கட்டுமான துறையில் புதுமை; டி.ஆர்.ஏ., - ஸ்லேட் ஏ.ஐ., நிறுவனங்கள் ஒப்பந்தம்
கட்டுமான துறையில் புதுமை; டி.ஆர்.ஏ., - ஸ்லேட் ஏ.ஐ., நிறுவனங்கள் ஒப்பந்தம்
UPDATED : ஏப் 29, 2026 10:01 AM
ADDED : ஏப் 29, 2026 10:02 AM
சென்னை:
கட்டுமானத்தில் புதுமை மற்றும் தரம் மேம்பாட்டிற்காக டி.ஆர்.ஏ., நிறுவனம், கலிபோர்னியாவைச் சேர்ந்த ஸ்லேட் ஏ.ஐ., நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ரியல் எஸ்டேட், கட்டுமான துறையில் வாடிக்கையாளர்களுக்கு முக்கியத்துவம் அளித்து, புதுமைகளை புகுத்துவதில் டி.ஆர்.ஏ., நிறுவனம் முன்னணியில் உள்ளது.
இந்நிறுவனம் அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த 'ஸ்லேட் டெக்னாலஜிஸ் இன்க்' நிறுவனத்துடன் இணைந்து ஒரு முக்கிய ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது.
இதன்படி, டி.ஆர்.ஏ., நிறுவனத்தின் கட்டுமான திட்டங்களில், ஸ்லேட் ஏ.ஐ., தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.
இத்தகைய புதிய தொழில்நுட்பத்தை, இந்தியாவில் பயன்படுத்தும் முதல் நிறுவனமாக, டி.ஆர்.ஏ., பெருமை கொள்கிறது.
கட்டுமான பணிகள் பெரிதாகவும், சிக்கலாகவும் மாறி வரும் சூழலில், பழைய முறைகளுக்கு மாற்றாக ஏ.ஐ., போன்ற புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள டி.ஆர்.ஏ., நிறுவனத்தின் திட்டங்களில், 33 லட்சம் சதுரடி கட்டுமான பணிகளில், 2,000க்கு மேற்பட்ட பணியாளர்கள், 100க்கு மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு இது தற்போது உதவுகிறது.
இது குறித்து டி.ஆர்.ஏ., நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரஞ்சித் ரத்தோர் கூறுகையில், “ஸ்லேட் நிறுவனத்துடனான இந்த கூட்டணியை இந்திய ரியல் எஸ்டேட் துறையில் புதிய துவக்கமாக இதை பார்க்கிறோம்.
தொழில்நுட்பம், பல்வேறு மொழிகளில் தொடர்பு கொள்ளும் வசதி, முன்கூட்டியே கணிக்கும் திறன் மற்றும் திட்டத்தை சரியாக செயல்படுத்த இது பெரிய உதவியாக இருக்கும்,” என்றார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

