தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/இதய அறுவை சிகிச்சையில் ரோபோட்டிக்ஸ்!

இதய அறுவை சிகிச்சையில் ரோபோட்டிக்ஸ்!

இதய அறுவை சிகிச்சையில் ரோபோட்டிக்ஸ்!


அக் 07, 2026 10:50 AM

அக் 07, 2026 10:50 AM

Follow on GoogleFavourite on Google

அக் 07, 2026 10:50 AM அக் 07, 2026 10:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குறைந்தபட்ச ஊடுருவலுடன் இதய அறுவை சிகிச்சைகளை நான் செய்யத் தொடங்கிய காலத்தில், அதன் குறிக்கோள் மிக எளிமையானதாகவே இருந்தது. சிகிச்சையின் தரத்தில் எந்தவித சமரசமும் செய்துவிடாமல், மார்பில் மிகச் சிறிய துளையிட்டு வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடிப்பது மட்டுமே அந்த ஆரம்பக்கட்ட நோக்கம்.

ஆனால் காலப்போக்கில், மருத்துவ அறிவியலும் அந்த அணுகுமுறையும் மிகப்பெரிய பரிணாம வளர்ச்சியை எட்டியுள்ளன. இன்று அறிமுகமாகியுள்ள அதிநவீன ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பம், இதய அறுவை சிகிச்சை முறையை முற்றிலும் அடுத்த நிலைக்கு உயர்த்தியுள்ளது.

இது அறுவை சிகிச்சையால் உடம்பில் ஏற்படும் தழும்புகளின் அளவைக் குறைப்பதுடன் நின்றுவிடாமல், ஒரு மருத்துவர் இதயத்தை உற்றுநோக்கும் விதம், அணுகும் பாங்கு மற்றும் அறுவை சிகிச்சை செய்யும் முறை அனைத்தையுமே தலைகீழாக மாற்றி அமைத்திருக்கிறது.

பொதுவாகப் பாரம்பரிய அறுவை சிகிச்சைகளில், நேரடியாக சிகிச்சை பணிகளை மேற்கொள்வார். ஆனால் குறைந்த ஊடுருவல் கொண்ட நுண்துளை அறுவை சிகிச்சை முறையிலோ, மிகக் குறுகிய இடைவெளி வழியாக நீண்ட மருத்துவக் கருவிகளை உட்செலுத்திச் செயல்பட வேண்டிய சவால் எழுந்தது. இந்தச் தவாலை எதிர்கொள்ள ரோபோட்டிக் அமைப்புகள் மிகவும் உதவிகரமானதாக அமைந்துள்ளன.

மார்பின் உள்பகுதியை மிகத் துல்லியமான முப்பரிமாண பார்வையில் மருத்துவருக்குக் காட்டுவதுடன், மனிதக் கைகளின் மணிக்கட்டு எவ்வாறு சுழன்று வளைந்து கொடுக்குமோ, அதே போல நுணுக்கமாகச் செயல்படக்கூடிய சிறிய கருவிகளையும் இவை வழங்குகின்றன. எங்களைப் போன்ற இதய அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு இது ஒரு திருப்புமுனை.

'குறைந்த ஊடுருவல் சிகிச்சை' என்பதை எக்காரணம் கொண்டும் 'குறைந்த திறன் கொண்ட சிகிச்சை' எனத் தவறாகக் கருதிவிடக் கூடாது. உடலை ஊடுருவும் துளை சிறிதாக இருந்தாலும், நோயாளியின் பாதுகாப்பிலும் அறுவைசி கிச்சையின் பலனிலும் எவ்வித சமரசமும் இருப்பதில்லை.

குறிப்பாக, ரோபோ அமைப்புகள் வழங்கும் பெரிதாக்கப்பட்ட தெளிவான பார்வையும், வளைந்து கொடுக்கக்கூடிய நுண் கருவிகளின் உதவியுடன், மிகச்சிறிய துளை வழியாக, எத்தகைய கடினமான வால்வு சீரமைப்பு பணிகளையும் எங்களால் செய்ய முடிகிறது.

