/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
தொழில்முனைவோர் ஆக ஆசை மட்டும் போதுமா?
/
தொழில்முனைவோர் ஆக ஆசை மட்டும் போதுமா?
டிச 24, 2014 12:00 AM
டிச 24, 2014 12:00 AM
எதிர்காலத்தை யூகிக்கச் சிறந்த வழி அதனை உருவாக்குவதுதான். முயற்சி எல்லா வேளைகளிலும் இன்பம் பயப்பதில்லை. ஆனால் முயற்சியின்றி இன்பம் ஒருபோதும் பிறப்பதில்லை.
“கான மயிலாடக் கண்டிருந்தவான் கோழி தானும் தன் பொல்லாச் சிறகை விரித்து”... பழைய இந்த செய்யுள் சிலருக்கு நினைவிருக்கலாம். அப்படி அவர்செய்கிறார் இவர் செய்கிறார் என்றெல்லாம் தொழில் தொடங்குவதோ, வேலையே கிடைக்கவில்லை என்பதால் தொழில் தொடங்குவதோ நஷ்டத்தில்தான் கொண்டு போய் நிறுத்தும்.
எல்லா இடங்களிலும் எல்லா வயதினராலும் பகிர்ந்துகொள்ளப்படும் கனவு சுதிந்திரமாக இருப்பதுதான் (Being free). வாழ்க்கையில் நம்பிக்கைமிக்க அடியை எடுத்து வைத்தல், சுயமாகச் சிந்தித்தல், செயல்படல், தனது வாழ்க்கைப் பாதையைத் தானே தேர்ந்தெடுத்தல், வெற்றி தோல்விகளை பயமின்றி துணிவுடன் எதிர்கொள்ளல் என இவை அனைத்தும் சுதந்திரமாக இருத்தலில் அடங்கும். அப்படிப்பட்டவர்கள் தான் தொழில்முனைவோர்களாக உருவாகிறார்கள்.
மெல்லியகாற்றுக்கே பொசுக்கெனசாயும் ஊசிமரங்கள் அல்ல அவர்கள்... என்ன பிரளயம் ஆனாலும் அப்படியே நிற்கும் பனைமரங்கள்!
சவால்கள்
போட்டிகள், வாடிக்கையாளர்களின் எதிர்ப்பார்ப்புகள், அரசின் கட்டுப்பாடுகள், திடீர் விதிமாற்றங்கள் என சவால்கள் அவர்களுக்கு ஏராளம். தொழில்முனைவோர்கள் இன்று பெரும்பாலும் அவசரப்படுகிறார்கள்.... மிகவிரைவில் பெரிய தொழிலதிபராக ஆகிவிட வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள்.
இன்றைய சூழலில் நுகர்வோர் தேர்வு மற்றும் விருப்பம் மிகவும் மாறிவருகிறது. இந்த நிலையில் எல்லோர் மனதிலும் எழும் கேள்விகள் - மக்கள் பணம் செலவழிப்பது தொடருமா? எல்லாத்தொழிலும் குதூகலம் அடையுமா? வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைவார்களா? நம்பிக்கையுடன் களத்தில் தொடரலாமா? ஆகியவை தான்.
தவம்
தொழில் என்பது சொகுசு பார்ப்பவர்களுக்கு அன்று. லாபம் கிடைக்க சிலசமயம் நேரம் ஆகலாம். மனத்தளர்வில்லாமல், உற்சாகம் மற்றும் நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்திட பக்குவம் தேவை. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தொழில்முனைவோரைப் பார்த்து வியந்து போகும் நம்மவர்கள் ஒரு வேலையைத் தேடிக்கொள்வதில்தான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கு முக்கிய காரணம் போதிய குடும்ப ஒத்துழைப்பு இன்மையே.
மேலும் அரசு தரும் கடன் மற்றும் மான்யத்தை மட்டும் மனதில்கொண்டு தொழில் செய்யலாம் என்கிற நபர்களுக்கு தொழில் நீடித்து நிலைப்பதில்லை.
தொழில்முனைவோர்கள் தம்மைத்தொடர்ந்து உற்சாகப்படுத்திக்கொண்டு பிறரையும் உற்சாகப்படுத்தவேண்டும். தொழில் செய்வது என்பது கண்கள் திறந்து செய்யும் ஒருதவம். அவ்வாறு தவம் செய்பவர்கள் சவால்களை எளிதில் சமாளிக்கிறார்கள். எந்தவித மாற்றம் நிகழ்ந்தாலும் அவற்றிற்கேற்ப தமது சூழலை மாற்றிக்கொள்ளும் ஒருவிவேகம் தேவைப்படுகிறது.
அப்படி இல்லாதவர்கள் சரியான அட்வைஸ் கொடுக்கும் நல்ல ஆலோசகர்களை வியாபாரத்தில் வைத்திருக்கிறார்கள்.
தேவையான திறன்கள்
தன்னைத்தொடர்ந்து வெற்றியாளராக நிலை நிறுத்திக்கொள்ள தேவையான பயிற்சி எடுத்துக்கொள்ளுதல், பிசினஸ் சம்பந்தமான பத்திரிகைகள்படித்தல், தொழில் அமைப்புகளில் உறுப்பினராக இருத்தல், அவர்கள் நடத்தும் கூட்டங்களில் கலந்துகொள்ளுதல், போட்டியாளர்களை தொடர்ந்து கண்காணித்தல் இவைஅனைத்துமே அவசியமாகிறது.
சரியான முறையில் செய்யப்படும் முயற்சி எல்லாத் தடைகளையும் தகர்த்துவிடும் என்ற நம்பிக்கையோடு செயல்படுங்கள். மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தோடும் மாற்றக் கூடியவற்றை மாற்றிட அஞ்சா நெஞ்சத்தோடும் தொழிலை அணுகினால் வெற்றிநிச்சயம். அச்சம் தரும் புறச்சூழலிலும் காரியத்தைச் செய்யுங்கள். சக்திதானாகவே வரும். வாழ்த்துக்கள்.
- டாக்டர். பாலசாண்டில்யன்

