ரத்தசோகை நோய் இல்லாத பகுதியான கம்பம்! தேசிய சித்த மருத்துவக் குழு சாதனை
ரத்தசோகை நோய் இல்லாத பகுதியான கம்பம்! தேசிய சித்த மருத்துவக் குழு சாதனை
UPDATED : நவ 15, 2023 12:00 AM
ADDED : நவ 15, 2023 10:14 AM
கம்பம்:
வளரிளம் பருவத்தினரிடையே ரத்த சோகை நோய் அதிகரித்து வருகிறது. இந்த நோயை கண்டறிந்து சரிப்படுத்த சென்னையில் உள்ள தேசிய சித்த ஆராய்ச்சி மையம் நாடு முழுவதும் பகுதிவாரியாக ஆய்வு நடத்தி ரத்த சோகையினை போக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இந்த அடிப்படையில் கடந்த 16 மாதங்களுக்கு முன்பு கம்பத்தில் திட்டத்தை தேசிய சித்த ஆராய்ச்சி மைய இயக்குநர் மீனாகுமாரி துவக்கி வைத்தார். மொத்தம் 3 ஆண்டுகளுக்கு சர்வே நடத்த முடிவு செய்து முதல் 16 மாதங்கள் கம்பம் பள்ளத்தாக்கிலும், அடுத்த 16 மாதங்கள் மேலூர் பகுதியிலும் நடத்த முடிவு செய்யப்பட்டது. கம்பம் பள்ளத்தாக்கில் மொத்தம் 16 ஆயிரம் மாணவ, மாணவிகளிடம் ரத்த பரிசோதனை மூலம் ரத்த சோகை நோய் உள்ளதா என்பதை பார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.இந்த பணிகள் தொடர்பாக மருத்துவக் குழுவினர் கூறுகையில், 100 மில்லி ரத்தத்தில் 12 முதல் 16 கிராம் ஹீமோகுளோபின் இருக்க வேண்டும். 12 க்கு குறைந்தால் ரத்த சோகை உள்ளது உறுதியாகும். பின்னர் பாதிப்பு உள்ளவர்களுக்கு கரிசாலைலேகியம், அன்னபேதி, கடுக்காய் மாத்திரைகள் தொடர்ந்து வழங்கி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர் சிகிச்சைகள் காரணமாக தற்போது தேசிய சராசரி அளவை விட குறைந்து ரத்தசோகை நோய் இல்லாத பகுதியாக கம்பம் பள்ளத்தாக்கு மாறியுள்ளது என்றனர். 16 மாதங்களில் திட்டம் நிறைவடைந்ததால், தற்போது மதுரை மவட்டம் மேலூரில் திட்டப்பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மாரியப்பன் தலைமையில் சித்தா டாக்டர சிராசுதீன், ராஜமஞ்சரி, திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் இளஞ்சேகரன், அன்பரசன் ஆகியோர் மேற்கொண்டனர்.
