செப் 02, 2015 12:00 AM
செப் 02, 2015 12:00 AM
“எல்லாம் என் நேரம்” என்று நொந்து கொள்ளுபவர்களா? நீங்கள். அப்படியெனில் கட்டாயம் இதைப் படியுங்கள். அப்படிபட்டவர் இல்லையென்றாலும் படியுங்கள்!
நேற்று என்பது உடைந்த பானை; நாளை என்பது மதில்மேல் பூனை; இன்று என்பது நம் கையில் உள்ள வீணை என்பதை உணர்ந்து நேரத்தைச் சரியாக திட்டமிட்டு செயல்பட்டால் நினைத்த்தை வெல்ல முடியும்!
வாழ்க்கை என்பது மணித்துளிகளின் தொகுப்பு. ஒவ்வொரு மணித்துளியும் பொன்னைவிட விலைமதிப்பு மிக்கது. ஒவ்வொரு நிமிடத்தையும் உங்களுடைய கனவை நனவாக்கும் நோக்கத்திற்காக மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். நேரத்தை செலவு செய்யக்கூடாது; முதலீடு செய்ய வேண்டும்.
அறிவை வளர்க்கவும், ஆற்றலைப் பெருக்கவும் நல்ல மனோநிலையை உருவாக்கவும் படிக்கும் காலத்தில் நேரத்தைச் செலவிட்டால் வாலிப காலம் வசந்தமாக மலரும். விரும்பும் வேலை கிடைக்கும். வேண்டிய எல்லாம் நடக்கும்.
நேரத்தை நிர்வகிக்க விரும்புகிறவர்கள் முதலில் தங்களுடைய எல்லா வேலைகளையும் பட்டியலிட்டு, பிறகு அவற்றை அவசியமானவை, அவசரமானவை எனப் பிரித்துக் கொண்டு அவற்றில் முதலில் அவசரமானவைகளைச் செய்து முடிக்க வேண்டும்.
பிறகு, அவசியமான பணிகளையும் உரிய காலத்தில் செய்து முடிக்க நேரம் ஒதுக்க வேண்டும். இல்லாவிட்டால் அது அவசர அவசியமானதாக மாறிவிடும். காலமும் கடமையும் யாருக்காகவும் காத்திருக்காது என்பதை உணர்ந்து காலத்தே பணியை முடித்து வெல்ல வேண்டும் என்ற உணர்வோடு எப்பொழுதும் இருக்க வேண்டும். இதைத்தான் ‘நேரவிழிப்பு நிலை’ என்பார்கள.
ஒருபோதும் நேரத்தை வீணாக்கக்கூடாது. வேலைக்கு ஏற்ற நேரம், நேரத்திற்கு ஏற்ற வேலை என்ற நோக்கில் செயல்பட வேண்டும். அப்பொழுதுதான் வெற்றிகளைக் குவிக்கமுடியும்.
சுய நிர்வாகத்தின் மூலம் நேரத்தை வளர்ச்சிப் பணிகளில் முதலீடு செய்யமுடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை என்னவென்றால்,
1. ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய பணிகளை முந்தைய நாள் இரவே பட்டியலிட்டுக் கொள்ளுங்கள்.
2. நேரத்தை கொள்ளையடிக்கும் நபர்களிடம் இருந்து விலகியே இருங்கள்.
3. உடல், மனம், அறிவு, ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் நேரம் ஒதுக்குவதுடன் குடும்பம், உறவு, நட்பு போன்றவற்றிற்க்கும் தேவையான அளவு நேரம் ஒதுக்குங்கள். ஏனென்றால் நமது வளர்ச்சிக்கு நமது உழைப்பு மட்டுமே போதாது, மற்றவர்களின் ஒத்துழைப்பும் வேண்டும்.
4. ஒவ்வொரு இரவும் உறங்குவதற்கு முன்னர் அன்றைய தினத்தின் நேரப்பயன்பாட்டை ஆய்வு செய்து பாருங்கள்.
காலத்தை நாம் போற்றி உழைத்தால் காலம் நம்மை போற்றும்!
-முனைவர் கவிதாசன்

