய்யாதவர் பயணம் செய்யும் ரயில்பெட்டி (அன்ரிசெர்வ்) போல பலவித நாற்றங்களுடன், பலவிதமான அணுகுமுறை உள்ள மக்கள் கொண்டதாக நம்மால் கற்பனைகூடச் செய்யமுடியாது அல்லவா?
அறியாமை எப்போதும் மன்னிக்கப்பட்டு விடும். ஆனால் புரியாமை என்பது அப்படிப்பட்டது அன்று. நம்நடை, உடை, கலாச்சாரம், நடத்தை மற்றவரைப் பாதிக்கிறது என்கிற புரிதலோடு பணியிடங்களில் இருக்கவேண்டியது நம் கடமையாகும். மற்றவர் முகச்சுளிப்பில் நாம் எப்படி காலம் கடத்த முடியும்? பணம் சம்பாதிப்பதைத் தாண்டி பெயரும் புகழும் கூடத் தானே ஈட்ட வேண்டும்?
மதிப்புக்குத் தேவை
இன்றைய காலக்கட்டத்தில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே துணி துவைக்கலாம். முகச்சவரம் செய்து கொண்டே பாட்டு கேட்கலாம். சுத்தமாக இருப்பது மருத்துவத்தேவை என்றால் மலர்ந்து இருப்பது மதிப்புக்குத் தேவை. வாங்கும் சம்பளம் நம்மைப் புத்துணர்வோடு, புதுப்பொலிவோடு, இன்முகத்தோடு, நறுமணத்தோடு இருக்க அனுமதிக்காதா என்ன? மன மிருந்தால் மார்க்கம் உண்டு.
பொலிவுடன், அழகாக, மதிப்புடன், மகிழ்வுடன் வலம் வர என்ன தேவை... நல்ல மனோபாவம் தான். ’நாம் இப்படித்தான்’ என்று இருக்காமல் பிறர் வியக்கும்படி இருக்கலாமே! மனம் மலரத்தேவையான சின்ன சின்ன சாவிகள் வேறு எங்கும் இல்லை. நம்மிடையேதான் அவை உள்ளன. சிக்கல் எனும் பூட்டு பெரிது என்றாலும் அவற்றை திறக்கும் சாவி சிறியது தான். தெளிவோம்... தெரிவோம்...!
- டாக்டர். பாலசாண்டில்யன்

