பின்னலாடை தொழில் மேம்பாட்டுக்கு வளர்ச்சி; வளர்ச்சிக்கு வித்திடும் நிட்டெக் - 2026 கண்காட்சி
பின்னலாடை தொழில் மேம்பாட்டுக்கு வளர்ச்சி; வளர்ச்சிக்கு வித்திடும் நிட்டெக் - 2026 கண்காட்சி
UPDATED : மார் 07, 2026 11:27 AM
ADDED : மார் 07, 2026 11:32 AM
திருப்பூர்:
ஐரோப்பா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உருவாகியுள்ள நிலையில், அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வித்திடும் வகையில், திருப்பூரில் 'நிட்டெக் - 2026' கண்காட்சி நடத்தப்படுவதாக, பின்னலாடை தொழில்துறையினர் வரவேற்றுள்ளனர்.
நிரந்தர கண்காட்சி வளாகம்
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன்:
'நிட்டெக் - 2026' கண்காட்சி, திருப்பூரின் எதிர்கால வளர்ச்சிக்கு வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளது. பின்னலாடை ஏற்றுமதியை பொறுத்த வரை, அடுத்த மூன்று ஆண்டுகளில், இருமடங்காக உயரும்; அதாவது, 2030ம் ஆண்டில், ஏறத்தாழ ஒரு லட்சம் கோடி ரூபாய் என்ற இலக்கை நெருங்கும். உடனுக்குடன் 'அப்டேட்' ஆகும் புதிய தொழில்நுட்ப இயந்திரங்களை திருப்பூரில் அணிவகுக்க செய்ததன் மூலமாக, தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில் அனைத்து பிரிவினரும் பயன்பெறும்; வெகுவிரைவில், திருப்பூரில் நிரந்தர கண்காட்சி வளாகம் அமைத்து, அடுத்த கண்காட்சி அங்கு நடைபெற வேண்டும்.
அரசு மானிய உதவி
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சண்முகசுந்தரம்:
ஒட்டுமொத்த பின்னலாடை தொழிலுக்கு தேவையான, அதிநவீன இயந்திரங்கள் அணிவகுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உருவாகியுள்ள இந்நேரத்தில், 'நிட்டெக்' கண்காட்சியில், புதுவகை மெஷின்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன; குறிப்பாக, அரசு மானிய உதவியும் பெற்றுத்தரப்படும் என்கின்றனர். திருப்பூர் வளர்ச்சிக்கும், பனியன் தொழில் வளர்ச்சிக்கும், இக்கண்காட்சி உதவியாக இருக்கும்.
அதிநவீன இயந்திரங்கள்
திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன்:
திருப்பூர் சாய ஆலைகளில் பயன்படுத்த, கடந்த காலங்களில் நவீன இயந்திரங்களை, 'நிட்டெக்' கண்காட்சி கொண்டு வந்தது. அப்போது, 1:15 என்ற விகித்தில் இயங்கும் இயந்திரங்களை கொண்டு வந்து அறிமுகம் செய்தனர். அதே 'நிட்டெக்' கண்காட்சியில், ஒரு பங்கு துணிக்கு, மூன்று பங்கு தண்ணீர் என்ற வகையில், 1:3 என்ற விகிதத்தில் புதிய சாய இயந்திரங்களை கொண்டு வந்துள்ளனர். அனைத்து நாடுகளில் இருந்தும், அதிநவீன இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.
அடுத்த கட்ட வளர்ச்சி
பின்னலாடை துணி உற்பத்தியாளர்கள் சங்க (நிட்மா) தலைவர் ரத்தினசாமி:
கடந்த, 1993ல், திருப்பூரில் 'நிட்டெக்' கண்காட்சி முதன் முதலாக நடந்தது; திருப்பூரில் சரித்திரத்தில் அக்கண்காட்சி தான் முதல் கண்காட்சி. தற்போது, 18வது கண்காட்சி துவங்கியுள்ளது மகிழ்ச்சி; 18 வயது என்றாலே 'மேஜர்' என்று தான் அர்த்தம். இனிமேல், சர்வதேச தரத்துடன் கண்காட்சியை நடத்த வாழ்த்துக்கள்.
