அரசு பள்ளி கட்டடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் - இருதரப்பாரும் அவதி
அரசு பள்ளி கட்டடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் - இருதரப்பாரும் அவதி
UPDATED : ஜூலை 17, 2014 12:00 AM
ADDED : ஜூலை 17, 2014 11:25 AM
மாமல்லபுரம்: வடக்கு வாயலுாரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி கட்டடத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இதனால் மாணவ, மாணவியரும், ஆரம்ப சுகாதாரத் துறையினரும் இடநெருக்கடியால் அவதிப்பட்டு வருகின்றனர்.
கூவத்துார் அடுத்த, வடக்கு வாயலுாரில், துணை சுகாதார நிலையம், நீண்ட காலமாக இயங்கி வந்தது. இந்த கிராமத்தை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களை சேர்ந்த குடியிருப்புவாசிகள், இங்குதான் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்தனர். கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசியும், சத்து மாத்திரைகளும் அளிக்கப்பட்டன.
பிற நோய் மற்றும் பரிசோதனை, சிகிச்சைகளுக்கு, 10 கி.மீ., தொலைவில் உள்ள, பவுஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கிராமவாசிகள் சென்று வந்தனர். இதைத் தொடர்ந்து, வடக்கு வாயலுாரில் உள்ள துணை சுகாதார நிலையத்தை, தரம் உயர்த்த வேண்டும் என கிராமவாசிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று, கடந்த 2009ம் ஆண்டு, வடக்கு வாயலுாரில், ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்தப்பட்டது. இங்கு, இரு மருத்துவர்கள், மூன்று செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர்.
அவசர அவசரமாக துவக்கப்பட்ட தால், தனியாக கட்டடம் இன்றி, வடக்கு வாயலுார் அரசு உயர்நிலைப் பள்ளியின் ஒரு பகுதி, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒதுக்கப்பட்டது. பழைய கட்டடம் என்பதால், ஆய்வகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும், மருந்துகள் சேமிக்கவும் போதிய இடம் இல்லை.
நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள் தங்குவதற்கு குடியிருப்பும் ஏற்படுத்தித் தரவில்லை. இரு மருத்துவர்கள் இருப்பினும், ஒருவர் மட்டுமே விருப்பம்போல் வந்து செல்கிறார். இப்பிரச்னையால், நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்கவில்லை என்ற புகார் உள்ளது.
ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில், இரவல் கட்டடத்தில், குறுகிய இடத்தில், ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இது ஒருபுறமிருக்க, ஆரம்ப சுகாதார நிலையம் துவக்கப்பட்டபோது, இப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியாக இருந்தது. கடந்த 2011ம் ஆண்டு, இது உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது, பள்ளியில் 170 பேர் படிக்கின்றனர்.
நடுநிலைப் பள்ளியாக இருந்தபோது, இரு வகுப்புகள் உள்ள பழைய கட்டடம், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒதுக்கப்பட்டதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகினர். தரம் உயர்த்தப்பட்ட நிலையில், கூடுதல் வகுப்பறைகளும் கட்டப்படவில்லை. ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வழங்கப்பட்ட வகுப்பறைகளும் திரும்ப கிடைக்கவில்லை. இதனால், போதிய இடவசதியின்றி, மாணவ, மாணவியர் தவிக்கின்றனர். தலைமை ஆசிரியருக்கும் அறையின்றி, பழைய ஊராட்சி அலுவலக கட்டடத்தை, பயன்படுத்தி வருகிறார்.
இதுதவிர, மணல் கடத்தல் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்யும் வருவாய் துறையினர், அவற்றை பள்ளி வளாகத்தில் நிறுத்துகின்றனர். இந்த ஆக்கிரமிப்பு இடையூறால், மாணவ, மாணவியர் விளையாட இடமில்லை.
இதுகுறித்து, வட்டார மருத்துவ அலுவலர் கங்காதரன் கூறுகையில், "வனத்துறையின் 1 ஏக்கர் நிலம், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அங்குள்ள தைல மரங்களை வெட்டவும், தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது. மரம் வெட்டியபின், கட்டடம் கட்ட அரசிடம் பரிந்துரைப்போம்" என்றார்.