அதே சமயம், பொதுமக்கள் மத்தியில் நிலவும் ஒரு முக்கியத் தவறான புரிதலைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பம் என்பது மனிதத் தலையீடற்ற 'முழு தானியக்க முறை' அல்ல. ஒரு வால்வைச் சரிசெய்ய வேண்டுமா அல்லது புதிய வால்வு பொருத்த வேண்டுமா, நோயாளியின் நோய்த்தன்மை என்ன, அவருக்கு ரோபோ முறை பொருந்துமா என்ற எந்த முடிவையும் ரோபோ இயந்திரம் தானாக எடுப்பதில்லை. அனுபவமும் நிபுணத்துவமும் வாய்ந்த மருத்துவரே தீவிர பரிசீலனைக்குப் பின் இறுதி முடிவை எடுக்கிறார்.

எனவே, ரோபோட்டிக் இதய அறுவை சிகிச்சையின் எதிர்காலம் என்பது வெறும் இயந்திரத்தின் தொழில்நுட்பத்தில் மட்டும் இல்லை. அதனை இயக்கும் மருத்துவக் குழுவின் அனுபவத்திலும், அவர்கள் வகுக்கும் சிகிச்சைத் திட்டத்திலுமே அடங்கியுள்ளது. சரியான நோயாளியைத் தேர்வு செய்வதில் தொடங்கி, துல்லியமான ஸ்கேனிங், மயக்க மருந்து மேலாண்மை, அறுவை சிகிச்சைத் திறன் மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய தீவிரக் கண்காணிப்பு என அனைத்துத் துறை நிபுணர்களும் ஒருங்கிணைந்து செயல்படும் போது தான் அறுவை சிகிச்சை முழு வெற்றி பெறுகிறது.

வெறும் ரோபோ இயந்திரத்தை வாங்கி மருத்துவமனையில் நிறுவிவிட்டால் மட்டும் இந்தச் சிகிச்சைத் திட்டம் உருவாகிவிடாது. முறையான பயிற்சி மற்றும் படிப்படியான அனுபவத்தின் மூலமே இதைச் சாத்தியமாக்க முடியும்.

இதைத் தவிர, இதய அறுவை சிகிச்சைத் துறையின் நீண்டகாலப் பரிணாம வரலாற்றை உற்றுநோக்கினால், கார்டியோ பல்மோனரி பைபாஸ் முறை இதயப் பாதுகாப்பில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியதும், நுண்துளை முறைகள் அறுவை சிகிச்சையின் அணுகுமுறையை மாற்றியதும் புரியும்.

தற்போது ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பம் மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையிலான இணைப்பை நவீனப்படுத்தி வருகிறது. இதன் அடுத்தகட்டமாக செயற்கை நுண்ணறிவு, ஆக்மென்டட் ரியாலிட்டி மற்றும் டிஜிட்டல் மாடலிங் மூலமாக, நோயாளியின் இதயத்தின் மெய்நிகர் மாதிரியை முன்கூட்டியே நுணுக்கமாக ஆய்வு செய்துவிட்டு அறுவை சிகிச்சை அறைக்குள் நுழையும் சூழல் உருவாகி வருகிறது.

இருப்பினும், ரோபோட்டிக் முறை என்பது நவீனத்திற்கும் பாரம்பரிய அறுவை சிகிச்சைக்கும் இடையிலான போட்டி அல்ல. சில நோயாளிகளுக்கு திறந்தநிலை அறுவை சிகிச்சையே பாதுகாப்பானது. சிலருக்கு நுண்துளை அல்லது ரோபோட்டிக் முறை உகந்தது. ஒவ்வொரு நோயாளிக்கும் எது உகந்ததோ அதைத் தேர்ந்தெடுப்பதே மருத்துவரின் கடமை.

நோயாளியின் உடலுக்குக் குறைந்தபட்ச வலியும் பாதிப்பும் ஏற்படுத்தி, அவர்களைப் பூரண நலம்பெறச் செய்வதே இறுதி இலக்கு. எதிர்காலத்தில் அறுவை சிகிச்சை அரங்குகள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மாறினாலும் அதன் தாரக மந்திரம் ஒன்று தான், "தொழில்நுட்பம் மருத்துவருக்கு உதவுவதாக இருக்க வேண்டும்; மருத்துவர் நோயாளிக்கு சிறந்த மருத்துவ சேவையை வழங்குபவராக இருக்க வேண்டும்".

- டாக்டர் முகமது ரெஹான் சயீத், இதய நெஞ்சக மற்றும் ரோபோட்டிக் இதய அறுவை சிகிச்சை நிபுணர், அப்போலோ மருத்துவமனைகள், கிரீம்ஸ் சாலை, சென்னை.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us