நாடு முழுவதும் டாக்டர்களுக்கு தனித்துவ அடையாள எண்: புதிய வரைவு விதிகள் வெளியீடு
நாடு முழுவதும் டாக்டர்களுக்கு தனித்துவ அடையாள எண்: புதிய வரைவு விதிகள் வெளியீடு
UPDATED : ஆக 19, 2026 07:34 PM
ADDED : ஆக 19, 2026 07:34 PM
சென்னை:
நாடு முழுதும் டாக்டர்களுக்கான தனித்துவ அடையாள எண் வழங்கும் புதிய வரைவு விதிகளை, தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது.
தேசிய மருத்துவ ஆணையம், 'டாக்டர்கள் பதிவு மற்றும் மருத்துவ உரிம திருத்த விதிமுறைகள் - 2026' வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
மாநில மருத்துவ கவுன்சிலில், ஒரு டாக்டர் பதிவு செய்ததும், தேசிய மருத்துவ ஆணையத்தின் நெறிசார் வாரியம் வாயிலாக, அவருக்கு தனித்துவ அடையாள எண் உருவாக்கப்படும். இந்த எண் வழங்கப்பட்ட பின், அந்த டாக்டர், நாட்டின் எந்தவொரு மாநிலத்திலோ அல்லது யூனியன் பிரதேசத்திலோ, தனியாக மீண்டும் பதிவு செய்ய தேவையில்லை. இந்தியா முழுவதும் மருத்துவ பயிற்சி மற்றும் சேவை செய்ய முடியும்.
மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் குறியீடு, மாநில மருத்துவ கவுன்சில் பதிவு எண் ஆகியவை உள்ளடங்கியிருக்கும் வகையில், அந்த தனித்துவ அடையாள எண் வழங்கப்படும். தற்போதுள்ள நடைமுறையின்படி, மாநில மருத்துவ கவுன்சில்களுக்கும், தேசிய அளவிலான தரவு தளத்துக்கும் இடையே, நேரடி ஒருங்கிணைப்பு இல்லாததால், ஒரு மாநிலத்தில் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகும் டாக்டர், வேறு மாநிலத்தில் மருத்துவ பயிற்சி செய்வதை கண்காணிப்பது கடினமாக உள்ளது.
இந்த தனித்துவ அடையாள எண் முறை வாயிலாக, ஒரு டாக்டருக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளை, இனி மாநில பதிவேட்டிலும், தேசிய பதிவேட்டிலும், உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
