மாணவர் விடுதிக்காக மரங்களை வெட்டுவதா?: தேசிய பசுமை தீர்ப்பாயம் இடைக்கால தடை
மாணவர் விடுதிக்காக மரங்களை வெட்டுவதா?: தேசிய பசுமை தீர்ப்பாயம் இடைக்கால தடை
UPDATED : மார் 23, 2013 12:00 AM
ADDED : மார் 23, 2013 10:01 AM
சென்னை: மாணவர் விடுதிக்காக, கல்லாங்குத்து புறம்போக்கு நிலத்திலுள்ள மரங்களை வெட்ட, தேசிய பசுமை தீர்ப்பாய சென்னை பெஞ்ச், வருவாய்த் துறைக்கு, இடைக்கால தடை விதித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டத்திற்குட்பட்ட முகையூர் கிராமத்திலுள்ள, ஒரு ஏக்கர் கல்லாங்குத்து புறம்போக்கு நிலத்தில், 0.44 சென்ட் நிலத்தில், முப்பத்தைந்து ஆண்டுகளாக, அரசுக்கு ஆயத் தீர்வை மற்றும் அபராத தீர்வை செலுத்தி, திருக்கோவிலூர், கீழையூர் கிராமத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி, அனுபவித்து வருகிறார். அந்த நிலத்தில், அவர் உருவாக்கியுள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட தென்னை, மா, கொய்யா போன்ற பலன் தரும் மரங்களை, மாணவர் விடுதி கட்டுவதற்காக, மாவட்ட வருவாய் துறை வெட்ட முடிவெடுத்து, மரங்கள் உள்ள பகுதியில், கடந்த, 12 ம் தேதி அளவு செய்து, குறியீடு செய்துள்ளது.
இதை எதிர்த்து, தட்சிணாமூர்த்தி, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின், சென்னை பெஞ்சில் மனு தாக்கல் செய்தார். அதில், "மாணவர் விடுதி கட்டுவதற்கு, மரங்களற்ற புறம்போக்கு நிலம் இருந்தும், பசுமையையும், குளிர்ச்சியையும் தரும் மரங்களை வெட்டினால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். எனவே, மாவட்ட வருவாய்த் துறை, மரங்களை வெட்ட தடை விதிக்க வேண்டும்" என, குறிப்பிட்டிருந்தார்.
அந்த மனு குறித்து, தீர்ப்பாய சென்னை பெஞ்சில், நேற்று நடந்த விசாரணையில், தீர்ப்பாய நீதிபதி சொக்கலிங்கம், உறுப்பினர் பேராசிரியர் நாகேந்திரன் ஆகியோர், மாணவர் விடுதிக்காக, கல்லாங்குத்து புறம்போக்கு நிலத்திலுள்ள மரங்களை வெட்ட, இடைக்கால தடை விதித்ததோடு, இதுகுறித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், வருவாய் துறை அதிகாரி, திருக்கோவிலூர் வட்டாட்சியர் ஆகியோர், பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை, அடுத்த மாதம், 22 ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
