நரிக்குறவர் துவக்கப் பள்ளியில் மாணவர்கள் வருகை இல்லை: கல்வித்துறையின் நடவடிக்கை தேவை
நரிக்குறவர் துவக்கப் பள்ளியில் மாணவர்கள் வருகை இல்லை: கல்வித்துறையின் நடவடிக்கை தேவை
UPDATED : ஏப் 02, 2013 12:00 AM
ADDED : மே 16, 2013 11:34 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் நரிக்குறவர் காலனி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவர்கள் வராமல் ஆசிரியர்கள் மட்டும் பணி புரியும் நிலையை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் கிராமத்தில் நரிக்குறவர் காலனி உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ளவர்களின் குழந்தைகள் படிக்க ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி உள்ளது. இங்கு 1ம் வகுப்பில் 7 பேர், 2ம் வகுப்பில் 7 பேர், 3ம் வகுப்பில் 21பேர், 4ம் வகுப்பில் 4பேர், 5ம் வகுப்பில் 9 பேர் என 25 மாணவர்கள், 23 மாணவிகள் உட்பட 48 பேர் படிக்கின்றனர்.
ஒரு தலைமை ஆசிரியை, ஒரு உதவி ஆசிரியை, ஒரு சமையலர் உட்பட 3 பேர் பணி புரிகின்றனர். இரண்டு வகுப்பறை கட்டடங்கள் உள்ளன. புதிய வகுப்பறை கட்டடம் , சமையல் கூடம் கட்டவும் நிதி ஒதுக்கப்பட்டு விரைவில் பணி துவங்க உள்ளது. பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக மதிய உணவு வழங்கப்படுகிறது. மாணவர்கள் விளையாட பொருட்கள், கல்வி உபகரணங்கள் பள்ளியில் உள்ளன.
இங்குள்ள மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சரி வர வருவதில்லை. சில நாட்களில் காலையில் வந்து, சிறிது நேரத்தில் சென்று விடுகின்றனர். அதிக வயதுள்ள மாணவர்கள் சிலர் ஊசி, மணி விற்கச் செல்கின்றனர். மாணவர்களுக்கு கட்டாயமாக மதிய உணவு சமைத்து தருகின்றனர். மதிய உணவு நேரத்தில் மட்டும் பள்ளிக்கு குடும்பத்துடன் வந்து சாப்பிட்டுச் செல்கின்றனர்.
பள்ளி தலைமை ஆசிரியை, உதவி ஆசிரியை ஆகியோர் மாணவ, மாணவிகளின் பெற்றோரை அணுகி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப கூறினாலும் அனுப்பாமல் வீண் வாக்குவாதம் செய்வதாக புகார் உள்ளது.
நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆண்டு தோறும் தமிழக அரசு பல லட்சக்கணக்கில் செலவு செய்கிறது. அவர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் அனுமதிக்காமல் ஊசி & மணி விற்க அனுப்புகின்றனர். இங்குள்ளவர்களின் குழந்தைகள் முழு நேரமும் சென்று படிக்க வழிமுறைகளை ஆய்வு செய்ய வேண்டும்.
இந்த சமுதாயத்தில் நன்றாக படித்தவர்களின் ஒத்துழைப்போடு, இந்த மாணவர்களின் பெற்றோருக்கு தங்கள் குழந்தைகளுக்கு கல்வி அவசியம் தேவை என்ற நிலையை வலியுறுத்த வேண்டும். பள்ளியில் பணிபுரிபவர்கள் முயற்சி மட்டும் போதாது. அதிகாரிகள், தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்களும் இதற்கு பாடுபட வேண்டும்.
