டெட் தேர்வு எழுத முடியாத அரசு விடுதி வார்டன்கள் ஆசிரியர் தகுதியில் பணி நியமனம் பெற்றவர்கள்
டெட் தேர்வு எழுத முடியாத அரசு விடுதி வார்டன்கள் ஆசிரியர் தகுதியில் பணி நியமனம் பெற்றவர்கள்
UPDATED : மார் 11, 2026 12:38 PM
ADDED : மார் 11, 2026 12:42 PM
மதுரை:
கல்வித்துறையில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்தின் போது 'டெட்' என்ற தகுதித் தேர்வில் (டீச்சர் எலிஜிபிலிட்டி டெஸ்ட்) தேர்ச்சி பெற வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. இம்முறையில், ஏற்கனவே பணியில் இருப்போரும் இத்தேர்ச்சி பெற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் இத்தேர்வை எழுத தயாராகி வருகின்றனர். இத்தேர்வு வரும் ஜூனில் நடக்க உள்ளது. அதற்கு மார்ச் இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளனர்.
விடுதி காப்பாளர்கள்
அரசின் பிற்படுத்தப்பட்டோர், கள்ளர் சீரமைப்பு மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறைகளின் கீழ் ஆயிரக்கணக்கான சமூகநீதி பள்ளி, கல்லுாரி விடுதிகள் செயல்படுகின்றன. அவர்களை விடுதியில் கவனிக்க காப்பாளர்கள் (வார்டன்கள்) பணியாற்றுகின்றனர்.
இவர்களும் அடிப்படையில் ஆசிரியர்களே என்பதால் இடைநிலை காப்பாளர்கள், பட்டதாரி காப்பாளர்கள் என்றே நியமனம் பெற்றுள்ளனர். இதனால் அவர்களும் 'டெட்' தகுதித் தேர்வை எழுத வேண்டிய கட்டாயம் உள்ளது. இவர்களும் டெட் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அதனை முழுமையாக பதிவேற்றம் செய்ய இயலவில்லை.
காரணம், பணியில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் 'எமிஸ்' என்னும் நம்பரை அதில் பதிவு செய்து விண்ணப்பிக்கின்றனர். இந்த எண் விடுதி காப்பாளர்களுக்கு கிடையாது என்பதால், விண்ணப்பிக்க இயலாமல் தவிக்கின்றனர்.
இவ்வகையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெட் தேர்வை எழுத இயலாமல் உள்ளனர். எனவே தங்களுக்கும் 'எமிஸ் எண்' வழங்க வேண்டும் அல்லது சிறப்பு விலக்கு அளிக்க வேண்டும் என சிலமாவட்ட அரசு சமூகநீதி விடுதி காப்பாளர்கள் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர்களுக்கு பரிந்துரைத்துள்ளனர். ஆனால் முறையான பதில் எதுவும் கிடைக்காததால் விண்ணப்பிக்க இயலாமல் தவிப்பில் உள்ளனர்.
சிறப்பு விலக்கு வேண்டும்
விடுதி காப்பாளர் ஒருவர் கூறியதாவது:
இத்தேர்வு அரசு பள்ளிகளில் பணியில் உள்ளோருக்கு இப்போதுதான் முதன்முதலில் நடக்க உள்ளது. இடைநிலை காப்பாளர்கள் பட்டதாரி காப்பாளராக பதவி உயர்வு பெறவும், பட்டதாரி காப்பாளர்கள் தங்கள் பணியை தக்க வைத்துக் கொள்வதற்கும் இத்தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம்.
எனவே டெட் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும். பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 'எமிஸ்' எண் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களுக்கு அது இல்லை என்பதால் சிறப்பு விலக்கு அளிக்க வேண்டும் என்றனர்.

