மே 06, 2026 02:18 PM
மே 06, 2026 02:18 PM

செயற்கை நுண்ணறிவு மற்றும் செமிகண்டக்டர் துறைகளில் எதிர்கால வாய்ப்புகள் அதிகரித்து வருவதால், அதற்கேற்ற வகையில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு வருகிறது. பொதுவாக, தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் கோடிங் திறன், பிரச்சினை தீர்க்கும் திறன், வடிவமைப்பு சிந்தனை ஆகியவை மாணவர்களுக்கு அவசியமான திறன்களாக மாறியுள்ளன.
நிறுவனங்களின் எதிர்பார்ப்பை பொறுத்தும் துறையின் வளர்ச்சிக்கு ஏற்பவும், கல்வி நிறுவனங்கள் இன்று செயல்பட வேண்டியது அவசியம். ஆகையால், தொழில்துறையுடன் நேரடி இணைப்பை வலுப்படுத்தும் நோக்கில், 'இன்னோவேஷன் ஹப் மற்றும் டெக் பார்க்' உருவாக்கி வருகிறோம். இந்த மையம் வாயிலாக மாணவர்களுக்கு தொழில்துறை அனுபவம், 'ஸ்டார்ட்அப்' ஊக்குவித்தல் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப பயிற்சிகள் ஆகியவை ஒரே இடத்தில் வழங்கப்படும்.
நான்கு தளங்களைக் கொண்ட இந்த வளாகத்தில், தரைத்தளம் மற்றும் முதல் தளம் முழுவதும் 'இன்னோவேஷன் ஹப்' செயல்படும். இங்கு பல 'சென்டர் ஆப் எக்சலன்ஸ்' அமைப்புகள் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து இயங்கி, மாணவர்களுக்கு நேரடி பயிற்சி வழங்கும். இதன் மூலம் மாணவர்கள் தொழில்துறையினருடன் இணைந்து பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும்.
இரண்டாவது தளம் 'ஸ்டார்ட்அப்'களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு ஹேக்கத்தான், இன்குபேஷன் மையங்கள் மற்றும் 'மேக்கர் ஸ்பேஸ்' வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. 3D பிரிண்டிங், லேசர் கட்டிங் உள்ளிட்ட நவீன வசதிகள் மூலம் மாணவர்கள் தங்களது கண்டுபிடிப்புகளை வடிவமைத்து செயல்படுத்த முடியும்.
மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களிள், டெக் பார்க் வசதிகளாக உருவாக்கப்பட்டு, வெளிப்புற நிறுவனங்களும் இங்கு தங்கள் செயல்பாடுகளை தொடங்கலாம். கல்வி மற்றும் தொழில்துறை ஒருங்கிணைப்பு மேலும் வலுப்பெறும்.
இவைதவிர, 'ஸ்டார்ட்அப்' வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட 'இக்னைட்' திட்டத்தின் மூலம் 20க்கும் மேற்பட்ட மாணவர் நிறுவனங்கள் உருவாகியுள்ளன. தொழில்துறையுடன் இணைந்த கல்வி, புதிய தொழில்நுட்ப பயிற்சி மற்றும் ஸ்டார்ட்அப் ஆதரவு ஆகிய மூன்றையும் ஒருங்கிணைக்கும் இந்த முயற்சி, மாணவர்களின் வேலைவாய்ப்பு திறனை உயர்த்தும்.
இத்தகைய முயற்சிகளால், சமீபத்தில் சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான தொழில்நுட்ப போட்டியில், எங்கள் கல்வி நிறுவன மாணவர்கள் வடிவமைத்த ரோவர் இயந்திரம் 27 கிலோ மணலை அகற்றி சாதனை படைத்தது.
பள்ளி காலங்களில் இருந்தே மாணவர்களிடம் சிந்தனை திறன், டிசைன் திங்கிங் போன்றவற்றை ஊக்குவிக்க வேண்டியது அவசியம். மனப்பாடம் சார்ந்த கல்விமுறையிலிருந்து திறன் சார்ந்த கல்விமுறைக்கு மாற வேண்டிய காலம் வந்துவிட்டது.
- டாக்டர் சுதா மோகன்ராம், முதல்வர், ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரி, கோவை.
