அரசு கல்லுாரி மாணவர் சேர்க்கையில் குளறு-படி? நாள் முழுதும் காத்திருந்த பெற்றோர் முற்றுகை
அரசு கல்லுாரி மாணவர் சேர்க்கையில் குளறு-படி? நாள் முழுதும் காத்திருந்த பெற்றோர் முற்றுகை
UPDATED : ஜூன் 12, 2026 07:15 PM
ADDED : ஜூன் 12, 2026 07:16 PM
சேலம்:
சேலம், குமாரசாமிப்பட்டியில் உள்ள அரசு கலைக் கல்லுாரியில், சில நாட்களாக முதலாண்டு மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு மூலம் நடந்து வருகிறது. நேற்று காலை 09:00 மணிக்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பெற்றோர்களுடன் வந்தனர்.
அவர்களுக்கு, 'டோக்கன்' கொடுத்து அறைகளில் அமர வைத்தனர். மாலை, 05:00 மணிக்கு மேலான நிலையில் அங்கு காத்திருந்த, 200க்கும் மேற்பட்டோருக்கு, 'கட் - ஆப்' மதிப்பெண் குறைவாக உள்ளதால், சீட் தர முடியாது என தெரிவித்துள்ளனர். ஆத்திரமடைந்த பெற்றோர், கல்லுாரி முதல்வர் பிரேமலதா உள்ளிட்ட பேராசிரியர்களை முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, 'டோக்கன் கொடுக்கும் போதே, குறிப்பிட்ட பிரிவுகளுக்கு, உரிய, 'கட் - ஆப்' மதிப்பெண் உள்ளவர்கள் மட்டும் காத்திருக்கலாம். மற்றவர்கள் செல்லலாம் என கூறி இருந்தால், நாள் முழுக்க காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது' என்றனர்.
இதை அறிந்து, அஸ்தம்பட்டி போலீசார் வந்து, மாணவர் சேர்க்கை தொடர்பான விளக்கங்களை எடுத்துக்கூறி சமாதானப்படுத்தினர். பின் அனைவரும் கலைந்து சென்றனர்
