மத்திய அரசு ஊழியர் குழந்தைகள் சேர்க்கை கே.வி., பள்ளிகளில் குறைந்து வருவது ஏன்?
மத்திய அரசு ஊழியர் குழந்தைகள் சேர்க்கை கே.வி., பள்ளிகளில் குறைந்து வருவது ஏன்?
UPDATED : ஏப் 22, 2026 12:09 PM
ADDED : ஏப் 22, 2026 12:12 PM

மத்திய கல்வி அமைச்சகம் நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மத்திய அரசு பணியாளர்களின் குழந்தைகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ், கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகள் இயங்குகின்றன. மத்திய அரசு ஊழியர்கள், நாடு முழுதும் அடிக்கடி இடமாறுதல் செய்யப்பட்ட சூழலில், குழந்தைகளின் படிப்பை காரணம் காட்டி, இடமாறுதலுக்கு மறுப்பு தெரிவித்தனர். இதை தவிர்க்கும் வகையில், மத்திய கல்வி அமைச்சகத்தின் சார்பில், கடந்த 1960களில் நாடு முழுதும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் திறக்கப்பட்டன.
கட்டாய கல்வி
இவற்றில், மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு மட்டும் சேர்க்கை அளிக்கப்பட்ட நிலையில், பின், மாநில அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கும் இடமளிக்கப்பட்டது. பின், மத்திய அரசு அதிகாரிகளின் பரிந்துரையுடன், வெளி நபர்களின் குழந்தைகளுக்கும் இடம் அளிக்கப்பட்டது.
கட்டாய கல்வி உரிமை சட்டம் அமலான பின், பள்ளிகளின் அருகில் வசிக்கும் ஏழை, நடுத்தர வசதி படைத்தோரின் குழந்தைகளுக்கும் இடங்கள் வழங்கப்பட்டன. துவக்கத்தில், 100 சதவீதமாகவும், பின், 70 சதவீதமாகவும் இருந்த மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான சேர்க்கை தற்போது, 25 சதவீதமாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதே சமயம், ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளில், 85 முதல் 95 சதவீதம் வரை தேர்ச்சி பெறும் பள்ளிகளாகவும் இவை உள்ளன. இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்கள், தங்கள் குழந்தைகள் சேர்ப்பதை படிப்படியாக குறைத்து வருகின்றனர்.
உள்கட்டமைப்பு
முன்பெல்லாம் ஒரு வகுப்பிற்கு, 60 மாணவர்கள் வரை சேர்க்கப்பட்ட நிலையில் தற்போது, 40 மாணவர்கள் வரை மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். இந்நிலையில், பல நகரங்களில் உள்ள கே.வி., பள்ளிகளில், மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளின் எண்ணிக்கை, 30 சதவீதம் வரை மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து, கே.வி., பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
நாட்டில் உள்ள, 1,289 கே.வி., பள்ளிகளில், 50,456 ஆசிரியர்களும், 6,354 பணியாளர்களும் உள்ளனர். இவற்றில், 13.62 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளிகளின் நிர்வாகத்திற்காக, கடந்த 10 ஆண்டுகளில், 5,862 கோடி ரூபாய் நிதியை, மத்திய அரசு செலவிட்டுள்ளது.
இந்த பள்ளிகள் தொடங்கப்பட்ட காலத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு உரிய தனியார் பள்ளிகள் இல்லாத நிலை இருந்தது. தற்போது, அனைத்து நகரங்களிலும், தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உள்ளன. அவற்றில், கே.வி., பள்ளிகளை விட, சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் திறமையான பல ஆசிரியர்கள் உள்ளனர்.
மேலும், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் நாடு முழுதும் உள்ளன. பல பள்ளிகளில் உண்டு உறைவிட வசதி உள்ளது. அதனால், பெற்றோரின் இடமாறுதலால் பாதிக்கப்படாத வகையில், அந்த பள்ளிகளில் சேர்த்து விடுகின்றனர். இது போன்ற காரணங்களால், மத்திய அரசு ஊழியர்களின் சேர்க்கை குறைந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