கடந்த, 20 ஆண்டுகளாக, தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்பார்த்தோம்; தற்போது கைகூடியுள்ளது; 37 நாடுகளின் ஒப்பந்தம் உருவாகியுள்ளது. பல்வேறு நெருக்கடிகள் உருவானாலும், ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல், தொழில்துறையை சரியாக வழிநடத்தி வருகிறார். தொழிலின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு 'நிட்டெக்' மிகவும் கைகொடுக்கும்.
'ஏ.ஐ.,' தொழில் நுட்பம்
திருப்பூர் நிட்பிரின்டர்ஸ் அசோசியேஷன் (டெக்பா) தலைவர் ஸ்ரீகாந்த்:
'நிட்டெக்' கண்காட்சி, 33 ஆண்டுகளாக திருப்பூரில் நடந்து வருகிறது. கடந்த வாரம் டில்லி சென்றிருந்த போது, உற்பத்தி தரம் குறித்த வழிகாட்டுதல் வழங்கப்பட்டது; அது, இக்கண்காட்சியில் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. உலக தரத்துடன் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு இயந்திரங்கள் வந்த நிலைமாறி, கோவையிலேயே, பிரின்டிங் மெஷின் உற்பத்தியாகிறது; ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. பிரின்டிங் 'ஏஐ' தொழில்நுட்பம் கூடுதலாக நிறுவப்பட்டுள்ளது; பிரின்டிங் செய்ததும், உடனடியாக, 'டிடெக்டிவ்' செய்யும் வசதி வந்துள்ளது. பிரின்டிங் நிறுவனங்கள், இக்கண்காட்சியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இதுவே, சரியான தருணம்
திருப்பூர் தொழில் கூட்டமைப்பு (டிப்) தலைவர் மணி:
ஐரோப்பா, பிரிட்டன் போன்ற முக்கிய நாடுகளுடன், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உருவாகியுள்ள நிலையில், முதன்முறையாக, 'நிட்டெக் - 2026' என்ற கண்காட்சி நடத்தப்படுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அடுத்தகட்ட நகர்வுக்கு திருப்பூர் தயாராகி கொண்டிருக்கிறது. தொழில்துறையினரும், அடுத்தகட்ட முதலீடு செய்ய தயாராகிவிட்டனர். இந்நிலையில், சரியான தருணத்தில், 'நிட்டெக்' கண்காட்சி நடத்தப்படுகிறது. இதன் வாயிலாக, திருப்பூரும் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தயாராகும்.
'ஊசி முதல் பேக்கிங் வரை'
'நிட்டெக் -2026' கண்காட்சியின் தலைவர் ராயப்பன்:
இந்தியாவிலேயே, பின்னலாடை தொழிலுக்காக பிரத்யேகமாக நடக்கும், 'நிட்டெக்' கண்காட்சியால், பெண் தொழில்முனைவோர், இளம் தொழில்முனைவோர் பயன் பெறலாம். திருப்பூரில் புதிய தொழில்நுட்ப இயந்திரங்களை நிறுவ தொழில் துறையினர் தயாராகி வரும் நிலையில், நமது ஊரிலேயே, சர்வதேச அளவில் தயாராகும் இயந்திரங்களை நேரில் பார்த்து வாங்கும் வாய்ப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.
கண்காட்சியில், 'ஊசி முதல் பேக்கிங்' வரை என்று கூறும் வகையில், ஒட்டுமொத்த பனியன் தொழிலுக்கான அனைத்து வகையான இயந்திரம், உபபொருட்கள், உதிரி பாகங்கள், தளவாடங்கள் இடம் பெற்றுள்ளன. திருப்பூரில் உள்ள அனைத்து தொழில் அமைப்புகளும், கண்காட்சியை நேரில் பார்வையிட்டு பயன்பெற வேண்டும்.
