அலட்டல் வேண்டாம்; அன்பாக நடந்து கொள்ளுங்கள் ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதல்வர் அறிவுரை
அலட்டல் வேண்டாம்; அன்பாக நடந்து கொள்ளுங்கள் ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதல்வர் அறிவுரை
UPDATED : மார் 12, 2026 03:08 PM
ADDED : மார் 12, 2026 03:10 PM

சென்னை:
“அதிகாரிகள் என்றால் அலட்டலாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சாதாரண மக்களிடம் கூட, அன்பாக, பண்பாக நடந்து கொள்ள வேண்டும்,” என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எனும், யு.பி.எஸ்.சி., நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வில், தமிழகத்தை சேர்ந்த 60 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், தமிழக அரசின், 'நான் முதல்வன்' திட்டத்தில் பயிற்சி பெற்ற, 56 பேர் பயனடைந்துள்ளனர்.
இவர்களுக்கான பாராட்டு விழா, சென்னை விக்டோரியா அரங்கில் நேற்று நடந்தது.
பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
உலகளவிலேயே மிகவும் கடினமான தேர்வென்று, யு.பி.எஸ்.சி., தேர்வை தான் சொல்வர். அப்படிப்பட்ட தேர்வை, சிலர் முதல் முயற்சியிலேயே வென்றிருப்பர்; சிலர் முயற்சி செய்து சாதித்திருப்பர்.
சில ஆண்டுகளுக்கு முன், என்ன நிலை இருந்தது என்று அனைவருக்கும் தெரியும். தமிழகத்தில் இருந்து யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது.
தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், இதை சரி செய்ய பல்வேறு முயற்சிகளை எடுத்தோம். 'நான் முதல்வன்' ஊக்கத் தொகை, உயர் பயிற்சி, நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள சிறப்பு பயிற்சி என, பல்வேறு முன்னெடுப்புகளை, தி.மு.க., அரசு எடுத்தது.
அதன் காரணமாக நல்ல பலன் கிடைத்து வருகிறது. சிவில் சர்வீசஸ் தேர்வில், நான் முதல்வன் திட்டத்தால், 56 பேர் பயனடைந்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை இன்னும் உயர வேண்டும். பொதுவாக, ஆட்சியாளர்களாக இருக்க கூடிய நாங்கள், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலை சந்தித்து, மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும்.
ஆனால், யு.பி,எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற்று, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற பொறுப்புகளில் அமரும் உங்களுக்கு, அப்படிப்பட்ட தேவை அமையவில்லை. 30 ஆண்டுகளுக்கு மேலாக, தொடர்ந்து பணி செய்யும் வாய்ப்பு இருக்கிறது.
அதிகாரிகள் என்றால், அலட்டலாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சாதாரண மக்களிடம் கூட, அன்பாக, பண்பாக நடந்து கொள்ள வேண்டும். இனி உங்கள் வாழ்க்கை பிஸியானதாக மாறி விடும். உங்கள் கனவு நிறைவேறிவிட்டது; இனி, மக்களின் கனவை நிறைவேற்ற புறப்படுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் கயல்விழி, சேகர்பாபு, தலைமைச் செயலர் முருகானந்தம் பங்கேற்றனர்.

