குழந்தைகளின் கல்வி தேவைகளை புரிந்துகொள்ள பெற்றோருக்கு புத்தகம்: கேரள அரசு புதிய முயற்சி
குழந்தைகளின் கல்வி தேவைகளை புரிந்துகொள்ள பெற்றோருக்கு புத்தகம்: கேரள அரசு புதிய முயற்சி
UPDATED : அக் 19, 2024 12:00 AM
ADDED : அக் 19, 2024 03:42 PM

கண்ணுார்:
கேரளாவில், கல்வித் துறையில் புதுமையான முயற்சியாக, மாணவர்களின் கல்வி தேவைகளை பெற்றோர் புரிந்து கொள்ளும் வகையில், நான்கு புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளன.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு பள்ளிக்கல்வித் துறை சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோருக்காக, நான்கு புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
அவை மழலையர் வகுப்பு, ஆரம்ப வகுப்பு, இடைநிலை வகுப்பு மற்றும் உயர்நிலை, மேல்நிலை வகுப்பு மாணவர்களின் பெற்றோருக்கு வழங்கப்பட உள்ளன. இந்த புத்தகங்களை, கண்ணுார் மாவட்டம் இ.எம்.எஸ்., நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், கேரள மாநில பள்ளி கல்வி அமைச்சர் சிவன்குட்டி நேற்று வெளியிட்டார்.
பின், இந்த திட்டம் குறித்து அவர் பேசியதாவது:
கேரளா மாடலில் இருந்து நாட்டிற்கு அறிமுகப்படுத்தும் மற்றொரு முன் மாதிரியான திட்டம் தான், பெற்றோருக்கான இந்த புத்தகங்கள். கேரளாவில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மழலையர் வகுப்பு முதல் மேல்நிலை வகுப்பு வரையிலான மாணவர்களின் பெற்றோருக்காக இவை தயாரிக்கப்பட்டுள்ளன.
வளரும் குழந்தையுடன் பெற்றோர் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் புத்தகங்கள், பள்ளிகள் மற்றும் குழந்தைகளுடன் பெற்றோரின் ஒத்துழைப்பை வலுப்படுத்தும். ஒவ்வொரு வகுப்பு மாணவர்களின் பெற்றோருக்கு என, தனித்தனி புத்தகங்கள் தயார் செய்யப்பட்டுஉள்ளன.
இதில், மாணவர்களின் வயதுக்கேற்ப அவர்களை பெற்றோர் எப்படி அணுக வேண்டும் என்பதற்கான துல்லியமான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பிள்ளைகளுக்கு என்ன ஆதரவு மற்றும் கவனிப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பதையும் இந்த புத்தகங்கள் விவரிக்கின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.