போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி முகாம்; அரசுப்பணி கனவை நனவாக்கும் மனித நேயம்
போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி முகாம்; அரசுப்பணி கனவை நனவாக்கும் மனித நேயம்
UPDATED : ஏப் 29, 2026 06:01 PM
ADDED : ஏப் 29, 2026 06:03 PM
திருப்பூர்:
திருப்பூரில் உள்ள ஆர்.வி.குமாரசாமி கல்யாண மண்டப கல்வி அறக்கட்டளை சார்பில், சைதை துரைசாமியின் மனித நேய அறக்கட்டளை வாயிலாக, அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு முற்றிலும் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.
ஆர்.வி.குமாரசாமி கல்யாண மண்டப கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணகுமார் கூறியதாவது:
சைதை துரைசாமியின் மனித நேய அறக்கட்டளை பயிற்சி மையம் நடத்த ஆர்.வி.குமாரசாமி கல்யாண மண்டப கல்வி அறக்கட்டளைக்கு அனுமதி கிடைத்துள்ளது. இப்பயிற்சி மையத்தில் இணைந்து அரசுப் பணிக்கான போட்டி தேர்வுக்கு முற்றிலும் இலவசமாக பயிற்சி பெற தகுதியுள்ளவர்களை தேர்வு செய்யும் பொருட்டு, திறனறி தேர்வு நடத்தப்பட இருக்கிறது.
இதில், தமிழக வரலாறு, புவியியல் மற்றும் நிர்வாகம் தொடர்பான, 75 கேள்விகள்; மனத்திறன் மற்றும் நுண்ணறிவு சார்ந்து, 25 கேள்விகள் என, 100 கேள்விகள் கேட்கப்படும்.
திறனறி தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்படும், 100 சிறந்த மாணவர்களுக்கு மாதம், 1,000 ரூபாய் கல்வி உதவித்தொகையுடன், அரசுப்பணிக்கான டி.என்.பி.எஸ்.சி குரூப் 1, 2, 2A, மற்றும் குரூப் 4 ஆகிய தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு 'பேட்ச்'க்கும், 6 மாதம் பயிற்சி வழங்கப்படும்.
நேரடி வகுப்பு மட்டுமின்றி, சென்னை 'மனிதநேய' அறக்கட்டளை நிபுணர்களின் 'ஆன்லைன்' வகுப்புகளும் ஒருங்கிணைக்கப்படும். மாணவர்களுக்கு தேவையான பாடக்குறிப்புகள் 'டிஜிட்டல்' வடிவில் வழங்கப்படும். இதன் மூலம், நேரடி வகுப்பில் பங்கேற்க முடியாத மற்றும் இல்லத்தரசிகள் போட்டி தேர்வுக்கான பயிற்சி பெற முடியும்.
பயிற்சியில் சேர விருப்பமுள்ள, 10, 12 மற்றும் வகுப்பு முடித்த மாணவர்கள், 97500 55322 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். திருப்பூரில் கல்விப் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில், கட்டணம் வசூலிக்காமல் இத்தகைய உயர்தர பயிற்சியை வழங்க உள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

