உயர் கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்: யு.ஜி.சி., இணைச் செயலர்
உயர் கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்: யு.ஜி.சி., இணைச் செயலர்
UPDATED : ஏப் 11, 2013 12:00 AM
ADDED : ஏப் 11, 2013 10:48 AM
மதுரை: "உயர் கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்," என, பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) இணைச் செயலர் கே.சி. பதக் வலியுறுத்தினார்.
மதுரை பாத்திமா கல்லூரியில் வைரவிழா நடந்தது. அதில் அவர் பேசியதாவது: "பெண் கல்வி மேம்பாட்டிற்காக பல்கலை மானியக் குழு, 67 வகையான படிப்புகளை அளிக்கிறது. ஆனால், இதன் மூலம் பயன்பெறும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது. சமுதாயத்தில் கல்வி மூலம் தான், பெண்களுக்கான அதிகாரத்தை பெற முடியும். உலகளாவிய கல்வியின் முக்கியத்துவம் கருதி, யு.ஜி.சி., சார்பில், பல்கலை மற்றும் கல்லூரிகளில், 370 வகையான திறன்சார்ந்த படிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
இதிலும், பெண்களின் பங்கு குறைவாகவே உள்ளது. பெண் மேம்பாடு கருதி, அளிக்கப்பட்ட திறன் சார்ந்த படிப்புகளின் நோக்கம் நிறைவேறவில்லை. எனவே, உயர் கல்வியில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் சேர்ந்து, சாதிக்க வேண்டும். திறன் சார்ந்த கல்வியிலும், பெண்கள் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்," என்றார்.
மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா பேசியதாவது: "சமுதாய மேம்பாட்டிற்கு, பெண் கல்வியே முக்கியம். உரிய வயதில், கல்வி கிடைப்பதற்கு, சரியான வழிகாட்டுதல் இருந்தால், பெண்களின் வாழ்க்கை அர்த்தம் உள்ளதாகும். அவர்களின் இலக்கையும், எளிதில் எட்டிவிடலாம். சகிப்புத்தன்மை, பணிவு, ஒழுக்கத்துடன், கேள்வி கேட்கும் திறனையும், பெண்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். சிறிய சிந்தனைதான், பெரிய கண்டுபிடிப்புக்கு காரணம். இதுவே வெற்றியின் மந்திரம்," என்றார்.
மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் கல்யாணி பேசுகையில், "கல்வி மூலமே, பெண்கள் அதிகாரத்தை எட்டுவது சாத்தியம். கல்வியால் மட்டுமே பொருளாதார ரீதியாக பெண்கள் தன்னிறைவு பெறமுடியும். சுயமாக சிந்திக்க முடியும். திருமணத்திற்கு பின்னும் கல்வி கற்பதை பெண்கள் தொடர வேண்டும்," என்றார்.
விழாவில், 60 விதவை பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. "நாக்" உதவி ஆலோசகர் பொன்முடிராஜ், முதல்வர் ஜோஸ்பின் நிர்மலா மேரி, செயலாளர் எஸ்தர் மேரி, புனித வளன் சபை மாநில தலைவர் எமிலி ஜோசப் பங்கேற்றனர்.
