டாக்டர், இன்ஜினியர் தான் ஆக வேண்டுமா? விவசாயத்தில் வெற்றி என்கிறார் ஓய்வு தலைமை ஆசிரியர்
டாக்டர், இன்ஜினியர் தான் ஆக வேண்டுமா? விவசாயத்தில் வெற்றி என்கிறார் ஓய்வு தலைமை ஆசிரியர்
UPDATED : செப் 23, 2024 12:00 AM
ADDED : செப் 23, 2024 04:05 PM
ஹாவேரி:
பொதுவாக பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெறுவோர், தங்களிடம் படிக்கும் பிள்ளைகள் வருங்காலத்தில் பெரிய நிறுவனங்களில் வேலை செய்ய வேண்டும் என விரும்புவர்.
இதற்கு சற்று நேர்மாறாக ஓய்வு தலைமை ஆசிரியர், பெரிய நிறுவனங்களில் வேலை செய்வதை விட, விவசாயத்தில் வெற்றி காணலாம் என கூறுகிறார்.
ஹாவேரியின் ஷிகாம்வி தாலுகா பங்காபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தணசாமி கோட்டையசாமி அதவனிமத், 77. ஓய்வு பெற்ற அரசு பள்ளித் தலைமை ஆசிரியர். ஓய்வுக்குப் பின்னர் ஒரு ஏக்கர் நிலம் வாங்கினார்.
தனது நிலத்தில் தென்னை, மா, வேம்பு ஆகிய மரங்களை வளர்க்கிறார். தவிர நிலக்கடலை, பப்பாளி ஆகிய பயிர்களையும் விளைவிக்கிறார். ஆண்டுக்கு 1.50 லட்சம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டுகிறார்.
விவசாயம் குறித்து அந்தண சாமி கூறியதாவது:
சிசுவினஹாலா கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், 1970ல் ஆசிரியராக எனது பணியை துவங்கினேன். பல பள்ளிகளில் 36 ஆண்டுகள் பணியாற்றி பங்காப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக எனது பணியை நிறைவு செய்தேன்.
ஓய்வுக்குப் பின் என்ன செய்வது என்று யோசித்தபோது, விவசாயம் செய்யலாம் என முடிவு செய்தேன். ஒரு ஏக்கரில் நிலம் வாங்கினேன்.
தென்னை, மா, வேப்ப மரங்கள் நட்டு வளர்க்க ஆரம்பித்தேன். விவசாய பணிகளுக்காக எனது நிலத்தில் சிறிய கிணறு அமைத்துள்ளேன். அதிலிருந்து தண்ணீர் எடுத்து செடிகளுக்கு பாய்ச்சுகிறேன்.
நான் மட்டுமே விவசாயத்தில் ஈடுபடுகிறேன். வேலைக்கு யாரையும் வைத்துக் கொள்வதில்லை. ஆண்டிற்கு விவசாயத்தின் வாயிலாக 1.50 லட்சம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை கிடைக்கிறது.
நான் ஆசிரியராக வேலைக்கு சேர்ந்தபோது எனது சம்பளம் 238 ரூபாய். ஓய்வு பெறும்போது 22,000 ரூபாய். ஓய்வுக்குப் பின் ஆசிரியர்கள் தங்கள் தொழில்முறையாக விவசாயத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது எனது விருப்பம். நமது நாடு விவசாயம் சார்ந்த நாடு. விழிப்புணர்வுள்ள மக்கள் விவசாயத்துறைக்கு கண்டிப்பாக வரவேண்டும்.
விவசாயத்தை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் மருத்துவர், இன்ஜினியர் ஆக வேண்டும் என்று தங்கள் விருப்பத்தை திணிக்காமல், விவசாயத்திலும் ஈடுபட்டு வெற்றி காணலாம் என நம்பிக்கை அளிக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.