UPDATED : நவ 15, 2023 12:00 AM
ADDED : நவ 15, 2023 10:07 AM
மதுரை:
மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் நர்ஸ்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் ஏற்படும் சேவை குறைபாட்டால் நோயாளிகள் அதிருப்தி அடைகின்றனர்.மதுரை அரசு பழைய மருத்துவமனை, தீவிர விபத்து பிரிவு, சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை மற்றும் தோப்பூர் காசநோய் மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக 2,864 பேரும், தினமும் 6000 முதல் 7000 பேர் புறநோயாளியாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.தினமும் 750 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர். 80 முதல் 90 பெரிய அறுவை சிகிச்சைகளும், 25 அவசர சிகிச்சைகளும் செய்யப்படுகின்றன. 40 முதல் 50 சுகப்பிரசவம், அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகள் பிறக்கின்றனர். இவ்வளவு நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நர்ஸ்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்க வேண்டும்.அரசு மருத்துவக் கல்லுாரியையும் சேர்த்து மொத்தம் 2400 பணியிடங்கள் உள்ளன. தற்போது நான்கில் ஒரு பங்காக 600 நர்ஸ்களே பணியில் உள்ளனர். மாதந்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஓய்வு பெறுவதால் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.பாரா மெடிக்கல் பயிலும் மாணவிகளைக் கொண்டு நோயாளிகளின் தேவையை ஓரளவு சரிசெய்கின்றனர். இம்மாணவிகள் வாரத்தில் ஒருநாள் வகுப்பறை, ஒருநாள் விடுமுறை என 2 நாட்கள் வராத போது நர்ஸ்கள் மட்டுமே பணி செய்ய வேண்டியுள்ளது. தீவிர விபத்து பிரிவில் ஒரு நோயாளிக்கு ஒரு நர்ஸ் வீதம் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். ஆனால் யூனிட்டுக்கே 2 அல்லது 3 நர்ஸ்கள் தான் உள்ளனர்.அறுவை சிகிச்சை, அறுவை சிகிச்சைக்கு பிந்தைய வார்டு, தீவிர விபத்து பிரிவுகளில் ஓரளவு நர்ஸ்களை பணியமர்த்தி, மீதி வார்டுகளில் எண்ணிக்கையை குறைந்தளவு வைத்துள்ளனர். சில நேரங்களில் 30 நோயாளிகளுக்கு ஒரு நர்ஸ் என வேலை பார்க்கும் போது நோயாளிகளுக்கான சேவையில் குறைபாடும், அதிருப்தியும் அரசு மருத்துவமனையின் மீது அவநம்பிக்கையும் ஏற்பட்டு தனியார் மருத்துவமனைக்கு இடமாறுகின்றனர்.நர்ஸ்கள் மட்டுமின்றி உதவி பேராசிரியர்கள், லேப் டெக்னீசியன்கள், சுகாதாரப் பணியாளர்கள், நர்சிங் உதவியாளர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது. சென்னைக்கு அடுத்து 2வது பெரிய மருத்துவமனையான மதுரையில் சேவை குறைபாட்டை தவிர்க்க நர்ஸ்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.
