அக் 02, 2024 12:00 AM
அக் 02, 2024 12:00 AM

ஓடி விளையாடு பாப்பா.. நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா.. பாரதியார் அன்று எழுதி வைத்த வரிகள்..! அதை கண்டிப்பாக செயல்படுத்துங்கள் என்கிறார்கள் இன்றைய உளவியலாளர்கள்.
உடற்கல்வியும், விளையாட்டும் ஒருங்கிணைந்த துறைகளாக செயல்படுகின்றன. சிறு வயது முதலே குழந்தைகளை விளையாட்டுகளில் பங்கேற்க வைக்க வேண்டும். படிப்பிற்கும், மதிப்பெண்களுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் விளையாட்டிற்கு கொடுக்கப்படுவதில்லை. விளையாடுவதன் மூலம் மன வளர்ச்சி, தன்னம்பிக்கை, திடமான உடல், சமுதாய பொறுப்பு ஆகிய திறன்கள் மேம்படுவதால், 'தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது விளையாட வேண்டும்' என்கிறார்கள் மருத்துவர்கள்.
உடல் வலிமை
குழந்தைகளின் எலும்புகள் நன்கு வளர்வதற்கும், எலும்புகள் திடப்படுவதற்கும், மூட்டுகள் வலுப் பெறுவதற்கும், தசைகள் சீராக செயல்படுவதற்கும் விளையாட்டு பயிற்சி உதவுகின்றன. எலும்பு, மூட்டு மட்டுமல்லாமல் இருதய செயல்பாட்டிற்கும், இருதய கோளாறுகள் வராமல் தடுப்பதலும் விளையாட்டு முக்கிய பங்காற்றுகிறது. விளையாடுவதால் உடலில் உள்ள கழிவுகள் வியர்வையாக வெளியேறுகிறது. அதிக வியர்வை வெளியேறும் போது உடல் வெப்பம் சீராகி, உடல் குளிர்ச்சியடைகிறது.
மூளை வளர்ச்சி
பொதுவாக 80 சதவீத மூளை வளர்ச்சி 6 வயதிற்குள்ளாகவே நடந்துவிடுகிறது. மீதி 20 சதவீத மூளை வளர்ச்சி மனிதன் வளரும்போது நடக்கிறது. அந்த 20 சதவீத வளர்ச்சியும் செயல்திறனும் சிறுவயதில் விளையாடும் விளையாட்டும், உடல் பயிற்சியே தீர்மானிக்கின்றன. விளையாட்டின்போது அதிகளவில் ஆக்ஸிஜன் மூளைக்கு செல்வதால், நுரையீரல் ஆரோக்கியமாக இருப்பதோடு மூளை சுறுசுறுப்பாக வேலை செய்கிறது. இதனால் படிப்பில் கவனம், ஞாபக சக்தி அதிகரிக்கிறது.
சமூகப் பொறுப்பு
மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடும்போது சமூகப் பண்பு வளர்கிறது. விட்டுக்கொடுப்பது, வெற்றி, தோல்வி போன்ற பண்புகள் உருவாகும் இடம் விளையாட்டுதளம். சேர்ந்து விளையாடுவதால் மனிதநேயமும் நட்புணர்வும் வளரும். மேலும், சக நண்பர்களிடம் எப்படி பழகுவது, பெரியவர்களிடம் எப்படி நடந்து கொள்வது போன்ற மரியாதை பண்புகள் தெரிந்து கொள்ள வாய்ப்பாக விளையாட்டு அமைகிறது.
தன்னம்பிக்கை
விளையாட்டின் மூலம் வெற்றி தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, ஒழுக்கம், தன்னம்பிக்கை, புதுமையான செயல் திறன்கள் ஆகியவை வளரும். ஒரு பிரச்னையை எவ்வாறு கையாள வேண்டும், என்ன செய்தால் சிக்கலான பாதையில் இருந்து வெளி வர முடியும் என்ற தீர்வுகளை கண்டறியும் திறன் அதிகரிக்கும். அதன் பலன் எதிர்கால வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும்.
பெற்றோர்களின் பங்கு
குழந்தைகளுக்கு நமது பாரம்பரிய விளையாட்டுகளை கற்றுக்கொடுக்க வேண்டும். விளையாட்டினால், வெற்றி தோல்வியை சமமாக கருதும் குணம் வளரும். இப்பண்பு பிற்கால வாழ்க்கைக்கு உதவும். டிஜிட்டல் சாதனங்களில் குழந்தைகளை மூழ்கவிடாமல், மறுபடியும் நமது பாரம்பரிய விளையாட்டுகளை விளையாட வைக்க பெற்றோர்கள் முயற்சிக்கலாம். விளையாட்டின் மகத்துவமும் குழந்தைகளுக்கு புரியும்.