ஜூன் 07, 2026 11:51 PM
ஜூன் 07, 2026 11:51 PM

வாழ்க்கை பயணத்தில் பள்ளி பருவம் என்பது ஒரு அழகான மற்றும் முக்கியமான காலகட்டம். அதற்கு பிறகு, மாணவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால் "அடுத்து என்ன படிக்கலாம்? எந்த வேலைக்குச் செல்லலாம்?" என்பது தான். 12ம் வகுப்பு முடித்தவுடன் ஏற்படும் இந்தக் குழப்பம் மிகவும் இயல்பானது.
உலகில் 45 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் தாங்கள் அடுத்ததாக என்ன செய்யப்போகிறோம் என்பதில் தெளிவில்லாமல் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இன்றைய நவீன உலகில் வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால், இந்த அதிகப்படியான தேர்வுகளே மாணவர்களுக்குப் பெரிய குழப்பத்தை உண்டாக்குகின்றன. ஒரு காலத்தில் மருத்துவம் அல்லது பொறியியல் ஆகிய துறைகளை மிகவும் பிரபலமாக இருந்தது. ஆனால், தற்போது தரவு அறிவியல், உளவியல், வடிவமைப்பு எனப் பல துறைகள் உருவாகியுள்ளன.
இதோடு சமூக வலைதளங்களில் மற்றவர்களின் வெற்றியை பார்த்து நம்மை நாமே ஒப்பிட்டுக்கொள்வதும், பெற்றோரின் எதிர்பார்ப்புகளும், நண்பர்கள் எடுக்கும் முடிவுகளைப் பின்பற்றுவதும் இந்தக் குழப்பத்தை அதிகரிக்கின்றன. பல மாணவர்கள் தங்களுக்கு பிடித்ததை விட, அதிக ஊதியம் கிடைக்கும் அல்லது சமுதாயத்தில் அந்தஸ்து கிடைக்கும் என்று கருதப்படும் துறைகளையே தேர்ந்தெடுக்கின்றனர். இது பிற்காலத்தில் சிலருக்கு மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது.
எந்தவொரு முடிவை எடுப்பதற்கு முன்பும், உங்களைப் பற்றி நீங்கள் ஆராய்வது அவசியம். "எனக்கு எது பிடிக்கும்?", "எந்தப் பாடத்தை நான் ஆர்வத்துடன் படிக்கிறேன்?", "என்னிடம் உள்ள தனித்துவமான திறமைகள் என்ன?" போன்ற கேள்விகளை உங்களுக்குள்ளே கேட்டுக்கொள்ளுங்கள். உங்களைப் பற்றித் தெரியாமல் ஒரு துறையைத் தேர்ந்தெடுப்பது, முகவரி தெரியாமல் பயணம் செய்வதைப் போன்றது.
உங்கள் ஆர்வமும், திறமையும் இணையும் புள்ளியில் தான் உங்களுக்கான சரியான வாழ்க்கைப்பாதை இருக்கிறது. மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை விட, உங்கள் மனதிற்கு எது மகிழ்ச்சியைத் தருகிறது என்பதில் கவனம் செலுத்துங்கள்.
குழப்பத்தைப் போக்க சிறந்த வழி, நீங்கள் விரும்பும் துறைகளைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்வது தான். ஒரு குறிப்பிட்ட வேலை என்றால் அதன் அன்றாட பணிகள் எப்படி இருக்கும், எதிர்காலத்தில் அதன் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை இணையம் வழியாகவோ அல்லது அந்தத் துறையில் இருப்பவர்களிடம் பேசியோ தெரிந்து கொள்ளுங்கள்.
ஆனால், அதிகப்படியான தகவல்கள் உங்களை மேலும் குழப்பக்கூடும். எனவே, உங்களுக்கு விருப்பமான 2 அல்லது 3 துறைகளை மட்டும் தேர்ந்தெடுத்து, அவற்றை ஆழமாக ஆராயுங்கள். தேவைப்பட்டால் 'சைக்கோமெட்ரிக்' சோதனைகளை மேற்கொள்வதன் மூலம் உங்கள் ஆளுமைக்கு ஏற்ற துறையை கண்டறியலாம்.
கல்வியை வெறும் மதிப்பெண்களுக்காகவோ அல்லது கைநிறைய சம்பளம் வாங்குவதற்காகவோ, மட்டுமானதாக நினைக்கக் கூடாது. "நான் கற்கும் கல்வி இந்தச் சமூகத்திற்கு எப்படிப் பயன்படும்?" என்று சிந்திக்கும் போது உங்கள் லட்சியம் இன்னும் வலுப்பெறும். மற்றவர்கள் செல்கிறார்கள் என்பதற்காக ஒரு கூட்டத்தைப் பின்தொடர வேண்டாம்.
அதே போல், ஒரு துறையில் நிறைய சவால்கள் இருந்தாலும், அதில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் கண்டிப்பாக உங்களால் சாதிக்க முடியும். தோல்விகளைக் கண்டு அஞ்சாமல், ஒவ்வொரு முடிவையும் நிதானமாக எடுங்கள். ஒரு முடிவு தவறாகிவிட்டாலும், அதிலிருந்து கற்றுக்கொண்டு பாதையை மாற்றிக் கொள்ளும் தைரியம் உங்களுக்கு வேண்டும்.
வாழ்க்கையில் ஒரு சிறந்த வழிகாட்டி அல்லது ஆலோசகர் இருப்பது உங்கள் சுமையை பாதியாகக் குறைக்கும். உங்கள் ஆசிரியர்கள், அனுபவம் வாய்ந்த உறவினர்கள் அல்லது தொழில்முறை வாழ்க்கைப் பயிற்சியாளர்களிடம் உங்கள் சந்தேகங்களை கேளுங்கள். அவர்கள் உங்களுக்குப் புதிய கோணங்களைக் காட்டலாம். அதே போல், பெற்றோர்களும் தங்கள் விருப்பத்தை பிள்ளைகள் மீது திணிக்காமல், அவர்களின் தனித்திறமையைக் கண்டறிய ஒரு நண்பராக இருந்து உதவ வேண்டும்.
மேலும், சரியான கேரியரை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் என்பது ஒரு முடிவல்ல, அது உங்கள் தேடலின் தொடக்கம். நீங்கள் சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்கள் என்பதன் அடையாளமே இந்தக் குழப்பம். எனவே பதற்றமடையாமல், உங்களை நீங்களே செதுக்கிக்கொள்ளும் வாய்ப்பாக இதைக் கருதுங்கள்.
கடின உழைப்பு, முறையான திட்டமிடல் மற்றும் உங்கள் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கை ஆகிய மூன்றையும் துணையாகக் கொண்டால், உங்களின் எதிர்காலம் நிச்சயம் பிரகாசமானதாக அமையும்.
